ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 12–2–2020

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2020

இளையராஜாவை மயக்கிய 3 வயது குழந்தை!

இளை­ய­ராஜா சில நேரங்­க­ளில் இசைக்­கூ­டத்­தில் ஜாலி மூடில் இருந்­தால், ஜோக் அடிப்­பார். அது மென்­மை­யான ஜோக்­காக இருக்­கும். ஆனால், உடன் இருப்­ப­வர்­கள் சிரிக்­க­மாட்­டார்­கள். புன்­னகை புரி­ய­வும் தயங்­கு­வார்­கள். கார­ணம் மரி­யாதை.

* இளை­ய­ரா­ஜாவை இன்­றும் ‘வாடா', 'போடா' என்று ஏக வச­னத்­தில் கூப்­பி­டும் உரிமை பெற்­ற­வர்­க­ளில் முதன்­மை­யா­ன­வர்­கள் பார­தி­ராஜா, இசை­ய­மைப்­பா­ளர் ஜி.கே. வெங்­க­டேஷ், பாட­கர் எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்.

* ராஜா­வி­டம் ஒரு பழக்­கம். தன் தொழி­லில் மூக்கு நுழைத்­தால் பிடிக்­காது. ஒரு படத்­தின் இசைப் பணி­யில் அவர் முழு­மை­யாக ஈடு­பட்­டி­ருக்­கும்­போது தேவை­யற்ற யோச­னை­க­ளால் தமது வேலை­யைக் கெடுக்­கி­றார் படத்­தின் டைரக்­டர் என்று தோன்­றி­னால், கோபத்­தில் ‘கெட் அவுட்' என்று கண்­டிப்­பா­கச் சொல்லி விடு­வார். சுதந்­தி­ர­மாக இசை­ய­மைப்­ப­து­தான் ராஜா­வுக்­குப் பிடிக்­கும்.

* திரு­வண்­ணா­மலை விசி­றிச் சாமி­யார், சேலம் மாயம்மா போன்ற மகான்­க­ளைத் தரி­சிப்­பார். உயி­ரும் உணர்­வு­முள்ள ஞானி­க­ளின் முன்­னால் மவு­ன­மாக அமர்ந்­தால் மனம் சாந்­தம் பெறு­கி­றது என்­பது அவர் அனு­ப­வம்.

* இசைப்­ப­ணிக்­குக் கால்­ஷீட் கொடுப்­ப­தில் பார­பட்­சம் பார்க்க மாட்­டார். அண்­ணன் பாஸ்­கர் ஆனா­லும், தம்பி கங்கை அம­ரன் பட­மாக இருந்­தா­லும் வரிசை முறைப்­ப­டி­தான் தேதி தரு­வார். ஆனால், ஒரே ஒரு­முறை ஒரு பெண்­ம­ணி­யின் சிபா­ரிசு கார­ண­மாக சங்­கிலி முரு­கன் படத்­துக்கு அடுத்த நாளே கால்­ஷீட் கொடுத்­தார். சிபா­ரிசு செய்த அந்­தப் பெண்­மணி, சின்­னத்­தாயி அம்­மாள், இளை­ய­ரா­ஜா­வின் அம்மா.

* அவர் திரை­யு­ல­கில் நுழைந்த கால­கட்­டத்­தில் பயன் கரு­தா­மல் உதவி செய்த டைரக்­டர் மாத­வன், சங்­கிலி முரு­கன், ஜி.கே. வெங்­க­டேஷ், பஞ்சு அரு­ணா­ச­லம் போன்­ற­வர்­க­ளி­டம் ராஜா வைத்­தி­ருந்த மரி­யாதை அவர் மிகப்­பெ­ரிய இசை­ய­மைப்­பா­ள­ரான பின்­ன­ரும் துளி­யும் குறை­ய­வில்லை. தன்­னி­டம் ஐந்து நிமி­டங்­கள் சந்­தித்து ஆத்­மார்த்­த­மா­கப் பேசு­ப­வரை உடனே நண்­ப­ராக அங்­கீ­க­ரித்து விடு­வார். நல்ல நண்­பர்­களை தேர்ந்­தெ­டுக்க அவர் வைத்­தி­ருக்­கும் சோதனை இது­தான்.

* ஆன்­மிக சஞ்­சா­ரத்­தில் இருக்­கும் ராஜா ஒரு சம­யம் உல­கச் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டார். அந்­தச் சுற்­றுப்­ப­ய­ணத்­தைக்­கூட தனக்கு மிக­வும் பிடித்த தனது மரி­யா­தைக்­கு­ரிய இசை மேதை­க­ளின் நினை­வி­டத்­துக்­குச் சென்று தரி­சித்து வரு­வ­தற்­கா­ன­தா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்­டார். இதற்கு அவ­ரு­டன் இருந்து உத­வி­ய­வர் சிங்­கப்­பூர் தமி­ழர் ஒரு­வர்.

* மூன்று வயது பாடகி !

ஒரு சம­யம் பாடகி எஸ். ஜானகி ஒரு மூன்று வயது பெண் குழந்­தையை இளை­ய­ரா­ஜா­வி­டம் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.

“இந்­தக் குழந்தை பக்­திப்­பா­டல்­களை அரு­மை­யா­கப் பாடும்” என்­றார் ஜானகி.

அந்­தக் குட்­டிப் பாட­கியை தமக்கு முன்­னால் உள்ள மேஜை­யின்­மேல் நிற்க வைத்து பாடச் சொல்­கி­றார் ராஜா.

பாடிய குழந்­தை­யின் குர­லில் தேவ­கா­னம். உட்­கார்ந்­தி­ருந்த ராஜா எழுந்து நின்று பாடல் முடி­யும் வரை கூப்­பிய கரங்­க­ளு­டன் குழந்­தையை வணங்­கி­ய­படி நின்­றி­ருந்­தார் ராஜா.

* 'நிறை­கு­டம் தளும்­பாது' என்­பார்­கள். இளை­ய­ராஜா தன்­னைப் பற்­றிய சரா­ச­ரி­க­ளின் விமர்­ச­னங்­களை எப்­போ­தும் பொருட்­ப­டுத்­த­மாட்­டார். ஆனால் மேதை­க­ளின் தவ­றான விமர்­ச­னம் கண்­டால் வருத்­தம் கொள்­வார். ஒரு வார இத­ழில் ராஜா­வின் இசையை மிகக் கடு­மை­யா­கக் குறை கூறி­யி­ருந்­தார் இசை விமர்­ச­கர் சுப்­புடு. அதைக் கண்ட ராஜா, அடுத்த வாரமே சுப்­பு­டு­வை­வி­டக் கிண்­ட­லா­க­வும் ஆதா­ரத்­தோ­டும் மறுப்பு எழு­தி­னார். சுப்­புடு அதற்கு மறுப்பு எது­வும் எழு­த­வில்லை.