நிதிஷ் குமார் அதிரடி

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2020

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ,,கூட்டணி ஆட்சி நடைபெறுகின்றது.ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.இவரது கட்சியில் சமீபத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. துணைத்தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோர், பொதுச் செயலாளராக இருந்த பவான் வர்மா ஆகியோரை நிதிஷ் குமார், சமீபத்தில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை வகுத்து கொடுப்பவர்.

இவர் 2014ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு தேர்தல் உத்திகளை வகுத்து கொடுத்தவர். அந்த தேர்தலில் பா.ஜ.,வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி பிரதமர் ஆனார். பவான் குமார் வெளியுறவுத்துறையில் பணிபுரிந்தவர். முதல்வர் நிதிஷ் குமாருக்கு ஆலோசகரகாவும், கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் இருந்தவர். கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பின ராகவும்  இருந்தவர். இவர்கள் இருவரும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக பார்லிமென்டில் வாக்களித்ததையும், டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பதையும் பகிரங்கமாக விமர்சித்து வந்தனர்.  

இதனால் கோபமடைந்த நிதிஷ் குமார், இருவரையும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். இது தொடர்பாக கட்சியின் முதன்மை பொதுச் செயலாளர் கே.சி.தியாகி வெளியிட்ட அறிக்கையில், பிரசாந்த் கிஷோர், பவான் வர்மா ஆகிய இருவரும் கட்சிக்கும், கட்சி தலைவருக்கு எதிராகவும் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதிலிருந்து இருவரும் கட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்பதும், கட்சியில் இருந்து வெளியேற விரும்புவதும் தெரிகிறது. நிதிஷ் குமார், பவான் வர்மாவுக்கு உரிய மரியாதை அளித்தார். அவர் கட்சி தலைவருக்கு கடிதம் எழுதியதுடன், தனிப்பட்ட முறை யில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை பகிரங்க மாக வெளிப்படுத்தினார். அவர் கட்சி கட்டுப்

பாட்டை மீறியுள்ளார். கட்சி கூட்டு பொறுப்பில் நடைபெறுகிறது. சிலர் தங்கள் எண்ணப்படி கட்சி நடக்க வேண்டும் என்று கருதுகின்றனர் என்று கூறியிருந்தார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இருவரும் டுவிட்டரில், நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறார் என்று கூறியுள்ளனர். பிரசாந்த் கிஷோர் டுவிட்டரில், நன்றி நிதிஷ் குமார். நீங்கள் பீகாரின் முதலமைச்சர் நாற்காலியை பலமாக பிடித்துக் கொண்டிருப்பதற்கு நன்றி. கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். பவான் வர்மா டுவிட்டரில், உங்களையும், உங்கள் கட்சி கொள்கை களையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், அவற்றை ஆதரிக்க வேண்டிய நிலையில் இருந்து என்னை விடுவித்தற்கு நன்றி. என்ன விலை கொடுத்தேனும் முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தங்களின் ஆசை நிறைவேற வாழ்த்துகின்றேன் என்று பதிவிட்டுள்ளார்.

பீகார் சட்டசபையின் பதவிகாலம் வரும் நவம்பர் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர்–நவம்பர் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த இருவரை நிதிஷ் குமார் நீக்கியுள்ளார்.

ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரசாந்த் கிஷோர். பவான் வர்மா ஆகியோர் நீக்கப்பட்டது பற்றி முதன்மை பொதுச் செயலாளர் கே.சி.தியாகி, ரீடிப் இணையதள நிருபர் சையத் பர்தாஸ் அஸ்ரப்பிற்கு அளித்த பேட்டி:

கேள்வி: பவன் வர்மாவும், பிரசாந்த் கிஷோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன?

பதில்: கடந்த சில நாட்களாக இருவரும் கட்சி தலைவர் நிதிஷ் குமாருக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துக்களை கூறி வருகின்றனர். பிரசாந்த் கிஷோர், நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள் கின்றீர்கள் என்று கூறியிருந்தார். எந்த கட்சி உறுப்பினராவது. தலைவரை பார்த்து ஆட்சேபகரமான, தேவையில்லாதவற்றை கூறுவார்களா. எனவே நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

கேள்வி: பவான் வர்மா நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன?

