வடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம்

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2020 13:04

கடலூர்

வடலூர் சத்திய ஞானசபையில் தைப் பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை பூச ஜோதி தரிசன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. காலை 6:00 மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப் பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

2020ம் ஆண்டின் 149-வது தைப்பூச திருவிழா 7.2.20 (நேற்று) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5:00 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டது.

இன்று காலை 7.30 மணிக்கு தருமச்சாலை சன்மார்க்க கொடி  ஏற்றப்பட்டது.

பின்னர், வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லத்திலும்,

வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரிய செய்த கருங்குழியிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டன.

ஜோதி தரிசனம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை பூச ஜோதி தரிசன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது  காலை 6:00 மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

அமைச்சர் எம்.சி. சம்பத் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தார்.

மாவட்ட அரசு உயர் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

காலை 10:00 மணிக்கும், மதியம் 1:00 மணிக்கும் 7 திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

இன்று இரவு 7:00 மணி, 10:00 மணி, மறுநாள் காலை 5:30 மணிக்கு 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

கடலூர், விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஜோதி தரிசனம் செய்தனர்.

10.2.2020 அன்று திருஅறை தரிசனம் நடைபெறவுள்ளது.

போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருவிழாவையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் மேற்பார்வையில், ஏராளமான போலீஸார், ஊர்காவல் படையினர், சிறப்பு காவல் படையினர், போக்குவரத்து போலீசார் ஆகியோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, விழுப்புரம் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வள்ளலார் சபை வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம்  அமைக்கப்பட்டுள்ளது.

ஜோதி தரிசன விழாவை காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு தேவையான இட வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.