உயர்ந்த உள்ளம்!

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், நாச்சியார்பட்டி, நா.கி.நடுநிலைப் பள்ளியில், 1985ல், 8ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியராக வெங்கிடசாமி இருந்தார்.

கிராமப்புற மாணவர்களிடம் பரிவும் அன்பும் மிக்கவர்.

விவசாய வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம், படிக்கும் சிறுவர்களை தோட்ட வேலைக்கு அனுப்பி விடுவர் பெற்றோர்.

அரையாண்டுத் தேர்வின் போது, என்னையும் தோட்ட வேலைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையறிந்த வகுப்பாசிரியர், சைக்கிளில் காடுமேடுகளை கடந்து, 3 கி.மீ., துாரத்தில் நான் வேலை செய்துகொண்டிருந்த தோட்டத்திற்கே வந்து விட்டார்.

கல்வியின் அவசியத்தை பெற்றோரிடம் எடுத்துக் கூறி, என்னை அழைத்து வந்து, தேர்வு எழுத செய்தார். அந்த செயல், அவர் மீதான மதிப்பை உயர்த்தியது.

இப்போது என் வயது, 46; அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். அந்த ஆசிரியர் மறைந்து விட்டாலும், என் நெஞ்சில் நிலைத்திருக்கிறார்.

-–- பா.ஜெயக்குமார், விருதுநகர்.