குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்கள் அமல் செய்ய மறுத்தால் குழப்பம் ஏற்படும்: மோடி எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 07 பிப்ரவரி 2020

புது டில்லி

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிக்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அமல் செய்ய மறுத்தால் நாட்டில் குழப்பமும் ஒழுங்கீனமும்தான்  ஏற்படும் என்று இந்தியப் பிரதமர் மோடி எச்சரித்தார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து 90 நிமிடங்கள் பேசினார்.

பிரதமர் மோடி தன்னுடைய உரையின்முதல் பகுதியில் மத்திய அரசின் கொள்கைகள் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கினார். பிற்பகுதியில் தற்பொழுது சர்ச்சைக்குரிய விஷயங்களாக இருந்து வரும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை தொடர்பான  குற்றச்சாட்டுகளுக்கு மோடி  பதிலளித்தார்.

மக்களின் விருப்பம்

காங்கிரஸ் ஆட்சி நடத்திய பாதையை விட்டு விலகிச் செல்வதாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் சசிதரூர், டேனிஷ் அலி ஆகியோர் குற்றம்சாட்டியதை  நினைவுகூர்ந்த பிரதமர் ,எல்லோரும் பாரம்பரியமான பழைய பாதையில் மத்திய அரசு செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றார்.  ஆனால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் புதிய அரசாங்கம் புதிய மரபுகளை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  இதுவரை நடக்காத பாதையில் அரசு செல்ல வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம் என்று மோடி குறிப்பிட்டார்.

காங்கிரஸ் காட்டிய பாதையில் பாரதிய ஜனதா அரசும் தொடர்ந்து நடந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இருக்காது முத்தலாக் சட்டவிரோதம் குற்றம்  ஆகி இராது. முஸ்லிம் பெண்களுக்கு நீதியும் நியாயமும் கிடைத்திருக்காது. ராமஜென்ம பூமி வழக்கு தீர்ப்பு வந்திருக்காது. இந்திய ராணுவத்துக்கு போர் விமானம் கிடைத்திருக்காது. முப்டைகளுக்கு ஒரு தலைமை தளபதி கிடைத்திருக்க மாட்டார்.

இப்பொழுது இருக்கிற மத்திய அரசு பிரச்சனைகளை யோசித்துப் பார்த்து அதற்கு மரபு வழியில் தீர்வு காண முயற்சிக்காமல் புதிய சாத்தியமான வழியில் தீர்வுகளை கண்டறிந்து நிறைவேற்றி வருகிறது.

 2014ஆம் ஆண்டில் நடந்த தேர்தலுக்குப் பின் பாரதிய ஜனதா அரசு இந்த நாட்டில் செய்த பணிகளை எண்ணிப் பார்த்து 2019இல் முன்பை விட அதிகமான பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

மிகவும் முக்கியமான மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்க்கமான முடிவுகளை மக்களின் கருத்தை புரிந்து உருவாக்கி செயல்பட்டு வருகிறோம்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் எல்லைக்கும் இடையே முன்பு நீண்டதூரம் இருந்தது இப்பொழுது வட கிழக்கு மாநிலங்களுக்கு உதவ அவற்றின் வாயில் படியிலேயே மத்திய அரசு தயாராக காத்துக் கொண்டிருக்கிறது.

பலர்  விவசாயிகள் பற்றி பேசினார்கள் அவர்கள் அறியாமல் பேசுகிறார்களா அல்லது வேண்டுமென்றே அறியாதது போல பேசுகிறார்களா என்று தெரியவில்லை.

2014 ஆம் ஆண்டு விவசாயத்துறைக்கு  வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 27 ஆயிரம் கோடி. ஆனால் இந்த தொகை இப்பொழுது ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டு ரூ,1.5 லட்சம் கோடியாக உயர்ந்ந்திருக்கிறது .இதுவரை பிரைம் மினிஸ்டர்- கிஷான் திட்டத்துக்கு ரூ. 45,000 கோடி நேரிடையாக விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த தொகையில் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்ட திட்டத்துக்கான ஒதுக்கீடும் அடங்கும்.

எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தாமல் வைத்துள்ளனர். நான் அவர்களை வேண்டிக்கொள்கிறேன். இந்த திட்டத்தை அமல் செய்யுங்கள். இதில் போய் அரசியல் நடத்த வேண்டாம். நாம் அனைவரும் விவசாயிகளின் நலனுக்காக இணைந்து பாடுபட வேண்டிய அவசியம் உள்ளது.

கடந்த காங்கிரஸ் அரசின் கொள்கைகள் இந்திய சமூகத்தின் எந்த உறுப்பினரும் சார்பு நிலையை எட்டுவதை அனுமதித்ததில்லை.

விவசாயிகள் பிரச்சனையில்  ராகுல்காந்தி எனக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார் .அந்த எச்சரிக்கைக்காக  அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் .ஆறுமாத காலத்தில் இளைஞர்கள் பிரம்பை எடுத்து வந்து என் முதுகில் அடித்து நொறுக்க போகிறார்கள் என க்குறிப்பிட்டார்.  நான் கூடுதலாக சூரிய நமஸ்காரங்கள் செய்து என் முதுகை வலுப்படுத்திக் கொள்கிறேன் . அடியைத் தாங்க வேண்டும் அல்லவா? ராகுல்  காந்திக்கு எனக்கு முன்னெச்சரிக்கை வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 ஆனால் கடந்த இருபது ஆண்டு காலத்தில் என்னுடைய அரசியல் பாதையில் எனக்கு எதிராக எழுப்பப்பட்ட கருத்துக்கள் காரணமாக எனக்கு இந்தப் புகார்கள் எல்லாம் இப்பொழுது பெரிதாகத் தோன்றவில்லை..

பிரதமர் மோடி இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது ராகுல்காந்தி குறிப்பிட்டு பேச முயன்றார்

அவரை  அலட்சியம் செய்த மோடி,  கடந்த 30 முதல் 40 நிமிடங்களாக  நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு நேரத்திற்கு பிறகுதான் இங்கு கரண்ட் - மின்சாரம் வந்திருக்கிறது போலும்!  பல டியூப் லைட்டுகள் இப்படித்தான் .என்று மோடி குறிப்பிட்டார்.

காங்கிரசின் ஜனநாயகத்தை காப்போம் அரசியல் சட்டத்தை காப்போம் என்ற கோஷத்தை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

1975ஆம் ஆண்டு அரசியல் சட்டம் மீறப்பட்ட போது  இவர்கள் எங்கே இருந்தார்கள் என்று தெரியவில்லை. பல தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட பொழுது இவர்கள் எங்கே இருந்தார்கள் என்று தெரியவில்லை.

சிலருக்கு இந்திய பிரதமராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. பெரிய ஆசைகள் தோன்றுவது நல்லது தான்.

கடந்த காலத்தில் ஒருவருக்கு இந்திய பிரதமராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால் இந்தியத் துணைக்கண்டம் இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. அதனால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சிறுபான்மை இனத்தவர் - இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பல வகுப்பினர் பெரிதும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.

பிரதமர் மோடி இந்தக் கருத்துக் கூறும் பொழுது ஆளுங்கட்சியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.  

எதிர்க்கட்சியினர் வெட்கம் வெட்கம் என்று குரல் எழுப்பினார்கள்.

குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் அவசியம்

தொடர்ந்து பேசிய இந்திய பிரதமர் மோடி குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் அவசியமானது என்று வலியுறுத்தினார்.

