தஞ்சை பெரியகோவிலில் இன்று காலை குடமுழுக்கு விழா நலமுடன் நிறைவேறியது

பதிவு செய்த நாள் : 05 பிப்ரவரி 2020 08:54

தஞ்சாவூர்,

தஞ்சை பெருவுடையார் ஆலய திருக்குடமுழுக்கு விழா இன்று காலை 9:00 மணி முதல் நடைபெற உள்ளது. கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிறைந்துள்ளது.  தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கிற்கான பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
யாகசாலை பூஜைகள் ஒன்றாம் தேதி தொடங்கியது.

கோபுரத்தின் உச்சியில் இன்று காலை 9:30 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது.
காலை 10:00 மணியளவில் பெரியநாயகி, பெருவுடையாருக்கு குடமுழுக்கு நடைபெற்றது.


தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடைமுறைகள் நடந்து வருகின்றன. தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டு குடமுழுக்கு நடைபெறுகிறது.

தேவாரம், திருவாசகத்தை கேட்க பிரத்யேக ஒலிப்பெருக்கி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

ராஜராஜ சோழ மன்னன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயிலில், (பிரகதீஸ்வரர்) ராஜராஜேஸ்வரத்தில் 24 ஆண்டுகளுக்கு பிறகு  குடமுழுக்கு நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

குடமுழுக்கு விவரம்

பெரிய கோவிலின் அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கும், பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கு குடமுழுக்கும், மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவையும் நடைபெற்றன. இதில், கோயில் உள் பிரகாரத்தில் கிட்டத்தட்ட 10,000 பேர் பங்கேற்று வழிபட்டனர்.

தமிழிலும், சமஸ்கிருதத்திலும் வேத மந்திரங்கள் ஓத நடைபெற்ற குடமுழுக்கை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனம். 

ராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்ட போது பக்தர்களின் ஓம் நமச்சிவாய கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் அமைந்திருந்தது.

வெளிப்பிரகாரம், கிரிவலப் பாதை, மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக் கணக்கானோர் நின்று குடமுழுக்கை தரிசனம் செய்தனர். கோவிலை சுற்றியுள்ளப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது வீட்டு மாடியில் இருந்தும் கண்டுகளித்தனர்.

வட்டமிட்ட கருடன்

பெருவுடையார் கோயில குடமுழுக்கின் போது வானத்தில் கருடன் பறந்ததால் பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்.

குடமுழுக்கு நடைபெற்றபோது, கலசத்தின் மேலே கருடன் வட்டமிட்டது, அப்போது, 'கருட பகவான் வந்துவிட்டான்' என ஒலிப்பெருக்கியில் அறிவித்தனர். இதையடுத்து, அங்கு குழுமியிருந்த பக்தர்கள், கருட பகவானை நோக்கி வழிபட்டனர்.

பெரிய கோயில்களின் குடமுழுக்கு விழாவின்போது, கருடன் வட்டமடிப்பது வழக்கம். இன்றும் கருடன் வட்டமிட்டு பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

இன்று மாலை 6 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சியருளல் ஆகியவை நடைபெறவுள்ளன.

பெரிய கோயிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் சுமார் 5,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா ஏற்பாட்டை தமிழ்நாடு DGP  J.K. திரிபாதி நேரில் ஆய்வு செய்தார்.
குழந்தைகள்¸பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு சிரமம் இன்றி போக்குவரத்து ஒழுங்கு¸ குற்றத்தடுப்பு விபத்துக்கள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் குடமுழுக்கு விழாவைக் காண 5 லட்சம் மக்கள் வந்தாலும் பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

குடமுழுக்கை காண பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருவதற்கு ஏதுவாக 250க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வாகனங்களை நிறுத்துவதற்காக பிரத்யேகமாக இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி - தஞ்சாவூர்,  மயிலாடுதுறை - தஞ்சாவூர்,  காரைக்கால், திருவாரூர் - தஞ்சாவூர்,
இடையே 4, 5, 6ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.