கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 215

பதிவு செய்த நாள் : 27 ஜனவரி 2020

திரையில் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் – 1

சூழ்ச்சி  செய்து கூட்­டுக் குடும்­பத்­தைப்பிரிக்­கும் சகோ­த­ரர்­க­ளின் மனை­வி­கள் ஐம்­ப­து­க­ளி­லும் அறு­ப­து­க­ளின் சில ஆண்­டு­க­ளி­லும் வில்­லி­ க­ளாக சித்­த­ரிக்­கப்­பட்­டார்­கள்!

‘‘ஒருத்­த­ருக்கு வாக்­கப்­பட்டு ஒரு கூட்­டத்­துக்கே ஆக்­கிப்­போ­ட­ணும்னு என் தலை­யிலே ஒண்­ணும் எழுதி வைக்­கலே’’ என்­கி­றாள், ‘பழநி’ படத்­தில்  நான்கு அண்­ணன், தம்­பி­க­ளில் ஒரு­வ­னுக்கு வாக்­கப்­பட்ட நாகம்மா (படத்­தில் நடி­கர் ஸ்ரீரா­மின் மனை­வி­யாக வரும் சிவ­காமி).

பட்­டா­ளத்­துக்­கா­ரர் (ஓ.ஏ.கே.தேவர்) ஒரு­வ­ரின் செல்ல (ஒற்றை?) மக­ளான இந்த பெண்­ணுக்கு, கூட்­டுக்­கு­டும்­பத்­தின் பொறுப்­பு­கள் தேவை­யில்­லாத பார­மா­கத் தெரி­கின்­றன.

இந்த வெறுப்பு, கண­வன் வீட்டு  பசு­விற்கு விஷம் வைத்­துக் கொல்­லும் அள­வுக்கு அவளை இட்­டுச் செல்­கி­றது. அப்­போது அவள் கண­வன் அதிர்ச்­சி­யில் கூறு­கி­றான், ‘‘அடிப்­பாவி... பாவங்­கள்­ளயே பெரிய பாவம் பசு மாட்டை கொல்­ற­து­தான்டி....அந்­தப் பாவத்­தையே மனம் துணிஞ்சு செஞ்ச நீ எதை­யுமே துணிஞ்சு செய்வே! ’’

இந்­திய குடும்­பங்­கள் சிதைந்­து­போய், ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணே என்ற நிலைக்கு போவ­தற்­கான பாதை, நாகம்மா போன்ற பாத்­தி­ரங்­க­ளின் வாயி­லா­கத்­தான் உரு­வா­னது.

‘நாம் இரு­வர் நமக்­கொ­ரு­வர்’ என்ற குடும்ப  ‘நல’க் கொள்கை ஏறக்­கு­றைய அம­லில் இருக்­கும் தற்­கால நிலை­யைத் ‘தங்­கப்­ப­தக்­கம்’ (1974) படத்­தில் காண்­கி­றோம்.

காவ­லர் சவுத்­ரிக்­கும், லட்­சு­மிக்­கும் (சிவாஜி, கே.ஆர்.விஜயா) பிறந்த ஒரே பிள்ளை  ஜகன் (ஸ்ரீகாந்த்). ஆனால்  அவனை மகன் என்­ப­தை­விட சவுத்­ரி­யின் காவ­லர் வேலைக்கு வேலை கொடுக்­கும் கிரி­மி­னல் என்று கூற­வேண்­டும். அத­னால், ‘டிவிங்­கிள் டிவிங்­கிள் லிட்­டல் ஸ்டார், ஹவ் ஐ ஓண்­டர் வாட் யு ஆர்’ என்று குழந்­தைக்­குத் தாலாட்­டுப் பாடிய சவுத்ரி, ‘இடி­போல பிள்ளை வந்­தால் மடி தாங்­குமா’ என்று புலம்ப வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­ப­டு­கி­றார்! பெற்ற ஒரே மகனை அவர் சுட்­டுத்­தள்­ளும் காட்சி கிளை­மேக்­சில் வரு­கி­றது.  நாம் இரு­வர் நமக்­கொ­ரு­வன் என்­பது இப்­படி முடி­கி­றது. இத்­த­னைக்­கும் ‘நல்­ல­தொரு குடும்­பம் பல்­க­லைக் கழ­கம்’ என்று பாடல் படத்­தில் வரு­கி­றது! ‘தாய் சொல்­லைத் தட்­டா­தே’­யில் வரும் தாய் (கண்­ணாம்பா) இரண்டு பிள்­ளை­கள் பெற்­றெ­டுக்­கி­றாள். ஆனால் மூத்த பிள்ளை (அசோ­கன்) இள­மை­யி­லேயே கெட்ட வழி­யில் சென்று வீட்டை விட்டே ஓடி­வி­டு­கி­றான்!  

தங்­கப்­ப­தக்­கத்­தின் காமெடி டிராக்­கில், சோ இரண்டு வேடங்­க­ளில் வரு­கி­றார். நெறி­யற்ற அர­சி­ய­லில் குதித்து வெற்றி பெறும் தம்பி, பிள்­ளை­யைப் போல் வளர்த்த அண்­ணன் குடும்­பத்­தி­லி­ருந்து பிரிந்து, தனிக்­கு­டித்­த­னம் செல்­கி­றான்.

அண்ணி (மனோ­ரமா) - ‘‘ஏண்டா, தனிக்­கு­டித்­த­னமா போகப்­போற? உன்­னைப் பெத்த புள்ள மாதிரி வளத்­தோ­மேடா..எங்­களை  விட்­டுட்­டுப் போறேன்னா சொல்ற?’’

அண்­ணன் (கான்ஸ்­ட­பிள் சோ) -- ‘‘முத்­தம்மா, நீ பேசாம இரு. என் தம்பி இனிமே உன்ன மாதிரி நல்­ல­வங்க கூட இருக்­க­மாட்­டான். பெரிய மனு­ஷன் ஆவ­ற­துக்கு ரெண்டு வழி இருக்­குது. ஒண்ணு நன்­றியை மறக்­க­றது. இன்­னொண்ணு நல்­ல­வங்­களை மறக்­க­றது. இவன் இப்போ பெரிய மனு­ஷன்.’’

வைகை­வ­ள­வ­னாக அர­சி­யல் அவ­தா­ரம் எடுத்­தி­ருக்­கும் வையா­புரி (தம்­பி­யாக வரும் சோ) - ‘‘அண்ணா... !’’

அண்­ணன் (கான்ஸ்­ட­பிள் சோ) -- ‘‘ஏண்டா இன்­னும் சும்மா அண்ணா அண்­ணா­னு­கிட்டு...நான் சொல்­லிக்­கொ­டுத்த நல்ல விஷ­யங்­க­ளைத்­தான் என்­னிக்கோ மறந்­துட்­டியே!’’

அப்பா, அம்மா துர­திர்ஷ்­ட­வ­ச­மாக மறைந்­து­போ­னால், தம்பி தங்­கை­யைக் காக்க ஒரு அண்­ணன் இருக்­கி­றான் என்ற நிலையை ‘ராஜ­பார்ட் ரங்­க­து­ரை’­யி­லும் பார்க்­கி­றோம்.

ஆனால், அண்­ண­னால் பாசத்­து­டன் வளர்க்­கப்­பட்ட தம்பி, நன்றி என்­றால் கிலோ என்ன விலை என்று கேட்­கும் நாள் வரு­கிற போது, ‘அம்­மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்­தான்’ என்ற  பல்­லவி அண்­ண­னின் நெஞ்­சில்

ஒலிக்­கி­றது.

‘‘ராம நாட­கத்­தில் மூன்று தம்­பி­க­ளின்

உள்­ளம் கண்­டேனே, நல்ல

பார­தத்­தில் நான்கு தம்­பி­களை

நானும் கண்­டேனே’’ என்று, வாழும் இதி­கா­சங்­க­ளான ‘ராமா­ய­ண’­மும் ‘மகா­பா­ர­த’­மும் தம்­மு­டைய முன்­னு­தா­ர­ணங்­களை அவ­னுக்­குக் காட்­டு­கின்­றன.

தாயின் கர்ப்­பத்­தில் குழந்­தை­யாக மனி­தன் வளர்­கி­றான். ஆனால், குடும்­பம் என்ற நாற்­றங்­கா­லில்­தான்,  சமூ­கத்­தின் ஒரு அங்­க­மாக வாழ்­வ­தற்­கான இயல்­பு­களை அவன் பயில்­கி­றான். அந்த நாற்­றங்­கா­லின் அள­வும் வள­மும் குறைந்­து­கொண்டே போனால், பண்­பு­க­ளின் வளர்ச்­சிக்­கான வாய்ப்­பு­க­ளும் குறை­கின்­றன!