குடியுரிமை  திருத்தச்சட்டத்தின் முக்கிய விளைவுகள் குறித்து சிந்தித்துப் பார்க்காமல் அதை சிலர் குறை கூறுகிறார்கள் 1950 ஆம் ஆண்டு இரு நாடுகளிலும் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கு குடியுரிமை வழங்குவது குறித்து அப்போது இந்தியப் பிரதமராக இருந்த நேரு க்கும் லியாகத் அலி கானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் சிறுபான்மை இனத்தவர் என்று மட்டும்தான் வேறு குறிப்பிட்டிருக்கிறார் முஸ்லிம்களை குறிப்பிடவில்லை அல்லது எல்லா இனத்தவரையும் என்று பொதுவாக குறிப்பிடவில்லை ஏன் அவர் அவ்வாறு குறிப்பிடவில்லை. அதே காரணத்தினால் தான் நாங்கள் இப்பொழுது குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வரும்பொழுது அதில் சிறுபான்மை இனத்தவரை மட்டும் குறிப்பிட்டு இருக்கிறோம். அதே காரணத்தினால் தான் எல்லா வகுப்பினருக்கும் குடியுரிமை வழங்குவோம் என குறிப்பிடவில்லை. இப்பொழுது நாங்கள் செய்தது வகுப்புவாத பாகுபாடு என்றால் அப்பொழுது நேரு செய்ததை வகுப்புவாத பாகுபாடு தானா ?

நாங்கள் முஸ்லிம்களை முஸ்லிம்களாக பார்க்கவில்லை. இந்தியர்களாக பார்க்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள்  முஸ்லிம்களின் முஸ்லிம்களாகவே பார்க்கிறார்கள். நான் மீண்டும் கூறுகிறேன். குடியுரிமை சட்டம் காரணமாக தற்பொழுது இந்திய குடிமக்களாக உள்ள யாருடைய உரிமையும் பறிக்கப்படாது என்று பொறுப்புணர்ந்து உறுதியளிக்கிறேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்கள் அமல் செய்ய மாட்டேன் என்று கூறினால் என்ன ஆகும்? நாட்டில் குழப்பமும் ஒழுங்கீனமும்தான் மிஞ்சும் என்றார் மோடி,

சிலர் காஷ்மீர்  நிலத்தை கைப்பற்றிக் கொள்வதற்காக அரசியல் சட்ட விதி 370 ரத்து செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள்.காஷ்மீரில் தனித்துவம் என்ன ஆனது?

 1990-ம் ஆண்டுபயங்கரவாதிகளின் தாக்குதல் காரணமாக  காஷ்மீரில் இருந்து காஷ்மீர் பண்டிதர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிய பொழுது அதன் தனித்துவம் புதைக்கப்பட்டு விட்டது . குண்டுகள் ,துப்பாக்கிகள்  இதுதான் காஷ்மீர் கலாச்சாரமா? இதுதான் காஷ்மீரின் தனித்துவமா  என பிரதமர் மோடி மோடி கேள்வி எழுப்பினார்.

பொருளாதார சாதனைகள்

இந்திய அரசின் நிதிப்பற்றாக்குறையை பொருத்தமட்டில் அதற்கு உரிய சட்ட வரம்புக்குள் தான் நிதி பற்றாக்குறை உள்ளது. பொருள்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் விரிவான பொருளாதார அமைப்பு ஸ்திரத்தன்மை யுடன் தான் உள்ளது .

விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் காரணமாக இந்திய விவசாயிகளின் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

பல விவசாயிகள் இத்திட்டங்களில் பலனடைந்திருக்கிறார்கள்

இந்தத் திட்டங்களில் இடைத்தரகர் யாரும் இல்லை.

 கூடுதலாக அரசு அதிகாரிகள் பார்க்க வேண்டிய வேலையும் கிடையாது.

2018 ஆம் ஆண்டு ஏப்ரலுக்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் செய்யப்பட்ட அன்னிய முதலீட்டின் அளவு 22 பில்லியன் டாலர்கள் ஆகும். இப்பொழுது 2019ஆம் ஆண்டு ஏப்ரலுக்கும் செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவிற்கான அன்னிய முதலீட்டின் அளவு 26 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய அரசின் செயல்பாட்டில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் உரையை தொடர்ந்து குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி கூறும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையிலும் பிரதமர் மோடியின் பதில் உரையைத் தொடர்ந்து, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கட்டுரையாளர்: க. சந்தானம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation