அஸ்ஸாம்: அமைதி ஏற்படுமா?

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2020

அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ இன மக்கள் வாழும் பகுதியை தனியாக பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஎப்பி), அனைத்து போடோ  மாணவர்கள் சங்கம் (ஏபிஎஸ்யு), ஐக்கிய போடோ மக்கள் அமைப்பு ஆகியவை, 1972ம் ஆண்டு முதல் ஆயுதமேந்தி போராட்டம் நடத்தி வந்தன. இந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று அமைப்புகளுக்கும், மத்திய அரசு, அஸ்ஸாம் மாநில அரசுக்கும் இடையே ஜனவரி 27ம் தேதி டில்லியில் முத்தரப்பு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் சாபானந்த சோனோவால், அஸ்ஸாம் நிதி அமைச்சர் ஹிமானந்த பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் என்.டி.எப்.பியின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள், அனைத்து அஸ்ஸாம் போடோ மாணவர்கள் சங்க பிரதிநிதிகள், மத்திய உள்துறை இணை செயலாளர் சத்யேந்திர காக், அஸ்ஸாம் தலைமைச் செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா ஆகியோல் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத் தாகும் போது, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த ரஞ்சன் டைமேரி உடனிருந்தார். இவர் அஸ்ஸாமில் 2008ல் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புக்கும், பல உயிர்கள் பலியாகவும் காரணமாக இருந்தவர். இந்த வழக்கில் தண்டனை பெற்றவர். போடோ லாந்து பிராந்திய கவுன்சில் தலைவர் ஹக்ரமா மோகிலரியும் உடன் இருந்தார். இவர் 2003 முதல் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தலைவராக உள்ளார். அனைத்து போடோ மாணவர் சங்கத்தைச் சேர்ந்த பிரமோத் போடோவும் உடனிருந்தார்.  

தனி போடோ மாநிலம் கேட்டு ஆயுதமேந்தி போராடும் குழுக்களுக்கும், மத்திய அரசு, அஸ்ஸாம் மாநில அரசுக்கும் இடையே இதற்கு முன் இரண்டு முறை உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள உடன்படிக்கை கடந்த 27 வருடங் களில் ஏற்பட்ட மூன்றாவது உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை ஏற்பட்ட போது அனைவரும் வெற்றிக்கு அடையாளமாக இரண்டு விரல்களை உயர்த்தி காட்டினார்கள். இதற்கு முன் 2003ல் ஹக்ரமா மோகிலரி தலைமையிலான போடோ விடுதலை புலிகள் ஆயுதங்களை ஒப்படைந்து விட்டு சரணடைந்தனர். அதற்கு பிறகு போடாலாந்து பிராந்திய கவுன்சில் அமைக்கப்பட்டது. அன்று முதல் இதன் தலைவராக ஹக்ரமா மோகிலரி இருந்து வருகிறார். பதினேழு வருடங்கள் கழித்து மீண்டும் தற்போது மற்ற அமைப்புகளையும் சேர்த்து, உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் படி ஆயுதமேந்தி போராடிய குழுக்களைச் சேர்ந்தவர்கள் மீது தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும். கொலை போன்ற கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள் மீதான வழக்குகள் பரிசீலனை செய்யப்படும். இந்த போராட்டத்தின் போது போடோ குழுக்களைச் சேர்ந்த பலியான குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்படும். போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் கீழ், போடோ இன மக்கள் வாழும் மற்ற பகுதிகளும் கொண்டு வரப்படும். இந்த பிராந்திய கவுன்சிலுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும். இவை எல்லாம் சமாதானம் ஏற்பட உறுதுணையாக இருக்கும் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதே போல் முன்பு ஏற்பட்ட உடன்படிக்கைகளிலும் கூறப்பட்டு இருந்தது. இது போன்ற உடன்படிக்கைகளின் மூலம் போடோலாந்து பிராந்திய கவுன்சிலை விரிவுபடுத்தவும், நிலையான அமைதி ஏற்படவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இவை போடோ பிராந்திய கவுன்சில் பகுதிகளில் வாழும் போடோ இன மக்களை மட்டும் திருப்திப்படுத்தும் விதமாக இருப்பதால் நிலையான அமைதிக்கு சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த போராட்டங்களின் போது பல அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளனர். இது போன்ற நினைவில் இருந்து அகலாத பல சம்பங்கள் நடந்துள்ளன. தற்போதும் கூட உடன்படிக்கை ஏற்படும் போது போடே இன மக்கள் அல்லாத மற்ற இனங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் புதிய பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதே போல் 1993, 2003 ஆகிய வருடங்களில் உடன்படிக்கை ஏற்பட்ட போதும் மோதல்கள் வலுத்தன. 1993ல் அனைத்து போடோ மாணவர் சங்கத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. இதற்கு பிறகு ஏற்பட்ட வன்முறையால், இந்த உடன்படிக்கை ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. 2003ல் ஏற்பட்ட கலவரத்துக்கு பிறகு மீண்டும் உடன்படிக்கை ஏற்பட்டது. தற்போது மூன்றாவது தடவையாக உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்த தடவை அமைதி நீடிக்கும் என்று பிரமோத் போடோ போன்றவர்கள் கூறுகின்றனர். தற்போது ஆயுத மோதல்கள் இல்லை. எனவே அமைதி நீடிக்கும் என்கின்றனர். தற்போது உடன்படிக்கையில் கையொப்பமிட்ட போடோ இன மக்கள் பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்ற ராஜூ நார்ஜாரி, “முப்பது வருடங்கள் நீடித்த வன்முறைக்கு பிறகு, ஆயுதம் தாங்கிய குழுக்கள் இல்லாத சூழலில் அமைதி ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். ஆனால் அஸ்ஸாம் சிறுபான்மை மாணவர் சங்க தலைவர் ராஜூல் கரிம் சர்கார் கூறும் போது, “இப்போது இந்த பிராந்தியம் முழுவதும் கிளர்ச்சிகள் இல்லாமல் உள்ளது. ஆனால் இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமானது. தனி மாநிலம் கேட்டு ஆயுதமேந்தி நடந்த போராட்டத்தின் போது பலியான போடோ அல்லாத மற்ற இன மக்களுக்கு எவ்வித நஷ்டஈடும் அறிவிக்கப்படவில்லை. தற்போது போடோ இன மக்கள் பிரச்னை தீர்ந்துள்ளது. நாங்கள் இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் எங்கள் உரிமை பறிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. போடோ இன மக்கள் தலைமை எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். நாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக இருக்க விரும்பவில்லை” என்று கூறினார்.

