மறுசுழற்சி பிளாஸ்டிக் டைல்ஸ்

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2020

டில்லியைச் சேர்ந்த ஸ்டார்ட்–அப் நிறுவனம் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தரையில் பதிக்கும் வண்ணமயமான டைல்ஸ்களை தயாரிக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக ‘சியானா எகோயுனிபைட் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ ( Shayna EcoUnified India Pvt. Ltd ) என்ற நிறுவனமே, இந்த கழிவு பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வண்ணமயமான டைல்ஸ்களை தயாரிக்கிறது.

இதன் நிறுவனர் பராஸ் சல்யுஜா, இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிக சிறந்த பொருட்களில் ஒன்று பிளாஸ்டிக். மக்கள் சமூக வலைத்தளங்களில் பிளாஸ்டிக் பற்றி குறை கூறுகின்றனர். பருவநிலை மாற்றம் குறித்து கவலை தெரிவிக்கின்றனர். ஆனால் இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? இவர்கள் எப்போதும் சுற்றுச்சுழலை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுத்தில்லை என்பது தான் என்கின்றார்.

2015ல் இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் வீரர்களின் முகாமிற்கு சென்றுள்ளார். அங்குள்ள சாலைகளில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடந்துள்ளன. அவை சுற்றுலாபயணிகள் பயன்படுத்திய பிறகு வீசி எறிந்த பொருட்கள். “நான் அங்கிருந்து திரும்பிய பிறகு, அங்கு கிடந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் என்னை கவலை கொள்ளச் செய்தது” என்கின்றார் பராஸ்.

வணிகவியல் (காமர்ஸ்) பட்டப்படிப்பு படித்த பராஸ்சிற்கு பிளாஸ்டிக் பற்றி அதிகம் தெரியாது. அவர் வியட்நாமிற்கு சென்ற போது, அங்கு பிளாஸ்டிக்கை சிறந்த முறையில் பயன்படுத்துவதை பற்றி அறிந்தார். “வியட்நாம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடு என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் தெருக்களை சுத்தமாக வைத்திருப்பதை பார்த்து மெய்சிலிர்த்து போனேன் என்கிறார் பராஸ்.

அதே நேரத்தில் பயன்படுத்திய பிளாஸ்டிக்குகளை மறு சுழற்சி செய்து வேறு பொருட்களை தயாரிப்பது சாதாரண விஷயமல்ல. இவர் முதலில் சந்தித்த சவால், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து தயாரிக்கும் பொருட்கள் ஐந்து வருடங்களுக்கும் மேல் உடையாமல் பயன்பட வேண்டும் என்பது தான்.  

தற்போது மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தயாரிக்கப்படும் நாற்காலி, மேஜை போன்ற பொருட்கள் ஐந்து வருடம் வரை உடையாமல் பயன்படுத்த முடியும். நான் ஐந்து வருடத்திற்கும் மேல் பயன்படும் பொருட்களை தயாரிக்க எண்ணினேன். இல்லையெனில் இவற்றை யார் விலை கொடுத்து வாங்குவார்கள்? என்று கேட்கின்றார் பராஸ்.

இவர் பிளாஸ்டிக், பாலிமர் போன்றவைகள் பற்றி தெரிந்து கொள்ள அரசு அதிகாரிகள், தேசிய இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்த (National Physical Laboratory) விஞ்ஞானிகளை சந்தித்து பேசினார். அப்போது மறு சுழற்சி செய்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தி டைல்ஸ் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஆர்வம் கொண்ட பராஸ், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சியிலும், மேம்பாட்டிலும் ஈடுபட்டார். அவரது நிறுவனமே டைல்ஸ்களை தயாரிக்கும் உரிமையையும் பெற்றுள்ளது.

“தற்போது உலகத்தில் ஏழுவிதமான பாலிமர்கள் உள்ளன. பொதுவாக இதில் இரண்டு அல்லது மூன்று வித பாலிமர்களையே டைல்ஸ் தயாரிக்க பயன்படுத்துகின்றோம். அதிக அடர்த்தி கொண்ட பாலிதீன் [High-density polyethene (HDPE)], பாலிபுரோபிலின் [Polypropylene (PP)], குறைந்த அடர்த்தி கொண்ட பாலிதீன் [Low-density Polyethylene (LDPE)], ஆகியவைகளை, மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக்குடன் 15 சதவிகிதம் சேர்த்து பயன்படுத்துகின்றோம். இவற்றை டைல்ஸ்கள் நீடித்து உழைக்கவும், கடினமாக இருக்கவும் பயன்படுத்துகின்றோம்” என்கின்றார் பராஸ்.

