இணையதள கறுப்புச் சந்தையில் இந்தியரின் கிரெடிட் .டெபிட் கார்டுகள் விற்பனை: 9 டாலருக்கு 1 கார்டு

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2020

புதுடெல்லி

இணையதள கறுப்புச் சந்தையில் இந்தியர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் ஆன்லைனில் திருட்டுத் தனமாக விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கார்டு விலை 9 டாலர் என சிங்கப்பூரில் உள்ள குரூப் பி என்ற சிங்கப்பூர் இணையதள பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது .மொத்தம் 4,61,976 கார்டுகளில் நீங்கள் உங்களுக்கு பிடித்த கார்டை முழு தகவல்களுடன் வாங்கலாம்.

14 முதல் 16 இலக்கம் வரை உள்ள கார்டு எண்,

கார்டு உரிமையாளர் பெயர்.

கார்டின் சிவிவி/சிபிசி எண்.

கார்டு எப்பொழுது வாங்கப்பட்டது

எந்தத் தேதி வரை அந்த கார்டு செல்லுபடியாகும்

கார்டுதாரரின்  இமெயில் முகவரி

ஆகியவையும் கார்டுகளுடன் வழங்கப்படுகின்றன.

கார்டுடன் எல்லாத் தகவல்களும் கிடைக்கின்ற காரணத்தினால் ஆன்லைன் முறையிலும் அல்லது ஏடிஎம் மூலமாகவும் அந்தக் கார்டின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

கார்டு உங்கள் பாக்கெட்டில் இருக்கும். ஆனால் அந்தக் கார்டுக்கு உரிய வங்கிக்கணக்கில் பணம் இருக்காது.

இணையதள கறுப்புச் சந்தையில் ” ஜோக்கர்ஸ் ஸ்டாஷ்”  என்ற கருப்புச் சந்தை இணையதளத்தில் இந்திய கார்டுகளின் விற்பனை குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியர்களின் டெபிட் கார்டுகள் கறுப்புச் சந்தை இணையதளத்தில் விற்பனை செய்யப்படுவது குறித்து இந்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் என்ற அமைப்புக்கு  சிங்கப்பூரை சேர்ந்த குரூப் பி  என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் எச்சரிக்கை தந்தது.

அதன் அடிப்படையில் இந்திய சைபர் செக்யூரிட்டி அமைப்பு  இந்திய ரிசர்வ் வங்கி மற்றும்  இந்தியாவிலுள்ள எல்லா வங்கிகளுக்கும் உடனடியாக எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை வரை அந்த  கருப்பு சந்தை இணையதளத்தில் 407 கார்டுகள் அடையாளம் தெரியாத ஒருவரால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன.

விற்கப்படும் இந்தியர்களின் கார்டுகளில் பெரும்பான்மையானவை இந்தியாவிலுள்ள அமெரிக்க வங்கிகள் வழங்கியுள்ள கார்டுகள் ஆகும்.

இந்தியர்களின் டெபிட். கிரெடிட் கார்டுகள் பற்றிய விபரங்கள் எப்படி கருப்புச் சந்தை இணையதளத்துக்கு கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணையை இந்திய சைபர் செக்யூரிட்டி அமைப்பு துவக்கி உள்ளது.

இந்தியர்களின் டெபிட் கார்டுகள் கறுப்புச் சந்தை இணையதளத்தில் விற்பனை செய்யப்படுவது இது முதல தடவை அல்ல, கடந்த அக்டோபர் மாதத்தில் 13 லட்சம் கார்டுகள் விற்பனைக்கு தயார் என அறிவிக்கப்பட்டது 

.ஆனால் அப்பொழுது சிவிவி/ சிவிசி எண்கள் வழங்கப்படவில்லை, இ மெயில் பற்றிய தகவலும் வழங்கப்படவில்லை. விற்பனைக்கு வந்த கார்டுகளை உடனடியாக இந்திய வங்கிகள் செயலற்றதாக மாற்றின. அதனால் அந்தக கார்டுகளின் கணக்கில் உள்ள பணம் பிழைத்தது. ஆனால் இந்த முறை இன்னும் எதிர் நடவடிக்கைகள் துவங்கவில்லை.


கட்டுரையாளர்: க. சந்தானம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation