அரசியல் மேடை: ‘பிகே.’ பார்முலா திமுக.வுக்கு உதவுமா?

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2020

பிரசாந்த் கிஷோர் என்ற பெயர் கொண்ட ‘பி.கே.’ எனும் இந்த மனிதர்தான் இப்போதைய இந்திய தேர்தல் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாகப் பேசப்படுகிறார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த 43 வயதே நிரம்பிய இந்த பிரசாந்த் கிஷோர். 2011–ம் ஆண்டு முதலே இன்றைய பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார யுக்திகளை வடிவமைத்தவர். 2012–ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபை பொதுத்தேர்தலில் மோடி மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்பதற்குரிய வெற்றி சூத்திரங்களை வகுத்து தந்தவர் இந்த ‘பி.கே.’ தான் என்கின்றனர்.

2014–ம் அண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜ. மாபெரும் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பேற்பதற்கும் இவரது அரிய ஆலோசனைகளும் இவருடைய ‘ஐ–பேக்’ குழுவினரின் உழைப்பும், வழிகாட்டுதலுமே காரணம் என்றும் கூறப்படுவது உண்டு. 2015–ஆம் அண்டு பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவும், கடந்த ஆண்டு (2019) ஆந்திரப்பிரதேச சட்டசபைப் பொதுத்தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கும், இந்த ‘பி.கே.’வின் அரசியல் சாணக்கியத்தனம்தான் காரணம் எனப் பரவலாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து, இவரது மவுசு இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானது.

இதுவரையிலும் மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை பேசி, அவர்களுக்காக போராடி அவர்களுக்கு நன்மை செய்வதாக, அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பளிப்பதாக உறுதிகூறி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த அரசியல் கட்சிகள், ஆட்சிக்கு வந்து மக்களுக்கு சேவை(!) செய்தே தீருவேன் என்ற தீவிர கொள்கை(?)ப்பிடிப்புள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தல் வெற்றியை தேடித்தரும் ‘பிதாமகன் பி.கே.’ என்று தேடத் தொடங்கி விட்டன.

இப்போது நடைபெறுகிற டில்லி சட்டசபை தேர்தலில் கூட, இரண்டுமுறை ஆட்சியை பிடித்த ‘ஆம் ஆத்மி’ கட்சி,ஒரு கணிசமான தொகையை கொடுத்து பி.கே.வை ஒப்பந்தம் செய்து அவரது வழிகாட்டுதலில் அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வெற்றி முடிவுக்காக காத்திருக்கிறது.

தமிழ் நாட்டில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை அணுகிய பி.கே., வெறும் கன்சல்டிங் பீஸாக மட்டும் சில கோடிகளை பெற்றுக் கொண்டு சில பல அரசியல் தேர்தல் ஐடியாக்களை கூறி சென்றுள்ளதாக கூறுகின்றனர்.

வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான அளவில் ம.நீ.ம.வின் கட்டமைப்பு வலுவாக இல்லாததால், ஜெகன் மோகன் ரெட்டி போல, கமல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க, இப்போதைக்கு வாய்ப்பில்லை எனக் கூறி பி.கே. எஸ்கேப்பாகி விட்டார்.

உடனே ரஜினி தரப்பில் பி.கே.வை வளைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் அவரை அணுகி உள்ளனர். இன்னும் அரசியல் கட்சியே தொடங்காத நிலையில், மக்களின் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது என அறிய முடியாத சூழலில், வெறும் யுக்திகள் மட்டுமே வெற்றிக்கு உதவாது என்று பி.கே. தெளிவாக கூறிவிட்டு, அவர்களுக்கும் டாட்டா காட்டி சென்று விட்டார்.

அடுத்து யார் ‘பி.கே.’வை தூக்குவது என்ற போட்டி அதிமுக மற்றும் திமுக.வினரிடையே ஏற்பட்டுள்ளது. இதில் திமுக வெற்றி பெற்று விட்டது. சுமார் 350 கோடி ரூபாய் வரையிலும் கூலி பேசி, தேர்தல் வேலைக்கு பி.கே. அண்ட் கம்பெனியை திமுக நியமித்து விட்டதாம். இதை திமுக தலைவர் ஸ்டாலினே வெளிப்படையாக அறிவித்து விட்டார். இது திமுக.வின் முக்கிய நிர்வாகிகள் உட்பட அடி மட்ட தொண்டர்கள் வரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வலுவான கட்சி கட்டமைப்பும், தொண்டர்கள் பலமும், மக்கள் செல்வாக்கும் உள்ள கட்சியாக உள்ள திமுக, ஒரு வட நாட்டு ஆசாமியின் ‘மூளை’  பலத்தை முதலீடாக கொண்டு தேர்தலை எதிர்கொள்வதா? இதை விட கேவலம் வேறு எதுவும் இல்லை என்று திமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே புலம்புகின்றனர். ஒரு சிலர் இணையதளங்கள் மூலமாகவும் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். ‘பி.கே.’ கம்பெனிக்கு கொட்டிக்கொடுக்கிற கோடிகளை திமுக.வின் கிளை செயலாளர் உள்ளிட்ட அடிமட்ட நிர்வாகிகளுக்கு கொடுத்தால் அவர்கள் தீவிரமாக களப்பணியாற்றி வாக்குகளை கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்று கூறுகின்றனர்.

