கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 25

பதிவு செய்த நாள்

23
மே 2016
23:10

ஆர்.கோவர்த்தனம் அன்றும் இன்றும்!

பழம்பெரும் இசையமைப்பாளர் ஆர். கோவர்த்தனம்  சேலம் நகரில் வாழ்ந்து வருகிறார். 

என்னுடைய ‘திரை இசை அலைகள்’ என்ற நூலில் கோவர்த்தனம் பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு, ஒரு வாசக நண்பர் - அவர் ஓர் ஆங்கிலப் பேராசிரியர் -- கோவர்த்தனத்தை பார்க்க சேலத்திற்கு சென்றார்.

தொண்ணுாறு வயதை எட்டிக் கொண்டிருக்கும் கோவர்த்தனம் தன்னுடைய வயது முதிர்ந்த மனைவியுடன்  கஷ்டப்படும் காட்சி நண்பரை உலுக்கிவிட்டது. 

வயதான காலத்தில் இவர்கள் ஏன் இப்படித் தனிமையில் தவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு. 

அது சரிதான்...மற்றவர்களின் உதவி முதியோருக்குத் தேவைதான். ஆனால் சிலர், சுதந்திரம் கருதி தனியாக இருக்க விரும்புவதும் உண்டு. கோவர்த்தனம் அத்தகைய தன்னிச்சையான போக்கும், பழக்கவழக்கங்களும் உடையவர். 

தன்னுடைய இசை அறிவாலும் உழைப்பாலும் திரை உலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் செல்வாக்கும் செல்வமும் பெற்றவர். எவ்வளவு வயதானாலும் பிறருடைய ஆதிக்கத்திற்கு கட்டுப்பட விரும்பாதவர்.

கோவர்த்தனம் ஓர் அபூர்வ பிறவிதான். இசை அறிவின் முதிர்ச்சியால் வருவது ஸ்வர ஞானம். ஆனால், சிறு வயதிலேயே அத்தகைய ஞானம் கோவர்த்தனத்திற்கு வரப்பிரசாதமாக கிடைத்துவிட்டது.

அந்த வகையில் ‘நாதஸ்வர சக்ரவர்த்தி’ என்று பெயர் பெற்ற திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையையே அசத்தியவர் கோவர்த்தனம்.

ராஜரத்தினம் ஒரு முறை தன்னுடைய நாயனத்தை இசைத்தார். 

உடனே, ஒன்பது வயது கோவர்த்தனம் அவர் வாசித்த தோடியின் ஸ்வரங்களை மளமளவென்று காகித்தில் எழுதினார்.

ஆச்சரியப்பட்டார் ராஜரத்தினம். இந்தப் குட்டிப் பையனும் ஒரு ரத்தினம்தான் என்ற கருத்தில், இவனை ‘ஸ்வரக்குட்டி’ என்று அழைக்க வேண்டும் என்றார்.

ஆர்மோனியக் கலைஞரும் இசையமைப்பாளருமான   ஆர். சுதர்சனம் கோவர்த்தனத்தின் அண்ணன் என்பதால், இசைக்கலைஞர்களின் கூட்டுறவு சிறுபிராயத்திலேயே கோவர்த்தனத்திற்கு இயல்பாக கிடைத்தது.

இந்த இசை சகோதரர்களின் தந்தை ராமச்சந்திர செட்டியாரும் சங்கீதம் அறிந்தவர். ஆனால் பாவம், பெங்களூருவில் ஒரு மளிகைக் கடையில் கணக்கு எழுதி ஜீவனம் நடத்த வேண்டிய நிலையில் இருந்தார். பிறகு குடும்பத்துடன் சென்னைக்கு வந்து விட்டார். 

சிறு வயதிலேயே கோவர்த்தனம் இசையறிவு பெற்றிருப்பதைப்  பார்த்த ராமச்சந்திர செட்டியார், தமக்குத் தெரிந்த வர்ணங்களையும் கீர்த்தனைகளையும் பையனுக்கு சொல்லி வைத்தார். சில ராகங்களின் வடிவங்களையும் விளக்கினார். அண்ணன் சுதர்சனத்துடன் கூட இருந்து பையன் சில நுணுக்கங்களைக் கண்டறிந்தான்.

தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட பையன், பெங்களூரு வாசத்தால் கன்னடமும் அறிந்திருந்தான். செட்டியார் அவனுக்குத் தமிழும் சொல்லிக் கொடுத்தார்.

இந்த மூன்று மொழிகளில் இருந்த பரிச்சயம், கோவர்த்தனத்தின் முதல் பட வாய்ப்பிலேயே அவருக்கு கைகொடுத்தது. 

அவர் முதன் முதலாக இசையமைத்த ‘ஜாதகம்’ என்ற திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் எடுக்கப்பட்டது. மூன்று மொழிகளில் இசையமைக்கும் அரிய வாய்ப்பு கோவர்த்தனத்திற்கு கிடைத்தது.

கோவர்த்தனத்தின் இசையமைப்பில்தான், பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் தமிழிலே அறிமுகமானார். 

‘சிந்தனை ஏன் செல்வமே’ என்ற அருமையான பாடலையும், ‘மூட நம்பிக்கையாலே’ என்ற பாடலையும்  ஜாதகத்திலே ஸ்ரீநிவாஸ் பாடினார். இவை இன்றைக்கும் அவ்வப்போது ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

உள்ளதே போதும் என்று புருஷனும் (பி.டி. சம்பந்தம்), இன்னும் ஏராளமாக வேண்டும் என்று பெண்டாட்டியும் (அங்கமுத்து) பாடுவதாக ஜாதகத்தில் ஒரு கருத்துள்ள காமெடிப் பாடல் உள்ளது. 

‘ஆண்டவன் நமக்கு அளக்கிற அளவுக்கு மேலே வேண்டவே வேண்டாம்’ என்று தொடங்கும் இந்தப் பாடலை, ஜி.கே.வெங்கடேஷ், ரத்னமாலா ஆகியோர் குரல்களில் அழகாகப் பதிவு செய்திருக்கிறார் கோவர்த்தனம். 

ஏவி.எம். ஸ்டூடியோவில் தலைமை மேலாளராக இருந்த வாசு  மேனன்  தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளராகி, ‘ஒரே வழி’ என்ற படத்தை எடுத்தார்.

கதை, வசனத்திற்கு ஜாவர் சீதாராமன், பாடல்களுக்கு கண்ணதாசன், கேமராவிற்கு தம்பு, இயக்கத்திற்கு கே. சங்கர் என்று உத்தரவாதமுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்த வாசு மேனன், இசைக்கு கோவர்த்தனத்தை நியமித்தார். 

‘அன்பும் அறமும் உயிரெனக் கொண்டால்

அதுதான் ஆனந்தம்,

இன்பமும் துன்பமும் சமமென நினைத்தால்

என்றுமே பேரின்பம்’ என்ற கண்ணதாசனின் பாடல் சுசீலாவின் குரலில் அழகாக ஒலித்தது. 

டி.எம். சவுந்தரராஜன் எஸ்.சி. கிருஷ்ணனுடன் பாடும், ‘பணநாதா இன்ப குணநாதா, உலகைப் பம்பரமாய் ஆட்டிவைக்கும் அருள்நாதா’ என்ற பாடல், பணத்தின் பெருமைகளை மிக நேர்த்தியாக அடுக்கியது. கவிஞரின் அர்த்தபுஷ்டியான பாடல் இன்றும் கேட்டு ரசிக்கப்படுகிறது.

வாசு மேனன் தனது இரண்டாவது படமாக, ‘கைராசி’ (1960) எடுத்தார். இந்தப் படம் வெளிவந்தபோது, அதற்குப் போட்டியாக எம்.ஜி.ஆர். நடித்த ‘மன்னாதி மன்ன’னும் சிவாஜி நடித்த ‘பெற்ற மன’மும் பணபலமுள்ள தயாரிப்பாளர்களின் படைப்புகளாக எதிரே நின்றன.

ஆனால் அவற்றை முறியடித்து, ‘கைராசி’ வெற்றி அடைந்தது. அதற்கு ஒரு முக்கியமான காரணம் படத்திற்கு கோவர்த்தனம் வழங்கிய அருமையான இசை. 

ஒரு பெண், மனதில் அனுபவிக்கும் மகிழ்ச்சியும் நிறைவும், ‘காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் காத்திருந்தேன்’ என்ற பாடலில் மிகவும் இனிமையாக பிரதிபலிக்கச் செய்தார் கோவர்த்தனம்.

‘காதலென்னும் ஆற்றினிலே, கன்னியராம் ஓடத்திலே’ என்ற பாடலில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து அடிக்கும் கொட்டம் கருத்துள்ள பாடலாக உருப்பெறுகிறது. 

காதல் விஷயத்தில் ஆண்களின் உத்வேகமும் பெண்களின் ஜாக்கிரதை உணர்வும் பாடலில் வெளிவருகிறது. ஹாஸ்ய சுவை விரவியிருக்கிற பாடலில்,  இனிமையும் நிரம்பியிருக்கிறது.

‘கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னால் அன்றோ’ என்ற பாடலில் காதல் தோல்வியின் ஏக்கம் கவர்ச்சிகரமான மெட்டில் வெளிப்படுகிறது.  ‘அன்புள்ள அத்தான் வணக்கம்’ ‘கைராசி’யின் இன்னொரு வெற்றிப் பாடல்.

தென்றலின் இனிய வருடலாக கோவர்த்தனத்தின் மேற்படி பாடல்கள் வலம்வந்துகொண்டே இருக்கின்றன. 

‘பட்டணத்தில் பூதம்’ (1967) திரைப்படம், கோவர்த்தனத்தின் சிறந்த இசையமைப்பிற்கு ஓர் அற்புதமான சான்று. இது கண்ணதாசன் ஆரம்பித்த படம். அவர் மூலம் பின்னர் படத்தை 

வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்தது.

கண்ணதாசனின் சிபாரிசின் பேரில் கோவர்த்தனம் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார். கண்ணதாசனின் தேர்வு மிகச் சரியானது என்பதை ஒவ்வொரு பாடலிலும் கோவர்த்தனம் ஊர்ஜிதப் படுத்தினார்.

படத்தில், ‘உலகத்தில் சிறந்தது எது?’ என்பது போட்டிப் பாடலாக அமைக்கப்பட்டிருக்கிறது. வட்டி, காதல், தாய்மை என்ற வரிசையில் வரும் பாடல், தாய்மைதான் சிறந்தது என்று நிறுவுகிறது. தொடர்ந்து இனிமையைக் கைவிடாத பாடல், தாய்மை என்று வரும் போது அதில் வெளிப்படுத்தும் கனிவு  மிகவும் ரசிக்கத்தக்கது. 

காதல் உணர்ச்சியில் ஆண் கேள்வி தொடுப்பதும், கசப்புணர்வில் பெண் பதில் சொல்வதுமாக அமைந்த ஒரு பாடல், ‘கண்ணிலே கண்டதெல்லாம் காட்சியா?’ 

கேள்வி– பதில் மிக பொருத்தமாகவும் தெளிவாகவும் இருப்பதுடன், பாடலின் மெட்டும் இசையும் மனதைக் கவ்வுவதாக அமைந்திருக்கின்றன.

முழுதும் சிருங்காரப் பாடலாக அமைந்தது, ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’. இது இந்துஸ்தானி ராகமான  பீலுவில் அமைந்திருக்கிறது. மென்மையும் இனிமையும் நிரம்பி வழிகிற பாடலில், வாத்திய இசைச் சேர்ப்பும் மிகவும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது. 

‘பூவும் பொட்டும்’ (1968) படத்தில், ‘நாதஸ்வர ஓசையிலே’ என்றும் மணம் குன்றாத ஒரு திருமணப் பாடல். அதே படத்தில், ‘உன்னழகைக் கண்டு கொண்டால்’ பி.பி.ஸ்ரீநிவாஸின் குரலில் ஒலிக்கும் மிக அழகான பாடல்களில் ஒன்று. ‘நாளைப் பொழுது உன்றன் நல்ல பொழுதாகும்’ (பொற்சிலை), ‘பத்து பதினாறு முத்தம்’  (அஞ்சல் பெட்டி 520) ஆகிய பாடல்கள் கோவர்த்தனத்தின்  இனிமை நிறைந்த இசையமைப்புக்கு சான்றுகள்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி (1960-–65),  விஸ்வநாதன் (1965-– 1970),  இளையராஜா (1976-–90), விஜய்பாஸ்கர், சந்திரபோஸ், தேவா என்று பல இசையமைப்பாளர்களுக்கு உறுதுணையாகச் செயல்பட்டிருக்கிறார் கோவர்த்தனம்.

ஒரு முறை எம்.எஸ்.வி. மிகப்பெரிய திரைப்பாடல் நிகழ்ச்சி வழங்கவிருந்தபோது, கோவர்த்தனத்தை நோக்கித்தான் விரைந்தார். எம்.எஸ்.வியின் பாடல்களின் ஸ்வரக்குறிப்புகளை அவர்தான் அதிவேகமாக எழுதிக்கொடுத்தார். ஆனால் அப்படிப் பணி செய்தபின், சில சமயம் தனக்கு நிகழ்ச்சிக்கான அழைப்பு கூட வருவதில்லை என்று கோவர்த்தனம் என்னிடம் குறைபட்டுக்கொண்டது உண்டு.

இன்றைக்கும் அவருடைய நிலை அப்படிப்பட்டதுதான் என்று கொள்ளலாம். மக்கள் இசையான தமிழ்த் திரை இசைக்கு சிறந்த பங்களிப்பு செய்தவர், கோவர்த்தனம். அந்த வகையில் தமிழர்கள் அனைவராலும் அவர் தாங்கப்பட வேண்டியவர்தான். 

(தொடரும்)