உளுந்து வடையும் முரட்டு குரங்கும்!

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020

மலை அடிவாரத்தில் இருந்தது மலையனுார் கிராமம். அங்கு, ராமு தாத்தாவும், சீதா பாட்டியும் குடிசையில் வசித்து வந்தனர்.

தாத்தாவுக்கு, உளுந்து வடை சாப்பிடும் ஆசை வந்தது. 'இன்னைக்கு சுட்டுக்குடேன்...' என்று பாட்டியை கெஞ்சினார்.

'அடே, இந்த மனுஷன் ஆசையா கேக்குறாரே' என்று உருகி, சமையல் அறையில் டப்பாக்களை திறந்து பாத்தார். உளுந்து இல்ல; எண்ணெய் மிக குறைவாக இருந்தது.

பணத்தை கொடுத்து வாங்கி வர கூறினார் பாட்டி.

சுறுசுறுப்பாக பக்கத்து ஊரில் வாங்கி வந்தார் தாத்தா. உளுந்து அரைத்து, மிளகு, சீரகம், உப்பு போட்டு, மாவு தயார் செய்த போதே வாசனை துாக்கியது. வாயில் எச்சில் ஊறியது. விறகு வெட்டும் வேலை நினைவில் வரவே புறப்பட்டார் தாத்தா.

அடுப்பை மூட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றினார் பாட்டி.

அந்த நேரம், முரட்டு குரங்கு ஒன்று, பக்கத்து மாமரத்தில் தாவி, பழம் பறித்துக் கொண்டிருந்தது. வடை வாசனை மூக்கை துளைக்கவே, வீட்டுக்குள் நுழைந்தது.

அதை கண்டு பயந்தார் பாட்டி. செய்வதறியாது நின்றவரிடம், 'வடை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. எல்லாத்தையும் சுட்டு தட்டுல வை; குட்டிங்களுக்கு பழங்களை கொடுத்து திரும்பி வந்து சாப்பிடுறேன். எல்லா வடையும் எனக்கு தான்... ஏமாத்த நெனச்சே, அவ்வளவு தான்...' என, எச்சரித்து புறப்பட்டது குரங்கு.

சற்று நேரத்தில் -

வடை ருசியையே எண்ணியபடியே, சமையல் அறைக்குள் நுழைந்தார் தாத்தா. பதைபதைப்புடன் இருந்த பாட்டியை கண்டு விஷயத்தை அறிந்தவர், 'என்னடா இது... ஆசையாய் வடை சுட்டு தர சொல்லி காத்திருக்கேன்... இந்த குரங்கு வந்து, கதைய மாத்த நினைக்குதே' என, கவலையடைந்தார்.

சுதாகரித்த பாட்டி, 'அட... அந்த மக்கு குரங்குக்கு, கணக்கு போட தெரியாது; நீங்க ஒரு வடையை சாப்பிடுங்க...' என்று கொடுத்தார்.

மென்று ருசியில் திளைத்த தாத்தா, 'பேஷ்... பேஷ்... வடைன்னா, இப்படிதான் இருக்கணும்... இந்தா, நீயும் சாப்பிடு...' என்று, பாட்டி வாயில் ஒன்றை திணித்தார்.

வெட்கத்துடன் தின்ற பாட்டி, 'ஆ... என்ன அருமையான ருசி...' என்று, இன்னொரு வடையை தாத்தாவிடம் கொடுத்தார். இப்படி மாறி மாறி வடைகளை சுவைத்தனர். அடுத்த, ஐந்தாவது நிமிடம், தட்டு காலியானது.

அப்போது தான், 'எல்லா வடையும் காலி ஆயிடுச்சே... முரட்டுக் குரங்கு வந்து கேட்டா என்ன செய்வது... உண்டு இல்லைன்னு ஆக்கிடுமே' என்று யோசித்தார் பாட்டி.

நடுங்கிக் கொண்டிருந்த பாட்டியிடம், 'பயப்படாதே... எனக்கு ஒரு மந்திரம் தெரியும். அதை உச்சரித்தா, ரெண்டு பேரும் குட்டியூண்டு மனுஷங்களா மாறிடலாம். சுலபமாக இந்த ஊதாங்கோலுக்குள் போய் ஒளிஞ்சுக்கலாம்...' என்று உச்சரித்தார் தாத்தா. இருவரும் சித்திரகுள்ளர் மாதிரி, குட்டியாக மாறி, ஊதாங்கோலுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டனர்.

வடை தின்னும் ஆசையில் ஓடோடி வந்தது குரங்கு. அங்கே வடையையும் காணவில்லை; பாட்டி, தாத்தாவையும் காணவில்லை. கோபத்தில், டப்பாக்களை உதைக்க ஆரம்பித்தது. மிளகுத் துாள் டப்பா திறந்து உருண்டு ஊதாங்கோல் பக்கம் விழுந்தது. மிளகுத்துாள் சிதறியது.

ஊதாங்கோலுக்குள் ஒளிந்திருந்த தாத்தா, பாட்டி மூக்கில், மிளகுத்துாள் கார நெடி புகுந்தது. அடக்க முடியாமல் இருவரும் ஒரு சேர, 'அச்சு' என்று தும்மினர். அந்த தும்மல் விசையில் ஊதாங்கோல் எகிறி, குரங்கு தலையில் விழுந்தது.

திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த குரங்கு, 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என்று அலறியபடி ஓடியது. மிரண்ட குரங்கை கண்ட பாட்டியும், தாத்தாவும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.

தளிர்களே... யாரையும் மிரட்டி பொருட்களை பிடுங்க நினைத்தால், துன்பம் தான் பெருகும்; நேர்மையாக வாழ பாழகினால், அமைதி நிலைக்கும்!