போடோ பிராந்திய கவுன்சிலுக்கு உட்பட்ட கிராமங்களில் வாழும் போடோ அல்லாத மற்ற இன மக்களுக்கு உரிய பாதுகாப்பும், தேவையான அனைத்து வசதியையும், மத்திய அரசும், அஸ்ஸாம் மாநில அரசும் உறுதிப்படுத்த வேண்டும். இவர்கள் மத்தியில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் முழு அளவில் அமைதி ஏற்படுவது சந்தேகமே.

நன்றி: தி கியூன்ட் இணையதளத்தில் அர்ஜிட் சென் எழுதிய கட்டுரையின் உதவியுடன்.


பாக்ஸ்....உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள்:

போடோலாந்து பிராந்திய கவுன்சில் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடி ஒதுக்கப்படும். இதில் அஸ்ஸாம் மாநில அரசு, மத்திய அரசு தலா ரூ.250 கோடி வழங்கும். இந்த நிதி மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும்.    

போடோ இன மக்கள் அதிக அளவு வாழும் கிராமங்கள் போடோ பிராந்திய கவுன்சிலில் இணைக்கப்படும். தற்போது இந்த கவுன்சில் பகுதியில் போடோ இன மக்கள் பெரும்பான்மையாக இல்லாத கிராமங்கள் நீக்கப்படும். இதை கண்டறிய ஆணையம் அமைக்கப்படும். ( தற்போது போடோ பிராந்திய கவுன்சிலின் அதிகார வரம்பில் கல்வி, வனம், தோட்டக்கலை துறை உட்பட முப்பது துறைகள் உள்ளன. வருவாய் பொது நிர்வாகம், போலீஸ் ஆகியவை அஸ்ஸாம் மாநில அரசின் அதிகாரவரம்பில் உள்ளது.)

ஆணையத்தின் பரிந்துரையின் படி கிராமங்கள் சேர்த்தல், நீக்குதலுக்கு பிறகு போடோ பிராந்திய கவுன்சில் என்ற பெயர் ‘போடோ பிராந்திய பகுதி’ என அழைக்கப்படும். இதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 40ல் இருந்து 60 ஆக அதிகரிக்கப்படும்.

தற்போதைய உடன்படிக்கைய அமல்படுத்துவதை கண்காணிக்க கூட்டு குழு அமைக்கப்படும்          

போடோ பிராந்திய பகுதிக்கு வெளியே வாழும் போடோ இன மக்களுக்காக போடோ–கச்சாரி மேம்பாட்டு கவுன்சில் அமைக்கப்படும்.

அஸ்ஸாம் மாநிலத்தில் தேவநாகிரியில் எழுதும் போடோ மொழியும் அதிகாரபூர்வ மொழியாக ஏற்றுக் கொள்ளப்படும்.

போடோ மொழியில் பயிற்றுவிக்கும் பள்ளிகளை மேற்பார்வையிட தனி இயக்குநரகம் அமைக்கப்படும்

உபேந்திரநாத் பிரக்மா பெயரில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்

போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியின் எல்லா பிரிவுகளையும் சேர்ந்த ஆயுதம் தாங்கிய உறுப்பினர்கள், ஒரு மாதத்திற்குள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும்.

 இவ்வாறு சரணடைபவர்களுக்கு நிதி உதவி, அரசு மறுவாழ்வு திட்டங்கள், வர்த்தம், தொழில் பயிற்சி வழங்கப்படும். அத்துடன் தகுதிக்கு ஏற்ப அரசு வேலையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பது உட்பட மேலும் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.