இந்­தியா சுதந்­தி­ரம் அடைந்த கால­கட்­டத்­தி­லி­ருந்து குடும்­பத்­தின் அள­வும் பய­னும் கொஞ்­சம் கொஞ்­ச­மா­கக் குறைந்து வரு­கின்­றன.  இந்­திய குடும்ப கட்­டுப்­பாடு சங்­கம் 1949லேயே உரு­வா­கி­விட்­டது. ஆனால், நேரு­வின் காலத்­தில், ஜனத்­தொ­கை­யைக் கட்­டுப்­ப­டுத்­த­வேண்­டும் என்­பதை விட, பொருட்­க­ளின் உற்­பத்­தி­யைக் பெருக்­க­வேண்­டும் என்­ப­தற்­குத்­தான் முத­லி­டம் கொடுக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யி­லும், வள­ரும் நாடு­க­ளில் முதல் முயற்சி என்ற முறை­யில், 1952ல் நாடு தழு­விய ஒரு குடும்ப கட்­டுப்­பாடு திட்­டம்  தொடங்­கப்­பட்­டது. முத­லில் பிறப்பு கட்­டுப்­பாடு திட்­டங்­க­ளு­டன் தொடங்­கிய முயற்­சி­கள், பிறகு ‘தாய் சேய் நலம்’, ‘குடும்ப நலம்’ என்று விரி­வ­டைந்­தன.  

ஐம்­ப­து­க­ளி­லேயே ஜனத்­தொ­கைப் பெருக்­கத்­திற்கு எதி­ரான விமர்­ச­னங்­கள் தமிழ் சினி­மா­வில் வரத்­தொ­டங்­கின. ‘கல்­யா­ணம் பண்­ணி­யும் பிரம்­மச்­சாரி’ (1954) படத்­தின் நாய­கன் கண­பதி (டி.ஆர். ராமச்­சந்­தி­ரன்), தன்­னு­டைய வீட்­டில் பிரம்­மச்­ச­ரி ­யத்­தைப் பற்­றிய ஒரு புத்­த­கத்தை ரச­னை­யு­டன் படித்­துக் கொண்­டி­ருக்­கி­றான்.

அப்­போது, வீட்­டின் பின்னே வசிக்­கும் வேலைக்­கா­ரன் முத்­த­ழ­கு­வின் குடி­சை­யி­லி­ருந்து ஒரே சத்­தம் வந்­து­கொண்­டி­ருக்­கி­றது. ‘நான்­சென்ஸ்’ என்று கோப­மா­கக் கூறிக்­கொண்டு வேலைக்­கா­ர­னின் குடி­சைக்­குக் கோபத்­து­டன் விரைந்து செல்­கி­றான் கண­பதி. அங்கே வேலைக்­கா­ரன் தன்­னு­டைய ஆறு, ஏழு பிள்­ளை­க­ ளுக்கு விளை­யாட்­டுக் காட்­டிக் கொண்­டி­ருக்­கி­றான்.

‘‘முத்­த­ழகு,’’ என்று கத்­து­கி­றான் கண­பதி. ‘‘இது வீடா சந்­தைக்­க­டையா,’’ என்று எரிந்து விழு­கி­றான்.

‘‘எச­மான்...நீங்க ஒரு பைத்­தி­யம். வீடுன்னா இப்­ப­டித்­தான் இருக்­கும்,’’ என்று விடை அளிக்­கி­றான் வேலைக்­கா­ரன் முத்­த­ழகு!

‘‘ஆமாம்...குடும்­பம்!  டஜன் கணக்­கிலே குழந்­தை­க­ளைப் பெத்து வச்­சிக்­கிட்டு  குடும்­ப­மாம்ல குடும்­பம்,’’ என்று வெறுப்­பு­டன் பொரிந்து தள்­ளு­கி­றான் கண­பதி.

‘‘இதுக்கு நாமல்ல வருத்­தப்­ப­ட­ணும்,’’ என்று தன் மனை­வி­யைப் பார்த்­துக் கேட்­ப­து­போல், கண­ப­தி­யைக் கிண்­ட­ல­டிக்­கி­றான் முத்­த­ழகு!

‘‘டேய்...இனிமே ஒவ்­வொரு குடும்­பத்­தி­ல­யும் இவ்­வ­ளவு குழந்­தை­கள் தான் பெத்து வச்­சுக்­க­லாம்னு ஒரு கட்­டுப்­பாடு சட்­டம் வர­ணும்டா இந்­தி­யா­வுல,’’  என்­கி­றான் கண­பதி.

இந்த நிகழ்ச்­சிக்­குப் பின், கண­பதி வீட்­டுக்­குள் அடி அடித்து வைத்­த­தும் அவன் பெற்­றோர் அவனை கவ­லை­யு­டன் நோக்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

கண­ப­தி­யின் தாய் அவனை கேட்­கி­றாள், ‘‘ஏண்டா கண­பதி, எப்போ தான்டா உன் பிரம்­மச்­ச­ரி­யத்­துக்கு ஒரு முடிவு வரும்?’’

