கலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 102

பதிவு செய்த நாள் : 09 பிப்ரவரி 2020பனிபடர்ந்த மலையில் எழுந்த தேசபக்தி வெள்ளம்! 

 ‘ரத்த  திலகம்’ படத்தில்,   கண்ண தாசனின் பிரகடனப் பாடலான ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’, வெற்றி அடைந்தது.

கல்லூரி வாழ்க்கை நிறைவடைந்து இனிய நினைவுகளுடன் மாணவர்கள் விடைபெறும் பாடலான ‘பசுமை நிறைந்த நினைவுகளே’, இந்த வகைப்  பாடல்களில் ஈடு இணையில்லாத ஒன்றாக அமைந்தது.

இவற்றைபோலவே, தமிழ் சினிமா சூழலில் தேசபக்தியை அற்புதமாக முழங்கும்   வண்ணம் உருவானது, ‘பனிபடர்ந்த மலையின் மேலே’. ‘ரத்த திலகம்’ எடுத்ததற்கான முதல் நோக்கம், முக்கிய நோக்கம், தேசபக்தியை வெளிப் படுத்துவதுதான்.  அந்த உணர்ச்சியை சிகரத்தில் வைத்தது இந்த பாடல்.

சீனாக்காரன் இந்தியா மீது அநியாய மாக ஆக்கிரமிப்பு செய்து இந்தியரை  பதறடித்த போது, தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் தேசபக்தி படம் எடுக்கத் துணிந்து முதல் இந்திய சினிமாக்காரரான கண்ணதாசன், தன்னுடைய உணர்ச்சியை எல்லாம் கொட்டி, ‘பனி படர்ந்த மலையின் மேலே ‘பாடலை கல்லூரிப் படிப்பு முடிந்த தருணத்தில், ஒருவரையொருவர் முதன் முறையாகப் புரிந்துகொண்ட குமாரும், கமலாவும் (சிவாஜி, சாவித்திரி), உடனே பிரியவேண்டிய நேரம் வருகிறது!

கமலா, நான் எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டசாலி! நீ இங்கு இருந்த காலத்தில் எல்லாம் உன்னுடன் சண்டைபோட்டுக்கொண்டே இருந்தேன்...நீ என்னை பிரிந்துபோகும் நேரத்தில் உன்னை உணர்ந்து கொண்டிருக்கிறேன்!  

கமலா, காலமெல்லாம் உன்னுடன் வாழவேண்டும்...காரிருளும் வெண்பகலும் போவது தெரியாமல் போகவேண்டும். உனது பணிவிடையில் உலகத்தையே மறந்து  ஓர் இரவு கனவு கண்டேன். அது ஒரு பொழுதுகூட நிலைக்கவில்லையே கமலா...., என்று உருகுகிறான் குமார்.

தன்னுடைய பெற்றோர் வசிக்கும் சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்குச் சென்றுவிடுகிறாள் கமலா. அவள் சீனாவில் பிறந்த இந்தியப்பெண்.

இந்த நிலையில்தான், அக்டோபர் 20, 1962 அன்று இந்தியா மீது சீனா போர் தொடுக்கிறது. மும்பை கம்பெனியில் வேலைக்குப் போகவிருந்த குமார், இந்திய ராணுவத்தில் சேர்கிறான். விரைவில், மேஜர் குமார் வடகிழக்கு  நேபாளத்திற்கு அனுப்பப்படுகிறான். அந்த எல்லைப்புறத்திலே ஒரு நாள்.... அவனுக்குப் பாரதத்தாய் தரிசனம் தருகிறாள்! எல்லை பகுதியிலே எல்லை இல்லாத தேச பக்தி பீறிட்டெழுகிறது! இந்த அனுபவத்தைத்தான் ‘பனிபடர்ந்த மலையில் மேலே’ என்ற பாடலில் கண்ணதாசன் விவரமாக, உணர்ச்சி பொங்க விரித்துரைத்தார்.

பாடல் தெரிவிக்கும் சங்கதிகள் என்ன? போர்க்களத்தில் பீரங்கிகளின் சத்தம் சற்று ஓய்ந்திருந்த ஒரு நாள், பனிச் சிகரங்களின் மத்தியில் அந்த போர் வீரன் உரைந்துபோய் படுத்திருந்த  கனிதொடுத்த மாலை போலே அவன் முன்னே ஒரு கன்னிவந்தாள் !

