ரத சப்தமி: திருப்பதி கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள் : 01 பிப்ரவரி 2020 16:07

திருமலை:

ரத சப்தமி தினத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் நேற்று மாலை சென்னையில் இருந்து காரில் திருப்பதி வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் அனில்குமார் சிங், தர்மாரெட்டி ஆகியோர் வரவேற்றனர்

இரவு திருமலையில் உள்ள பத்மாவதி நகரில் உள்ல விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை ஏழுமலையான் கோவில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். தேவஸ்தான நிர்வாகிகள் முதலமைச்சருக்கு லட்டு மற்றும் பிரசாதங்கள் வழங்கினர்.

கள்ளக்குறிச்சி அருகே திருப்பதி கோவில்

தமிழ்நாடு - கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக  5½ ஏக்கர் நிலத்தின் ஆவணங்களை தேவஸ்தான அதிகாரிகளிடம் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

பின்னர் கோவில் முன்பு தேங்காய் உடைத்து வழிபட்டார். 

இன்று ரத சப்தமியையொட்டி ஏழுமலையான் கோவிலில் காலையில் நடந்த சூரிய பிரபை வாகன வீதி உலாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் முதலமைச்சர் பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்டப்படவுள்ளது. கோவில் கட்டுவதற்காக 5½ ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டு திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார் முதலமைச்சர் பழனிசாமி.