துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 67

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2020

சூத்திரங்கள் சொல்லும் சூட்சுமம்!

சுருக்கமாகச் சொல்லி விரிவாக விளக்குவது ‘சூத்திரம்’ எனப்படும். குறுகிய அளவிலான சொற்களால், பெருகிய பொருள்களை கூறும் நூல்களே சூத்திரங்கள்.

கற்ப சூத்திரங்கள், சிரெளதம், கிருஹ்யம், தருமம் என்று மூன்று வகைப்படும். வேதங்களில் விதித்திருக்கும் யாகங்களை நடத்த வேண்டிய முறைகளை சிரெளத சூத்திரங்கள் தெரிவிக்கின்றன.

பிராமணங்களில் ஆங்காங்குள்ள கரும விதிகளை முறையுடன் ஒன்று சேர்த்து யாகங்களை அங்க பரிவாரங்களுடன் செய்வதற்குரிய போதனைகளை இச்சூத்திரங்கள் கற்பிக்கின்றன. அதனால் இவைகளை வேதங்களுக்கு அடித்தபடியான பழமை வாய்ந்த நூல்கள் என்று சொல்வதுண்டு.

சூத்திரங்கள் போன்ற எளிய நடையிலுள்ள பல வாக்கியங்களை பிராமணங்களிலும், ஆரண்யகங்களிலும் காணலாம்.

செளனகர், ஆச்வலாயனர் உள்ளிட்ட முனிவர்களும் இச்சூத்திர வாக்கியங்களை தங்களுடைய நூல்களில் எடுத்துக் காட்டியுள்ளனர். எனவே, சூத்திரங்களுடைய உற்பத்திக்கு காரணமாகிய கிரந்தங்கள், பிராமணங்களும், ஆரண்யகங்களுமாகும்.

ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு கிளைக்கும் (சாகை) பல சிரெளத நூல்கள் உண்டு. ரிக்வேதத்திற்கு ஆச்வலாயனரும், சாங்காயனாரும் இயற்றிய சிரெளத நூல்களும், ஜைமீனிய சிரெளத சூத்திரமும் இருக்கின்றன.

கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்ரீய சாகைக்கு (கிளைக்கு) – போதாயனர், ஆபஸ் தம்பர், பரத்வாஜர், சத்தியாஷாடர் ஆகிய முனிவர்களும், மைத்திரா வணீய சாகைக்கு மனுவும், சுக்ல யஜூர் வேதத்திற்கு காத்தியாயனரும் சிரெளத சூத்திரங்கள் இயற்றியுள்ளனர்.

அதர்வ வேதத்திற்கு வைதான சிரெளத சூத்திரம் இருக்கின்றது. சாமவிதான பிராமணம், ஆர்வேஷய கல்பம் ஆகியவை வேத பாகங்களாயினும் அவைகளிலும் அடங்கியிருக்கும் விஷயத்தை கருதி அவைகளை கற்ப சூத்திரங்களுடைய கூட்டத்தில் உட்படுத்துவது தகும். அவை பிராமணங்களுக்கும் கற்ப சூத்திரங்களுக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தத்தை வெளியாக்குகின்றன.

சிரெளத நூல்களின் ஒருபாகமே சுல்ப சூத்திரம் என்பது, அது யாக சாலை, வேதி ஆகியவற்றின் நீளம், அகலம் முதலியவைகளை பற்றி சொல்கிறது. ஆபஸ் தம்ப கற்ப சூத்திரத்திலும் போதாயன கற்ப சூத்திரத்திலும் சுல்ப சூத்திரங்கள் அடங்கியுள்ளன. சிரெளத சூத்திரங்களைப்போல் கிருஷ்ய சூத்திரங்களும் வேதத்தின் பொருளையும் பயன்களையும் குறிக்கின்றன. இரு பிறப்பாளனாகிய ஒருவனுக்கு கருத்தரிப்பதிலிருந்து இறுதிச் சடங்கு வரையிலும், நடத்த வேண்டிய சம்ஸ்காரங்களெல்லாம் அவற்றில் சொல்லப்பட்டுள்ளன. அதனால் அவை பாரதீயர்களுடைய பழைய ஒழுக்க வழக்கங்களுக்கும், அறிவுக்கும், கடமைக்கும் முதல் நூல்கள் என்று சொல்கிறார்கள்.

ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு சாகைக்கும் பல கிருஷ்ய சூத்திரங்கள் உண்டு. சிரெளத நூல்களின் தொடர்புகளாகவும் கிருஷ்ய நூல்கள் இருக்கின்றன. ரிக்வேதத்தை சேர்ந்த ஆச்வலாயன கிருஷ்ய சூத்திரமும், களெஷீதகி கிருஷ்ய சூத்திரமும், கிருஷ்ண யஜூர் – வேதத்தை சேர்ந்த ஆபஸ்தம்ப போதாயன – பரத்வாஜ இரணிய கேசி கிருஷ்ய சூத்திரங்களும், மைத்திராணீய சாகைக்குரிய மானவ கிருஷ்ய சூத்திரமும், சாமவேதத்தை சேர்ந்த ஜைமீனிய கிருஷ்ய சூத்திரமும், சிரெளத சூத்திரங்களுடைய அனுபந்தங்களே. இவை தவிர மிகப் பிரசித்தி பெற்ற கிருஹ்ய சூத்திரங்கள் சுக்ல யஜூர் வேதத்தை சேர்ந்த பாரஸ்கர கிருஹ்ய சூத்திரமும், சாம வேதத்தை சேர்ந்த கோபிலகாதிர கிருஹ்ய சூத்திரங்களும், அதர் வேதத்தை சேர்ந்த கெளசிக கிருஹ்ய சூத்திரமும் ஆகும்.

இதுவரையிலும் நாம் அறிந்துள்ள வேதபாகங்களில் இல்லாத மந்திரனா் களின் மேற்கோளும் இவற்றில் காணப்படுவதால் கிருஹ்ய சூத்திரங்

கள் அகப்படாத பல வேத பாகங்களை கண்டுபிடிக்க உதவுகின்றன. தரும சூத்திரங்கள் தரும சாஸ்திரத்தின் ஆரம்ப தசையை குறிக்கின்றன. ஆனால், மனு ஸ்மிருதி முதலிய சில தரும சாஸ்திரங்கள் செய்யுள் நடையில் இயற்றப்பட்டிருந்த போதிலும் தரும சூத்திரங்களுக்கு முன்பாகவே அவை இருந்தன.

ஆபஸ்தம்ப தரும சூத்திரம், போதா யன தரும சூத்திரம், ஹிரணியகேசி தரும சூத்திரம் என்ற மிகப்பிரபலமான தரும சூத்திரங்கள் கற்ப சூத்திரங்களின் கடைசி பாகங்களாக இருக்கின்றன. ஆகை யால், இவைகளை காட்டிலும் கெளதம தரும சூத்திரம் பழமை வாய்ந்தது. இது ஒரு சுதந்திர நூல். இது சாம வேதத்தில் ராணாயனீய சாகையை சேர்ந்தது. இது 28 அத்தியாயங்களை கொண்டது. இதன் காலம் சுமார் கி.மு.600லிருந்து கி.மு.300க்கு உட்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 30 அத்தியாயங்களை உடைய ஹாரீத தரும சூத்திரமும், யஜூர் வேதத்தை சேர்ந்த பழமை வாய்ந்த நூலாகும்.

மானவ தரும சூத்திரம் எனும் நூல் மானவ தரும சாஸ்திரத்தை பின்பற்றி எழுதப்பட்ட பிற்காலத்திய நூல் என சிலரால் கருதப்படுகிறது. வசிஷ்ட தரும சூத்திரம் ரிக் வேதத்தை சேர்ந்ததாயினும், அதை மற்ற வேதக்காரர்களும்  படித்து வருகின்றனர். அதில் 30 அத்தியாயங்கள் உண்டு. வசிஷ்டர் மனுவின் வாக்கியத்தையும், மனு, வசிஷ்டரின் வாக்கியத்தையும் எடுத்து பேசியுள்ளனர். இருவருடைய நூல்களிலும் நாளடைவில் புதிதாக சேர்ந்த பாகங்கள் இருப்பதால் அப்படி எடுத்து சொல்லுதல் ஏற்பட்டிருக்கலாம். சங்க தரும – லிகித சூத்திரங்கள் வாஜ ஸனேயி சாகையை சேர்ந்தவை. அவற்றில் சில காரிகைகளும் உண்டு. காரிகைகளாக மட்டும் உள்ள ஸ்மிருதிக்கும் சூத்திரத்திற்கும் விஷயத்தில் வேற்றுமை உண்டு. மேலும் விஷ்ணு தரும சூத்திரம், வைகானஸ தரும சூத்திரம், ஔசனஸ தரும சூத்திரம், இவைகளும் தரும சூத்திரங்களை சேர்ந்தவைதான். கெளடில்யரின் அர்த்த சாஸ்திரமும் பல தரும சாஸ்திர விஷயங்களை சொல்கிறது. தரும சூத்திரங்களிலும் உள்ள முக்கிய விஷயங்களை ஆசாரம், விவகாரம், பிராயச் சித்தம் என மூன்றாகப் பிரிப்பதுண்டு.

வாழ்வியல் கோட்பாடுகளை நெறிமுறைகளை, சடங்கு, சம்பிரதாயங்களை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதற்காகவே சாஸ்திரங்களும், சூத்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில சூத்திரங்களை கலைக்களஞ்சியம் மூலம் நாம் அறிய முடிந்தது.