முதல் டி20 போட்டி: நியூஸி.யின் கடின இலக்கை ஊதித் தள்ளி இந்திய அணி அபார வெற்றி

பதிவு செய்த நாள் : 24 ஜனவரி 2020 15:46

ஆக்லாந்து,

இந்திய அணி கேப்டன் கோலி, ராகுலின் வலுவான அடித்தளம் , ஷ்ரேயஸ் அய்யரின் அபார ஆட்டம்  ஆகியவற்றால் ஆக்லாந்தில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப்  பெற்றது.

ஆக்லாந்தில், நியுசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்குமிடையே டி20 கிரிக்கெட் தொடர் போட்டி இன்று நடைபெற்றது.
இன்றைய வெற்றியின்  மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச முடிவு செய்தார்.
நியூஸிலாந்து அணியின் கப்தில் , முன்ரோ  இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்தே இந்திய வீரர்களின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்து வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
ஆக்லாந்து மைதானத்தில் ஸ்ட்ரைட் பவுண்டரி மிகவும் குறுகியதாக இருந்ததால் பவுண்டரி . சிக்ஸர் அடிக்க நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ஏதுவாக இருந்தது. அதனால் ஷமியும் , துபே,  ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சுகளின் பொழுது  சிக்ஸர் , பவுண்டரிகளாக குவிந்தன.
முன்ரோவும் , கப்திலும் அடித்து நொறுக்கியதால் பவர்ப்ளேயில் 68 ரன்களைச் சேர்த்தது நியூஸிலாந்து . பவர்ப்ளேயில் இந்தியாவுக்கு எதிராக நியூஸிலாந்து அடிக்கும் அதிகபட்சமான ஸ்கோர் இதுவாகும்.
முதல் விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்தனர்.

கப்தில் 30 ரன்னில் துபே பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கேப்டன் வில்லியம்ஸன் , முன்ரோவுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்த பின் ரன் சேர்க்கும் வேகம் கூடியது. முன்ரோ 36 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

4- வது விக்கெட்டுக்கு வந்த ராஸ் டெய்லர் , வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். இருவரும் 28 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தனர்.

இந்தியத் தரப்பில் பும்ரா , சாஹல், தாக்கூர் , ஜடேஜா , துபே ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்தியா அபார வெற்றி

ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 பந்துகள் மீதம் இருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டில் நியூசியை வென்றது.

அதிரடி ஆட்டம் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் 19வது ஓவரில் முதல் பந்தை சிக்சர் அடித்தார். பிறகு அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார், கடைசிப் பந்தை மீண்டும் சிக்சருக்கு அடித்தார், இந்த 2வது சிக்சர்  வின்னிங் ஷாட்டாக அமைந்தது.

இந்திய அணி சார்பில் கேப்டன் கோலி (45), ராகுல்(56) ரன்கள் சேர்த்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 29 பந்துகளில் 58 ரன்களிலும் , மணிஷ் பாண்டே14 ரன்களிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.