தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்தக் கோரும் மாநாடு தொடக்கம்

பதிவு செய்த நாள் : 22 ஜனவரி 2020 14:11

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட வேண்டுகோள் விடுக்கும் மாநாடு தஞ்சாவூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. 

இதில், தமிழர் ஆன்மிக மரபுப்படி தமிழ் மந்திரங்களை அர்ச்சித்து தமிழ் வழியில் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டுகோள் விடுக்கும் வகையில், தஞ்சாவூர் (நாஞ்சிக்கோட்டை சாலை) காவேரி திருமண மண்டபத்தில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக் குழுத் தலைவர் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்துள்ளார்.

முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் வி.வி. சாமிநாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் த. பொன்னுசாமி அடிகளார், பெரியகோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, சித்தர்கள் மகா யாகம் நடைபெற்றது. இதில் சித்தர்கள் தமிழ் மந்திரங்கள் கூறி யாகம் செய்தனர்.

மேலும், தமிழ்மொழியில் குடமுழுக்க நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு செய்வதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தமிழில் குடமுழுக்கு நடத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.