குனிந்து நின்ற அந்தப் கன்னியின் கண்களில் கண்ணீர் பெருகுவதைக் கண்டு கலங்கி  போனான் பாரதப் போர்வீரன். அவள் அழும் போது, அவளோடு அகிலமே சேர்ந்து அழுவதுபோல் இருந்தது அந்த வீரனுக்கு! பாரதத்தாயின் இத்தகைய சோகம், அந்த  பாரதப்புத்திரனின் மனதை வாட்டுகிறது. தோரணங்கள் ஆடுகிற தூயநகர் வீதியிலே ஊர்வலமாய் உன்னை உடன் அழைத்து நான் வருவேன் என்று   தன்னுடைய பற்றுதலை வெளிப் படுத்துகிறான்.

அதுவரை கவிழ்ந்திருந்தவளின் வதனம் நிமிர்கிறது!

யார் மீதும் போர் தொடுக்க எண்ணாத பாரத பூமியின் மாண்பை, பாரத தேவி வெளிப்படுத்துகிறாள்:  ‘இமயம் முதல் குமரி வரை என் இதயத்தையே திறந்து வைத்தேன். உலகுக்கெல்லாம், (கற்) கண்டு, கறந்த பால் கதலியொடு விருந்தளித்தேன்,  பசியாற ஓடி வந்த பத்துப் பேர் மத்தியிலே பகையாற ஒருவன் வந்த பாவத்தை என்ன சொல்வேன்...’

அதாவது, இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள்  வேஷம் போட்டுவிட்டு, பாரதம் அசந்திருந்த பொழுது, நட்புறவை நடுங்க வைக்கும் முறையில் சீனா இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாவத்தை என்ன சொல்வேன் என்று பொருள்.

 இதில் இந்தியா அடைந்த அதிர்ச்சியை, இந்தியர்கள் அனுபவித்த மனவேதனையை, பதட்டத்தை, பாரதத்தாயின் ஓலமாகக் கண்ணதாசன் முன்வைத்தார். யாரை அடித்தேன், யார் குடியை நான் கெடுத்தேன், சீர் சுமந்து சென்றதுதான் செய்ததொரு பாவம் என்றாள்.

அன்னை இப்படி உரைத்த மொழிகளை எல்லாம் பிள்ளை கவனமாகக்  கேட்ட பின்னர், மனதில் பெருந்துணிவு மோதி வந்ததாம்.

பாரதம் சாதாரண பூமியா? இங்கே வீரமுண்டு, வெற்றிக் கொள்ளும் ஞானம் உண்டு,  சாரம் மிக்க தர்மம் உண்டு. இவற்றோடு, தர்மம் மிக்க  தலைவர் உண்டு  என்கிறார் கண்ணதாசன். அன்றைய பிரதமர் நேருவை சுட்டுவதற்கான வரி இது.

நேருவின் தவறான சில கொள்கை களால்தான் இத்தகைய ஒரு பெரிய போரை இந்தியா எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது என்றாலும், தேசத்தின் அன்றைய தலைவரைக் குறை கூற  அதுவும் யுத்தத்தின் காயங்கள் ஆறாமல் இருந்த காலகட்டத்தில்.....?!

ஒரே பாட்டில் பல உணர்வுகளை வைத்திருந்தார் கண்ணதாசன். இவை அத்தனையையும் வாத்திய இசையோடு சேர்த்து தொடுக்கப்பட வேண்டும் என்றால், பத்து பதினைந்து நிமிடங்கள் பிடிக்குமே! என்ன செய்வது? கண்ண தாசனோடு அமர்ந்துகொண்டு, எல்லா வற்றையும் கட்டுக்கோப்பாகவும், உணர்ச்சிமயமாகவும், இனிமையாகவும், அதே நேரத்தில் சுருக்கமாகவும் வெளிப்

படுத்த பாடலுக்கான இசை வாகனத்தை அமைத்தார் மகாதேவன். இதைச் செய்ய அவருடைய லேசர் பார்வைக்கு சில நிமிடங்கள்தான்  ஆகின. பாடல்களுக்கு இசையமைக்க தாய்லேண்ட் செல்பவர் களைப் பார்க்கிறோம்.... மகாதேவனோ தாய்லேண்டை (தாய்நாட்டை) தான் இசை அமைத்த பாடலுக்குள்  சில நிமிடங்களில் கொண்டு வந்துவிட்டார்!

இந்த வகையில், ‘பனிபடர்ந்த மலையில் மேலே’ பாடலின் இசையை கட்டமைக்க  அவர் பயன்படுத்திய உத்திதான் என்ன?

                                           (தொடரும்)