சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 430 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2020

நடிகர்கள் : அஷோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, நாசர், காளி வெங்கட், அஞ்சலி ராவ், ராம்தாஸ், எஸ்.ஜே. சூர்யா (கவுரவத்தோற்றம்) மற்றும் பலர். இசை : சந்தோஷ், நாராயணன், ஒளிப்பதிவு : தீபக் குமார் பதி, எடிட்டிங் : லியோ ஜான் பால், தயாரிப்பு:     சி.வி. குமார், திரைக்கதை, இயக்கம் : தீபன் சக்ரவர்த்தி.

க்ரைம் நாவல் எழுத்தாளரான ஜெபின் எம். ஜோஸ் (அஷோக் செல்வன்) தனது தந்தையின் கடன்களை தீர்ப்பதற்காக பாண்டிச்சேரியிலுள்ள தங்களது சொத்தான வில்லாவை பார்வையிட வருகிறார். நோய்வாய்ப்பட்டுள்ள தந்தையின் ஓவியங்களை வில்லாவில் பார்க்கும் ஜெபின் ஓவிய மாணவியான தனது காதலி ஆர்த்தியை பாண்டிக்கு அழைக்கிறார். ஆர்த்தி வில்லாவையும் அதிலுள்ள மர்மமான ஒவியங்களையும் ரசிக்கிறாள். இரு முகங்கள் கொண்ட குறிப்பிட்ட ஓவியம் ஆர்த்தியை பெரிதும் கவர்கிறது.

வில்லாவை உடனடியாக விற்குமாறு ஜெபினை கட்டாயப்படுத்துகிறாள். சில நாட்களிலேயே ஜெபினுக்கு எழுத்துத்துறையிலும் முன்னேற்றம் ஏற்படுகிறது. புகழ்பெற்ற பதிப்பாளர் ஜெபினின் முதல் நாவலை (“Maybe Maybe Not!” -  இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்) வெளியிட முன்வருவதோடு, அடுத்த புத்தகத்திற்கான அட்வான்ஸாக ஐந்து லட்சத்தை தருகிறார். இதை நல்ல சகுனமாக எடுத்துக்கொள்ளும் ஜெபின் வில்லாவிலேயே தொடர்ந்து இருக்க முடிவெடுக்கிறான். தனது அடுத்த நாவலும் (The Director - தி டைரக்டர்) வில்லாவின் அதிர்ஷ்டத்தால் சிறப்பாக அமையும் என்று நம்புகிறான். தனது தந்தையிடம் திருமணத்திற்கு அனுமதி வாங்குவதற்காக ஆர்த்தி சென்னை திரும்புகிறாள்.

ஓர் இரவு, வில்லாவில் தனியாக இருக்கும் ஜெபின் பியானோ வாசிக்கும் போது பியானோவின் உள்ளிருந்து ரகசிய சாவி கிடைக்கிறது. ஓவியங்கள் ஒன்றில் வித்தியாசமான ஜியோமண்ட்ரி வரைபடம் கிடைக்கிறது. அது ஓவியமாக இல்லாமல் ஒரு மேப் போல உள்ளது. வக்கீல் தன்னிடம் கொடுத்த அந்த வில்லாவின் வரைபடம் போல உள்ளது. வில்லாவை ஆராயும் ஜெபின் அலமாரிக்கு பின்னால் ஒரு ரகசிய அறையை பார்க்கிறான். ரகசிய சாவியின் மூலம் திறக்கப்படும் அறையில் பெட்டி ஒன்றில் ஏகப்பட்ட ஓவியங்கள் கிடைக்கிறது. அவனது வாழ்வில் நடந்த தாயின் விபத்து உட்பட பல நிகழ்ச்சிகளை ஓவியங்களாக பார்க்கிறான். ஜெபின் நடப்பதை முன்கூட்டியே அறியும் அபூர்வ சக்தி தனது தந்தையிடம் இருந்ததை தெரிந்து கொள்கிறான். இனி நடக்க இருப்பதையும் ஓவியங்கள் மூலம் அறிய முடியும் என நம்புகிறான்.

