இரவல் ஒளியில்...

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020

கோவில்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில், 2002ல், 9ம் வகுப்பு படித்த போது, குடும்பத்தில் வறுமை நிலவியது. வீட்டில் மின்சாரம் கிடையாது. பக்கத்து வீட்டு விளக்கு ஒளியில் தான் படிப்பேன்.

ஒரு நாள், வீட்டுப் பாடம் கொடுத்திருந்தார் வகுப்பு ஆசிரியர். நான் முறையாக முடித்திருந்தேன். முடிக்காதோர் வரிசையில் என் பக்கத்து வீட்டு தோழியும் இருந்தாள். அவளுக்கு அடி கிடைத்தது.

அவள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். அவள் வீட்டில் தினமும் மாலை, 6:00 மணிக்கு வெளி விளக்கை ஒளிர விடுவர். அந்த வெளிச்சத்தில் தான் படித்து வந்தேன்.

மறு நாள், விளக்கை போட்டதும் ஓடி வந்து அணைத்தாள் என் தோழி.

விளக்கம் கேட்ட அவள் அம்மாவிடம், 'நம் வீட்டு வெளிச்சத்தில் படித்து, ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்குகிறாள்...' என்று, கோபத்தில் என்னை சுட்டிக்காட்டினாள்.

'இது தான் பிரச்னையா...' என்றவர், 'நீயும் அவளுடன் சேர்ந்துப் படி...' என்று கண்டிப்புடன் அறிவுரைத்தார்.

நட்புடன் சேர்ந்து படித்து, பரிசு, பாராட்டுகளை குவித்தோம்.

இப்போது, 31 வயதாகிறது; சிறப்பாக வாழ்கிறேன். அந்த நிகழ்வு, இன்றும் மனக்கண்ணில் இருந்து மறைய மறுக்கிறது.

-–-- எம்.முத்துலட்சுமி, விருதுநகர்.