பதில்: அவர் நிதிஷ் குமாருக்கு எதிராக டுவிட்டரில் தொடர்ந்து பதிவேற்றம் செய்தார். நிதிஷ் குமார் கட்சி தலைவராக இருப்பதற்கு எதிராக கருத்து தெரிவித்தார். கட்சி விதிகளை பின்பற்றவில்லை. இது போன்று டுவிட்டரில் பதிவு செய்து இருக்க கூடாது. எனவே இருவரையும் கட்சியில் இருந்து நீக்கினோம்.

கேள்வி: நிதிஷ் குமாருக்கும், மற்ற இரண்டு பேருக்கும் இடையில் உள்ள பிரச்னை குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றியது. இதில் நிதிஷ் குமாரின் நிலை என்ன என்பது தெளிவாக இல்லையே?

பதில்: ஐக்கிய ஜனதா தளம், தேசிய குடிமக்கள் பதிவேடிற்கு எதிராக உள்ளது. பீகாரில் இது அமல்படுத்தப்படாது. தேசிய குடிமக்கள் பதிவேட்டை பொருத்த மட்டில், இதற்காக கேட்கப்படும் விபரங்கள் சரியானதாக இல்லை என கருதுகின்றோம். மக்களிடம் அவர்களின் பெற்றோர், தாத்தா,பாட்டிகள் பிறந்த இடம் பற்றி கேட்பது சரியானதல்ல. இது பற்றி மோடி அரசிடம் கூறியுள்ளோம். இது பற்றி எங்கள் கட்சி லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் பிரச்னைகளை எழுப்பியது. இது போன்ற கேள்விகள் தேவையற்றது என கூறினோம்.

கேள்வி: குடியுரிமை சட்ட திருத்தம் பற்றிய நிலை என்ன?

பதில்: ஜனாதிபதி குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் கையொப்பம் இட்டதற்கு பிறகு, இது தற்போது குடியுரிமை சட்ட திருத்தமாக மாறியுள்ளது. இது தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். காங்கிரஸ் தலைவர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி போன்றோர், இதை மாநிலங்கள் அமல்படுத்தி ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர். இதை பற்றி முழுமையாக தெரிந்தும் கூட, பிரசாந்த கிஷோரும், பவான் வர்மாவும், இது பற்றி கட்சி தலைவரிடம் (நிதிஷ்குமார்) பகிரங்கமாக கேள்வி எழுப்பினர். இதனால் தான் கட்சியில் இருந்து நீக்கினோம்.

கேள்வி: ஆனால் குடியுரிமை சட்ட திருத்தத்தில், முஸ்லீம்கள் சேர்க்கப்படவில்லை. அரசியல் சட்டம் 14 வது பிரிவு, யாருக்கும் அவரது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்க கூடாது என கூறுகிறது. இப்படி இருக்கையில் உங்கள் கட்சி எப்படி இந்த சட்ட திருத்தத்தை ஏற்றுக் கொண்டது?

பதில்: நாங்கள் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தவில்லை எனில், குடியுரிமை சட்ட திருத்தத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என தெளிவாக கூறியுள்ளோம். இந்த சட்ட திருத்தத்தில் “மத சிறுபான்மையினர்” என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளோம். நாங்கள் இதில் உடன்படிவில்லை.

கேள்வி: ஆனால் குடியுரிமை சட்ட திருத்தம், அரசியல் சட்டத்திற்கு முரணானதே?

பதில்: இது இப்போது சட்டமாகி விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது.

கேள்வி: உங்கள் கட்சி மதச்சார்பின்மையை கடைபிடிக்கும் கட்சி. உங்கள் கட்சி தலைவர்கள், ராம் மனோகர் லோகியா, ஜெயபிரகாஷ் நாரா யணன் போன்ற தலைவர்களின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள். இந்நிலையில் உங்கள் கட்சி பார்லிமென்டில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தில் இருந்து, உங்கள் கட்சி மதச்சார்பின்மையை கடைப்பிடிப்பதை பற்றி சந்தேகம் எழுந்துள்ளதே?