கடந்த 2016–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை முன்னிட்டு ‘நமக்கு நாமே’ திட்டத்தை வடிவமைத்து கொடுத்த சுனில் என்ற அரசியல் அறிவாளிப் பிரமுகரின் ஐடியாவே, வெற்றிக்கு வழிவகுக்கவில்லை.

இந்த நிலையில், இந்த ‘பி.கே’ எனும் ஆசாமி வழங்கும் ஆலோசனையும், அவர் வகுத்தளிக்கிற தேர்தல் யுக்தியும், பிரச்சார பார்முலாவும் தேர்தல் – அறிக்கையும், வாக்குறுதிகளும் இங்கு எடுபடுமா? என்பதில் மற்ற எல்லோரையும் விட திமுகவினருக்கே பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஐந்து முறை தேர்தலில் வெற்றி பெற்று  ஆட்சி அமைத்த கட்சி  இப்போதும் வலுவான கட்டமைப்புள்ள கட்சி தொண்டர்களை நிர்வாகிகளை, மக்களை நம்பாமல் – தேர்தல் கார்பரேட் ஓனரான ‘பி.கே’ வை நம்புகிறது. இந்த நம்பிக்கை கை கொடுக்குமா? திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா? 2021, தேர்தல் கள நிலவர யதார்த்தம் என்ன? என்று பல கேள்விகள் எழுகிறது.

2021 தமிழக சட்டசபை தேர்தல் என்பது எல்லா கட்சிகளுக்குமே ‘ஆசிட்’ டெஸ்ட்தான். ஆட்சிக்கட்சியான அதிமுக 2011, 2016 தொடர் வெற்றியை அடுத்து மூன்றாவது முறையாகவும் வெற்றி பெற வேண்டும் என முயற்சிக்கிறது. அதற்கான வியூகங்களை இப்போதே வகுக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க, மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்கள் இல்லாத நிலையில், இரட்டை தலைமையின் பிரச்சாரத்தில் 2021லும் தொடர் வெற்றி சாத்தியமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

ரஜினி புதிய அரசியல் கட்சியை தொடங்கி களம் காண்கிறார். ஏற்கனவே களத்தில் உள்ள கமல் இந்த தேர்தலை எப்படி சந்திக்க போகிறார் இருவரும் கை கோர்ப்பார்களா? கை கோர்த்தால் ஆட்சி அமைக்கக் கூடிய அளவிற்கான  வெற்றி இவர்களுக்கு சாத்தியமா? நிச்சயமாக கள எதார்த்தம் அப்படி இல்லை.

தமிழ்நாட்டில் எத்தனை அணிகள் இந்த தேர்தலை சந்திக்கப் போகிறது என்பதே தெரியவில்லை. ஏற்கெனவே உள்ள அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி அப்படியே தொடருமா? அல்லது இந்த கூட்டணிகளில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அணிமாறுமா? இடம் மாறுமா? புதிய அணிகளை உருவாக்குவார்களா? என்பதும் மிகக் குழப்பமாக உள்ளது. எப்படி இருந்தாலும், கூட்டணி பலம்தான் 2021 தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும், அதிலும் அதிமுக அணி, திமுக அணி இதில் யார் பலம் வாய்ந்த, வாக்கு வங்கி உள்ள கட்சிகளை கொண்டுள்ளார்களோ அந்த அணிதான் வெற்றி பெற கூடுதல் வாய்ப்பு உள்ளது.

ரஜினி தலைமையில், கமல் தலைமையில் அல்லது மாற்றுத் தலைமையின் கீழ் அணிகள் அமைந்தால், அவை அதிமுக, திமுக வாக்கு வங்கிகளை ஓரளவு பிரிக்கப் பயன்படுமே தவிர, முழுமையான வெற்றிக்கு வாய்ப்பில்லை.

1989–ம் ஆண்டு திமுக, அதிமுக, ஜெ.ஜா–, காங்கிரஸ் என தனித்தனியாகப் போட்டியிட்ட சூழலில் 13 ஆண்டுகளாக ஆட்சிக்கு வரமுடியாத திமுக மீண்டும் வெற்றி பெற்றதை போல, வாக்குகள் பல அணிகளுக்கும் சிதறி, இப்போதுள்ள திமுக அணிக்கு வெற்றியை தருவதற்கு கூட வாய்ப்புள்ளது. அது, மக்களின் கையில் உள்ளதே தவிர பிரசாந்த் கிஷோரின் ‘மூளை’யில் இல்லை என்பதை திமுகவினரும் உணர்வார்கள்.