இவர் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை, இவற்றை சேகரிப்பவர்களிடம் இருந்து வாங்குகின்றார். அவற்றை பொடிப் பொடியாக்கி, கழுவி சுத்தம் செய்கின்றனர். பிறகு இவற்றுடன் 15 சதவிகிதம் பாலிதீன் போன்றவைகளை கலந்து டைல்ஸ்களை உற்பத்தி செய்கின்றனர். இவரது டைல்ஸ் தொழிற்சாலை காஜியாபாத்தில் உள்ளது. இவர் தற்போது தலைநகர் டில்லியில் உள்ள மூன்று வியாபாரிகளிடம் இருந்து கழிவு பிளாஸ்டிக் பொருட்களை வாங்குகின்றார். இவரது தொழிற்சாலையில் தினசரி ஒன்றுக் கொன்று இணைக்கும் பத்தாயிரம் பேவர் டைல்ஸ்களையும், 4,500 சதுர டைல்ஸ்களையும் தயாரிக்கின்றனர். 1 கிலோ கழிவு பிளாஸ்டிக்கில் இருந்து 1 சதுர அடிக்கு டைல்ஸ்களை தயாரிக்கின்றனர்.

நாங்கள் தயாரிக்கும் டைல்ஸ்கள் வலையாத கடின தன்மை கொண்டது. பாசி போன்ற நுண்ணுயிர்கள், பாக்டீரியாக்கள் படியாது. 140 டிகிரி வெப்பம் வரை தாங்க கூடியது. இதை 25 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையிலும் பயன்படுத்தலாம். இரண்டு டன், நான்கு டன் பாரத்தை தாங்க கூடியது. இவை குறைந்தபட்சம் 50 வருடம் வரை நீடித்து உழைக்கும் என்கின்றார் பராஸ்.

இவரது நிறுவனம் 2018ல், ஹைதரபாத்தில் உள்ள ‘டாக் மாநகராட்சி பூங்கா’வில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் தயாரான டைல்ஸ்களை பதித்துள்ளது. இந்த பூங்காவில் பச்சை, ஊதா, பிங்க் நிற டைல்ஸ்களை பதித்துள்ளனர். இது பார்ப்பவர்களின் கண்ணை கவரும் வகையில் உள்ளது. அத்துடன் எல் ஓரியல் இன்டர்நேஷனல் ஹோட்டல், ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆகிய இடங்களிலும் டைல்ஸ்களை பதிந்துள்ளனர். குர்கான் நகரத்தில் டைல்ஸ்களை பதிக்கும் டெண்டரையும் பெற்றுள்ளனர்.

இவரது நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனங்களையும், இந்த நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்ச்சி நிதியை கையாளு பவர்களையும் அணுகியுள்ளனர். இந்த நிறுவனங்கள் மறுசுழற்சி செய்ய தேவையான பிளாஸ்டிக்குகளை இவர்களுக்கு வழங்கும். இதை பயன்படுத்தி இவர்கள் டைல்ஸ்களை தயாரித்து கொடுக்கின்றனர். பராஸின் சியானா எகோயுனிபைட் நிறுவனம், இதுவரை 340 டன் கழிவு பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தி பல வண்ணங்களில் டைல்ஸ் களை தயாரித்துள்ளது.

இவரது புதிய முயற்சியை பலர் பாராட்டினாலும், மக்களிடம் பிளாஸ்டிக் பயன்படுத்துவது பற்றி போதிய விழிப் புணர்வு இல்லை என்கின்றார் பராஸ். மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக்கால் தயாரித்த பொருட்களை பயன்படுத்துவது கேவலம் என்று நினைக்கின்றனர் என்று கூறும் பராஸ், இரண்டு கோடி ரூபாய் செலவு செய்து வீடு கட்டுபவர் விலை அதிகமுள்ள இத்தாலி மார்பிளை பயன்படுத்துவதையே விரும்புகின்றார். பிளாஸ்டிக் பயன்படுத்த விரும்புவதில்லை என்கின்றார்.

இவர் இது போன்ற அதிக செலவில் வீடு, அலுவலகம் கட்டுபவர்களை அணுகவும் திட்டமிட்டுள்ளார். எதிர்காலத்தில் சுவற்றில் பதிக்கும் விலை உயர்ந்த டைல்ஸ்களை போல், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் தயாரான பலவித டைல்ஸ்களை தயாரிக்கும் திட்டத்திலும் உள்ளார்.

மக்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் பொருட்களின் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றை விற்பனை செய்ய அரசின் உதவிகள் தேவை. இவர் அரசின் உதவியுடன் நாடு முழுவதும் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வும் திட்டமிட்டுள்ளார். பெரும்பாலோருக்கு பெட் பாலிமர் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யலாம் என்பது தெரியவில்லை. இது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது என கருதுகின்றனர் என்கின்றார் பராஸ் சல்யுஜா.

நன்றி: தி லாஜிகல் இன்டியன் இணைய தளத்தில் பலாக் அகர்வால்.