பார்வை குறை தீர்க்கும் திருவாரூர் துாவாய்நாதர்!

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2020

‘தப்பு பண்ணினா சாமி கண்ணைக் குத்தும்’ என குழந்தைகளைப் பயமுறுத்துவர். இது விளையாட்டான சொல் அல்ல. சிவனின் நண்பரான சுந்தரருக்கு உண்மையில் இப்படி நடந்தது. தன் தவற்றுக்கு வருந்திய அவர், திருவாரூர் துாவாய்நாதர் கோயிலுக்கு வந்து மன்னிப்பு கேட்ட பிறகே மீண்டும் பார்வை பெற்றார்.

ஒரு சமயம் கடல் பொங்கி எழவே தேவர்களும், முனிவர்களும் உலகைக் காப்பாற்றும்படி சிவனிடம் முறையிட்டனர். துர்வாச முனிவரிடம்,

“நீ பூலோகத்திலுள்ள திருவாரூரில் குளம் அமைத்து என்னை வழிபட்டால் கடல் அமைதியாகும். உயிர்கள் காப்பாற்றப்படும்” என்றார் சிவன். உடனே துர்வாசர் தலைமையில் முனிவர்கள் ஒன்று கூடி குளம் வெட்டி, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர்.

பூஜையை ஏற்ற சிவன், பொங்கி வந்த கடலை குளத்திற்குள் ஈர்த்து கொண்டார். துர்வாச முனிவர் பூஜித்த காரணத்தினால் இத்தல சிவனுக்கு ‘துர்வாச நயினார்’ என பெயர் வந்தது.

பிற்காலத்தில் ‘துாவாய்நாதர்’ என இப்பெயர் மருவியது. இத்தலத்தில் உள்ள அம்பிகை பஞ்சை விட மெல்லிய பாதம் கொண்டவள் என்பதால் அவளை ‘பஞ்சின் மெல்லடியாள்’ என அழைக்கின்றனர்.

பாதங்களைப் போலவே அவளது மனமும் மென்மையானது. இயற்கை சீற்றங்களில் இருந்து விடுபட யாகம் நடத்தி அன்னதானம் செய்கின்றனர்.

ஒரு முறை சுந்தரர் தனது இரண்டாவது மனைவியான சங்கிலி நாச்சியாரிடம், “நான் எப்போதும் உன்னை விட்டு பிரியமாட்டேன்’’ என்று உறுதிமொழி கொடுத்தார். ஆனால் அவர் தனது மனைவியான பரவை நாச்சியாரின் நினைவு வர, அவரைக் காணச் சென்றார். வாக்கை மீறியதால் சுந்தரரின் பார்வை போனது.

மனம் கலங்கிய சுந்தரர் விமோசனம் பெற ஒவ்வொரு சிவத்தலங்களுக்கும் சென்றார். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு வந்த போது சுந்தரருக்கு இடது கண் பார்வை கிடைத்தது.

திருவாரூர் துாவாய்நாதர் கோயிலில் மற்றொரு கண்ணுக்கு பார்வை தரும்படி வேண்டினார். குளத்தில் நீராடி தன்னை வழிபட்டால் பார்வை கிடைக்கும் என்றார் சிவன். சுந்தரரும் அதன்படியே வலக்கண் பார்வை பெற்றார்.

இக்கோயிலின் குளம் அக்னி மூலையில் இருப்பது சிறப்பு. பார்வை குறை தீர்வதற்காக பக்தர்கள் ஞாயிறன்று குளத்து நீரை தலையில் தெளித்துக் கொண்டு சுவாமிக்கு செவ்வரளி மாலை சாத்தி அர்ச்சனை செய்கின்றனர்.  தெற்கு நோக்கிய சன்னதியில் சனீஸ்வரர் உள்ளார்.

இருப்பிடம்: கீழரத வீதி, திருவாரூர்.

விசேஷ நாட்கள்: மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை.

நேரம்: காலை 6.00 -– 11.00 மணி; மாலை 5.00 -– 8.00 மணி.

அருகிலுள்ள தலம்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்.