பொறாமை புத்தி!

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020

பாட புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான் முகிலன். அவனிடம் வந்த மதன், 'மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி ஒன்றை காந்தி மன்றத்தில் நடத்துறாங்க; எழுதுறதுக்கு, தாள் அங்கேயே கொடுப்பாங்க; ஆனா... எங்கிட்ட பேனா இல்ல... உன்னுடையதை தந்து உதவுறீயா...' என, இரவலாக கேட்டான்.

'நிறம் காக்கா, உடம்பு ஓணான், மூக்கு கிளி, முகம் முட்டை, சோத்துக்கு லாட்டரி... உனக்கு கட்டுரைப் போட்டியில் பங்கேற்க ஆசையா... இரு இரு... உனக்காகவே ஒண்ணு இருக்கு' என்று கறுவி, 'ஒழிடா' என்று மனதில் சபித்தபடியே, ஒரு பேனாவைக் கொடுத்தான்.

பேனாவை வாங்கிப் போனவன் மீது முகிலனுக்கு ஏகப்பட்ட கடுப்பு.

'சோத்துக்கு வழியில்லாத மதன், முதல் மதிப்பெண் வாங்குகிறான். நம்மால் முடியலயே... பணக்கார வீட்டுல பிறந்ததால், நான் நெனெச்ச எல்லாமே கிடைக்குது. ஆனா மதிப்பெண் கிடைக்க மாட்டேங்குதே' என்ற ஆத்திரத்தில், 'நிப்பு உடைந்த பேனா, தாளை கிழித்து நாசமாக்கிவிடும். போட்டியில் எப்படி எழுதி பரிசு வாங்குவேன்னு பார்ப்போம்' என, மகிழ்ந்திருந்தான்.

மாலையில், முகமலர்ச்சியுடன் வந்த மதன், 'நன்றிடா...' என்று, கைகளை குலுக்கி, 'நீ தந்த பேனா சூப்பரா எழுதுச்சு... மத்தவங்களை விட, ரெண்டு பக்கம் கூடுதலா எழுதினேன்...' என பேனாவை, திருப்பிக் கொடுத்தான்.

அத்துடன், கட்டுரை போட்டியில் வென்றதற்கு பரிசாக கிடைத்த பேனாக்களில் ஒன்றையும், அன்புடன் கொடுத்தான்.

அவற்றை, தன் பேனா தாங்கியில் வைக்கப் போன முகிலன், அதிர்ச்சி அடைந்தான்.

மதனுக்கு கொடுத்ததாக நினைத்த நிப்பு உடைந்த பேனா, அங்கேயே இருந்தது. பொறாமையுடன் எடுத்த போது கையில் வந்திருந்தது நல்ல பேனா.

அந்த பேனா தான், புத்திசாலியான மதனுக்கு வெற்றியை தந்தது.

வெட்கப்பட்ட முகிலன், பொறாமை குணத்துக்கு முழுக்குப் போட்டான்.

குழந்தைகளே... இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். தேவைப்படும் நேரத்தில், உங்களுக்கும் உதவி கிடைக்கும்.