2021ல் சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 22 ஜனவரி 2020 15:21

சென்னை,

சமூகநீதியைக் காக்க 2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரி தமிழ்நாடு சட்டசபையில் அரசுத்  தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
இந்தியாவில் 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான அகிலேஷ் சிங் யாதவ் கூறியிருக்கிறார்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் இந்தியாவில் முழுமையான சமூகநீதியை உறுதி செய்ய முடியாது.
தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமும் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது.

2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கடந்த ஜூலை மாதமே பா.ம.க. வலியுறுத்தியிருந்தது.

ஹரியானா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான கோரிக்கை எழுந்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு என்ற கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அகிலேஷ்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை பல்வேறு தொகுப்புகளாக பிரித்து வழங்க நீதிபதி ரோகிணி ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. குறிப்பிட்ட சாதிகள் அடங்கிய ஒவ்வொரு தொகுப்புக்குமான இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது கட்டாயமாகும்.

2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படும் என்று 2018ஆம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். 

சாதிவாரி கணக்கெடுப்பாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழ்நாடு சட்டசபையில் அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ்தனது அறிக்கையில்  கூறியுள்ளார்.