ஒரு நாளும் வராது என்­கிற தோர­ணை­யில் பேசு­கி­றான் கண­பதி.

‘‘ஏண்டா கண­பதி...நீ காலா­கா­லத்­திலே ஒரு கல்­யா­ணத்­தைப் பண்­ணாத்­தா­னேடா எங்க காலத்­துக்­குள்ள ஒரு பேரன் பேத்­தி­யைக் கண்டு ஆனந்­தப்­ப­ட­லாம்,’’ என்று கெஞ்­சு­கி­றாள் தாய். அவ­ளுக்­குக் கண­பதி ஒரே மகன்.

‘‘அடா­டா­டாடா...பொழு­து­போய் பொழுது விடிஞ்சா இது­தானா...கல்­யா­ணத்­தைப் பண்­ணிக்க, பிள்­ளை­யைப் பெத்­துக்க, கல்­யா­ணத்­தைப் பண்­ணிக்­கப் பிள்­ளை­யைப் பெத்­துக்க, அப்­படி என்ன இப்போ உல­கத்­தில பிள்­ளைப் பஞ்­சம் வந்­துட்­டது...அதான் ஒரு நாளைக்கு 72 ஆயி­ரம் குழந்தை பிறக்­கு­தாமே...,’’ என்று பிளந்து கட்­டு­கி­றான் கண­பதி.

‘‘அட யார்டா அறிவு கெட்­ட­வனா இருக்கே... உல­கத்­தைப் பத்தி ஏன்டா பேசறே....வீட்ல குவா குவான்னு கத்­த­ற­துக்கு ஒரு குழந்தை இல்­லைன்னா.......,’’ என்­கி­றார் கண­ப­தி­யைப் பெற்­றெ­டுக்­கும் பாக்­கி­யம் பெற்ற அப்பா!

‘‘அதுக்­கென்ன...இந்­தி­யா­வி­லத்­தான் அனாதை குழந்­தை­கள் ஆயி­ரம் இருக்கே...ஒண்­ணென்ன..ஒரு ஏழு எட்டெ புடிச்­சிக்­கொ­ணாந்து கத்த விடுங்­க­ளேன்.....,’’ என்­கி­றான் கண­பதி! வீட்­டுக்­கொரு வாரிசு வேண்­டும் என்று ஆதங்­கப்­ப­டும் பெற்­றொ­ரின் முன், நாட்­டின், உல­கின் பிரம்­மாண்ட பிரச்­னை­களை அள்­ளித்­தெ­ளிக்­கி­றான் கண­பதி.

‘‘அது உன்­னைச் சொல்லி குத்­த­மில்­லைடா...நான் பிரம்­மச்­சா­ரியா இருந்­தி­ருக்­க­ணும்,’’ என்­கி­றார் கண­ப­தி­யின் அப்பா!

கீரைத்­தண்டு கட்டை உள்ளே எடுத்­துக்­கொண்டு நுழை­யும் வேலைக்­கா­ரன் முத்­த­ழகு, ‘‘ஆமா...எஜ­மான்’’ என்­கி­றான்!

ஏரா­ள­மான பிள்­ளை­க­ளைப் பெற்­றுக்­கொண்ட முத்­த­ழ­குவை அவ­னு­டைய முத­லா­ளி­யின் மரு­ம­கன் அம்­ப­லம் (சிவாஜி கணே­சன்) கிண்­டல் அடிக்­கி­றான்.  ஆனால், படத்­தில் முத்­த­ழகு முட்­டா­ளா­கச் சித்­த­ரிக்­கப்­ப­ட­வில்லை. தன் முத­லா­ளிக்­குப் புத்­தி­சா­லித்­த­ன­மான யோசனை கூறு­கி­றான்.  அதை ஏற்ற அவர், ‘‘அட...யார்ரா உன்னை புத்தி இல்­லா­த­வன்னு சொன்­னது,’’ என்று அவனை மெச்­சும் வகை­யில் பேசு­கி­றார். ‘‘அது யாரா­வது புத்தி இல்­லா­த­வன் சொல்­லி­யி­ருப்­பான் எச­மான்,’’ என்­கி­றான் முத்­த­ழகு! குழந்­தை­க­ளின் ஆரோக்­கி­யத்­துக்­கும் ஆயு­ளுக்­கும் உத்­த­ர­வா­தம் இல்­லாத சமு­தா­யத்­தில் நிறைய பிள்­ளை­க­ளைப் பெற்­றுக்­கொள்­வ­தும் ஒரு புத்­தி­சா­லித்­த­ன­மாக இருந்­தது. ஆனால் இன்று தாய்-­சேய் நலம் காப்­ப­தில் பல மாநி­லங்­கள் முன்­ன­ணி­யில் நிற்­ப­தால், இப்­ப­டிப்­பட்ட இனப்­பெ­ருக்­கத்­திற்கு அவ­சி­யம் இல்­லா­மல் போகி­றது.