பதில்: நாங்கள் தலாக் பற்றிய விஷயத்தில் பார்லிமென்டில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். ஜம்மு–காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டத்தின் 370 பிரிவு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம். வி.பி. சிங் பிரதமராக இருந்த போது, (அப்போது ஜனதா தளத்தில் நிதிஷ் குமார் போன்றவர்கள் இருந்தனர்.) மதச்சார்ப்பின்மையை காக்க அரசையே துறந்துள்ளோம். எனவே நாங்கள் மதசார்பின்மையை கடைபிடிப்பதை பற்றி யாரிடமும் நற்சான்றிதழ் வாங்க தேவை யில்லை. நாங்கள் மதச்சார்பின்மையை கடைபிடிப்பவர்கள். முதலாளித்துவதற்கு எதிராக சர்வதேச அளவில் திரண்டவர்கள் சோசலிஸ்டுகள்.

கேள்வி: தேசிய குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி மக்களில் ஒரு சாராரிடம் எதிர்ப்பு உள்ளது. பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான நீங்கள், இது பற்றி நீங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசியுள்ளீர்களா?

பதில்: நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கம். பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக ஏற்றுக் கொண்டதற்கு பிறகு, அவரை பற்றி எப்படி விமர்சிக்க முடியும். டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் எழுப்பும் பிரச்னைகளில், எங்களுக்கு உடன்பாடு இல்லை. வாக்காளர்களிடம் நீங்கள் செய்த சேவை பற்றி கூறி வாக்கு கேட்க வேண்டும். இந்து–முஸ்லீம் பற்றிய பிரச்னைகளை எழுப்பி அல்ல. பீகாரில் எங்கள் அரசு செய்துள்ள வேலைகள், நிறை வேற்றியுள்ள திட்டங்களை பற்றி கூறியே வாக்கு கேட்போம்.

கேள்வி: டில்லி சட்டசபை தேர்தலில் உங்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே  ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பவான் வர்மா விரக்தி அடைந்தாரா?

பதில்: சென்ற முறை நாங்கள் தேர்தலில் போட்டியிட்ட போது, எங்கள் கட்சி உடைந்தது. இதனால் டில்லியில் பலவீனப்பட்டோமா (சிரிக்கிறார்)

கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் வெளியேறியுள்ளன. ஆனால் ஐக்கிய ஜனதா தளம் நீடிக்கின்றதே?

பதில்: தேசிய ஜனநாய கூட்டணியை விட்டு, ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி, சோனியா காந்தி கட்சியின் அடிமையாக முடியாது. இது எல்லா சோசலிஸ்ட், மதச்சார்பற்ற மாநில கட்சிகளுக்கு உள்ள பிரச்னை. நாங்கள் எப்போதும் மதசார்பின்மை கட்சியே. வி.பி. சிங் அல்லது ஜெயபிரகாஷ் நாராயணன் காலத்திலும் சரி,. இப்போதும் சரி நாங்கள் பரந்த மதச்சார்பற்ற அணியின் அங்கமாக இருக்கின்றோம். நீங்கள் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், மதச்சார்பற்றி அணிக்கு தலைவராக ஏற்றுக் கொண்டால், நீங்களும் அவருடன் சிறை செல்ல நேரிடும்.                

கேள்வி: இந்த தலைவர்களை (பவான் வர்மா, பிரசாந்த் கிஷோர்) கட்சியில் இருந்து நீக்கியுள்ளதால், வரும் சட்டசபை தேர்தலில் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

பதில்: பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமாரே வெற்றிக்கு அடிப்படை. அவர் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால், அந்த கூட்டணி ஆட்சி அமைக்கும். அவர் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தால், அந்த கூட்டணி ஆட்சி அமைக்கும். பீகாரில் அவரை பற்றி நல்ல அபிப்பிரயம் உள்ளது.

இவ்வாறு பேட்டியின் போது ஐக்கிய ஜனதா தளத்தின் முதன்மைச் பொதுச்செயலாளர் கே.சி.தியாகி கூறினார்.

நன்றி: ரீடிப் இணையதளத்தில் சையத் பர்தாஸ் அஸ்ரப்.