அவனது தந்தையின் ஓவியத்தில் உள்ளபடியே விரைவில் ஜெபினுக்கு அவனது முதல் நாவலுக்காக மதிப்புமிக்க விருது கிடைக்கிறது. தொடரும் மர்மங்களால் ஜெபின் அந்த வில்லாவை விற்க முயற்சிக்கிறான். ஏஜெண்டிற்கு இரும்பு கேட்டில் நடக்கும் விபத்தை பார்த்து வில்லாவை வாங்க வந்தவர்கள் அங்கே அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறி ஓடிவிடுகிறார்கள். மன அழுத்தத்திற்கு ஆளாகும் ஜெபின் தனது இரண்டாவது நாவலை முடிப்பதில் தீவிரமாகிறான். சென்னையில் இருந்து திரும்பும் ஆர்த்தியிடம் அனைத்தையும் கூறும் ஜெபின் அந்த அறையில் உள்ள ஓவியங்களை எரிக்க முடிவெடுக்கிறான். ஆனால் அந்த அறையில் அவர்கள் நுழைய முடியாமல் தடுக்கப்படுகிறார்கள்.

ஜெபினின் நண்பன் பேரா-சைக்காலஜிஸ்ட் தேவநேசனை சந்திக்குமாறு ஆலோசனை கூறுகிறான். தேவநேசன் இதற்கு முன்பு அந்த வில்லாவில் வாழ்ந்தவர்களின் தீய சக்திகள் அங்கிருக்கலாம் என்று தெரிவிக்கிறார். வில்லாவில் முன்பு வாழ்ந்தவர்கள் அனைவருமே பல விதங்களில் பாதிக்கப்பட்டதை ஜெபின் தெரிந்து கொள்கிறான். அந்த வீட்டின் உரிமையாளர்கள் டைரி, ஓவியங்கள் என பின் நடக்க இருப்பதை குறித்து வைத்திருக்கிறார்கள். தேவநேசனின் கருத்துப்படி அந்த தீயசக்தி மாறுமே தவிர ஒழியாது. உண்மையை அறியும் முயற்சியில் ஜெபினின் நண்பன் கால்களை இழக்கிறான்.

ஒரு திருமணம் மற்றும் கணவன் மனைவியை கொல்வது என இரு ஓவியங்களை ஜெபின் ஆர்த்தியிடமிருந்து மறைத்து வைத்திருந்ததை நண்பனிடம் கூறுகிறான். அதன்படி ஆர்த்தியின் உயிருக்கு தன்னால் ஆபத்து வரும் என பயந்து ஜெபின் ஓவியங்கள், வில்லா என அனைத்தையும் தன்னோடு சேர்த்து அழிக்கிறான். தீ பிடித்த வில்லாவை பார்க்கும் ஆர்த்தி ஜெபினை காப்பாற்ற முயற்சிக்காமல் தன் வழியே போகிறாள். ஜெபினின் பணத்திற்காக மட்டுமே இத்தனை நாட்கள் அவனோடு பழகிய ஆர்த்தி ஜெபினின் சொத்து கிடைக்காததால் எரிச்சலோடு செல்கிறாள்.

சில மாதங்கள் கழித்து தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வில்லாவை தங்களது திரைப்படத்திற்காக பார்வையிட டைரக்டர் தனது உதவியாளர்களோடு வருகிறார். தப்பும் கடைசி ஓவியங்களை பார்ப்பவர்கள் அங்கேயே பணிபுரிய முடிவெடுக்கிறார்கள். ஆர்த்திக்கு கடிதம் எழுதும் ஜெபினின் நண்பன், ஆர்த்தியின் திருமணத்திற்கு வாழ்த்து சொல்வதோடு ஜெபினின் இரண்டாவது நாவலை திருமண பரிசாகவும் அனுப்புகிறான். வீட்டில் டைரக்டரும் ஆர்த்தியும் இருக்கும் திருமண புகைப்படம் ஓவியத்தை ஒத்திருக்கிறது. நாவலின் அட்டைப்படத்தில் எரிந்துபோன வில்லாவின் முன்னால் டைரக்டர் நிற்கும் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. நடக்க இருப்பவற்றின் குறிப்பு இம்முறை புத்தகம் மூலம் வெளிப்பட மர்மம் தொடர்கிறது.