ஒத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு ஜனவரி 30-ல் மறைமுக தேர்தல்

பதிவு செய்த நாள் : 22 ஜனவரி 2020 15:32

சென்னை

தமிழ்நாட்டில்  ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. பல்வேறு காரணங்களுக்காக சில மாவட்டங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்தி வைக்கப்பட்ட மாவட்டங்களில்  ஜனவரி 30-ல் மறைமுக தேர்தல் நடைபெறும் என  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2019 டிசம்பர்  27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11-ல் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்,

42 ஊராட்சி ஒன்றிய தலைவர், 26 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், மற்றும் 266 ஊராட்சி மன்றங்களின் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் பல்வேறு காரணங்களுக்கான ஒத்திவைக்கப்பட்டது.

ஜனவரி 30ல் மறைமுகத் தேர்தல்

ஒத்திவைக்கப்பட்ட 294 பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 30-ல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் சுப்பிரமணியன் அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதில், தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடவடிக்கையை 10:30 மணிக்கும், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடவடிக்கையை பிற்பகல் 3:00 மணிக்கும் தொடங்கப்பட வேண்டும்.

மறைமுக தேர்தல் கூட்டம் தொடர்பாக 7 வேலை நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும்.

மறைமுகத் தேர்தல் குறித்து நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருந்தால், அதை முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மறைமுக தேர்தலை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி மறைமுக தேர்தல் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

மறைமுக தேர்தல் நடைபெறும் இடங்கள்:

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர்.

மங்களூர், நல்லூர், மொரப்பூர், ஈரோடு, தொக்கநாயக்கன்பாளையம், ஊத்தங்கரை, வாடிப்பட்டி, பரமத்தி, கொளத்தூர், 

சேலம் திருமங்கலம், சிவகங்கை திருப்புவனம், பேராவூரணி, சின்னமனூர், கே.மயிலாடும்பாறை, 

பெரியகுளம், தாண்டாரம்பேட்டை, துரிஞ்சாபுரம், கோவில்பட்டி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவிலங்காடு, திருத்தனி, நரிகுடி, ராஜபாளையம், சாத்தூர், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கும்,

42 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிகளுக்கும்,

266 ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிகளுக்கும் ஜனவரி 30-ல் மறைமுக தேர்தல் நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.