எம்.ஜி.ஆருக்காகத்தான் மக்கள் அண்ணாவுக்கு ஓட்டு போட்டார்கள்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து

பதிவு செய்த நாள் : 22 ஜனவரி 2020 12:56

மதுரை,

எம்.ஜி.ஆருக்காகத்தான், அண்ணாவுக்கே மக்கள் ஓட்டு போட்டார்கள். கருணாநிதி முதலமைச்சராக காரணமும் எம்.ஜி.ஆர் தான் என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசினார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், விருதுநகர் தேசபந்து மைதான திடலில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அள்ளிக்கொடுக்கும் தலைவர்களாக வாழ்ந்தனர். அவர்கள் வழியில் வந்த முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தை சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஆன்மீக ஆட்சி, ஏழை-எளிய மக்கள் பற்றி சிந்திக்கக்கூடிய ஆட்சி நடைபெற்று வருகிறது.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தான் கிராமங்களுக்கு சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் தான் அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி கிடைத்தது.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது.

அ.தி.மு.க. ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எம்.ஜி.ஆருக்காகத்தான், அண்ணாவுக்கே மக்கள் ஓட்டு போட்டார்கள். கருணாநிதி முதலமைச்சராக காரணமும் எம்.ஜி.ஆர் தான்.

விருதுநகர் மாவட்ட மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான மருத்துவக் கல்லூரி தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆரை பார்த்தவர்கள் அவரைப் போல் வாழ வேண்டும் என நினைத்தார்கள். ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்., காமராஜர், ஜெயலலிதா.

அவர்களின் பிறப்பு சாதாரணமாக இருந்தது. ஆனால் அவர்களின் இழப்பு சரித்திரத்தையே திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது.

இவ்வாறு, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  பேசினார்.