தஞ்சை பெரிய கோயிலில் நாளை குடமுழுக்கு விழா- நகரமே விழாக்கோலம்

பதிவு செய்த நாள் : 04 பிப்ரவரி 2020 16:09

தஞ்சாவூர்,

தஞ்சை பெருவுடையார் ஆலய திருக்குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது.  அதனால் தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ராஜராஜ சோழ மன்னன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் நாளை காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது,  

இதற்கான பூஜைகள் கடந்த மாதம் 27ம் தேதி  தொடங்கியது.  

யாக சாலை பூஜைகள் கடந்த 1ம் தேதி மாலை தொடங்கியது. நேற்று 5ம் கால யாகசாலை பூஜை நடைபெற்ற நிலையில், அதனை காண திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

இன்று கோயிலில் காலை 6ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது, 

மாலையில் 7ம் கால யாக சாலை பூஜையும் நடைபெற இருக்கின்றன.

யாகசாலை பூஜையினை காண வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்த பின்னரே பூஜை நடைபெறும் இடங்களுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்

பெரிய கோயிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் சுமார் 5,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா ஏற்பாட்டை தமிழ்நாடு DGP  J.K. திரிபாதி நேரில் ஆய்வு செய்தார்.
குழந்தைகள்¸பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு சிரமம் இன்றி போக்குவரத்து ஒழுங்கு¸ குற்றத்தடுப்பு விபத்துக்கள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் குடமுழுக்கு விழாவைக் காண 5 லட்சம் மக்கள் வந்தாலும் பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருவதற்கு ஏதுவாக 250க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திருச்சி - தஞ்சாவூர்,  மயிலாடுதுறை - தஞ்சாவூர்,  காரைக்கால், திருவாரூர் - தஞ்சாவூர்,
இடையே 4, 5, 6ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவினை பக்தர்கள் எவ்வித சிரமுமின்றி காண  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் க. சண்முகம் தெரிவித்துள்ளார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர்.