‘தெய்­வப்­பி­றவி’ (1960) படத்­தில், மற்­ற­வர்­க­ளுக்கு வீடு­க­ளைக் கட்­டிக்­கொ­டுக்­கும் மேஸ்­திரி மாத­வன் (சிவாஜி), தானே வீடு கட்­டிக்­கொண்டு கிர­கப்­பி­ர­வே­சம் செய்­யும் நாள் வரு­கி­றது. அது­தொ­டர்­பாக ஒரு கதா­கா­லட்­சே­பம் நடக்­கி­றது.  

மன்­ன­னான கண்­ணன் மிக­வும் ஏழை­யான தன்­னு­டைய பால்ய நண்­பன் குசே­லனை மதித்­த­தைப்­போல்,  ‘மனி­தனை மனி­தன் மதித்­திட வேண்­டும்’ என்ற பல்­ல­வி­யோடு, குசே­ல­ரின் கதை இந்த நிகழ்ச்­சி­யில் நிகழ்த்­தப்­ப­டு­கி­றது (நடிப்பு : தங்­க­வேலு கோஷ்டி;  பாடல் : கே.எஸ்.கோபா­ல­கி­ருஷ்­ணன், குரல் :  சீர்­காழி கோவிந்­த­ரா­ஜன்). குசே­லர் கதை­யின் இன்­னொரு அம்­ச­மாக, ஏரா­ள­மான பிள்­ளை­க­ளைப் பெற்­றுக்­கொள்­வ­தில் உள்ள கஷ்­டம்  விவ­ரிக்­கப்­ப­டு­கி­றது.

‘‘துவா­பர யுகத்­திலே குசே­லர் என்­றொரு பக்­தி­மான் இருந்­தார்... பர்த்து கண்ட்­ரோல் இல்­லாத அந்த காலத்­திலே மனு­ஷன் வத­வ­தன்னு 27 குழந்­தை­க­ளைப் பெற்­றெ­டுத்­துட்­டான்,’’ என்று தொடங்­கும் குசே­லர் கதை­யிலே,  அந்த குழந்­தை­க­ளின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்ய முடி­யா­மல் தாய் தவிக்­கும் நிலை கூறப்­ப­டு­கி­றது.

‘‘நினைச்சா தூக்­கம் வருமோ? ஒரு தலைக்கு நாலு இட்­லின்னு கணக்­குப் போட்­டா­லும் 27 குழந்­தை­க­ளுக்கு என்­னாச்­சுன்னு நீங்­களே கணக்­குக்­கூட்­டிப் பாருங்கோ... சாம்­பா­ரைப் பத்தி அப்­பு­றம் யோசிப்­போம்,’’ என்ற நிலை­யில்,

‘‘மோப்­பம் பிடித்த ஓர் பால­கன், தேங்­காய்

ஆப்­பம் வேண்­டும் என்று கேட்­ட­னன், பசி

ஏப்­பம் விட்ட சிறு பால­கன், மயங்கி

தொப்­பென்று பூமி­யில் விழுந்­த­னன்

ஆடை­யில்­லா­த­தோர் பால­கன், திங்க

சீடை வேண்­டும் என்று கேட்­ட­னன்

கோடை இடி கேட்ட நாகம் போல், நெஞ்­சம்

குமுறி குமுறி தாயும் அழு­த­னள்!’’

அதி­கப்­பிள்ளை பெறு­வ­தில் உள்ள கஷ்­டங்­க­ளைக் கதா­கா­லட்­சே­பம் இப்­ப­டிக்  காட்­டு­கி­றது.  முத்­தாய்ப்­பாக அது கூறும் செய்தி, ‘‘குசே­லனை போல் (கதா­நா­ய­கன்) மாத­வ­னுக்கு 27 வேண்­டாம், யோசனை செய்து, நிதா­ன­மாக, ஒண்ணு ரெண்­டோட மங்­க­லம் சுப மங்­க­லம், நித்ய ஜெய, மங்­க­லம் சுப மங்­க­லம்’’!

இந்த வித­மாக சிறிய குடும்­பத்­திற்­கான பிர­சா­ரம் தமிழ் சினி­மா­வில் சூடு பிடிக்­கத்­தொ­டங்­கி­யது.

(தொட­ரும்)