உணவில் கலப்படம் பண்ணுபவர்கள் உஷார்!

பதிவு செய்த நாள் : 21 ஜனவரி 2020

பாலில் தண்ணீர், பால் மாவில் சுண்ணாம்பு பவுடர், நெய்யில் வனஸ்பதி என கலப்படம் செய்பவர்கள் உண்டு. சட்டத்தின் பிடியிலிருந்து இவர்கள் தப்பிக்கலாம்.

ஆனால் ஈரோடு மாவட்டம் அத்தாணி மாதேஸ்வரர் (சடையப்பர்) கோயிலிலுள்ள சந்திரசேகரரின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

ஒரு காலத்தில் காடாக இருந்த இப்பகுதியில் சடையப்பர் என்ற விவசாயி மேய்ச்சலுக்காக பசுக்களுடன் சென்றார். அவரை, புலி ஒன்று தாக்க வந்தது. சடையப்பர் சண்டையிட்டு விரட்டிய போதும் அவருக்கும், பசுவுக்கும் பலத்த காயம் ஏற்படவே சடையப்பரும், பசுவும் இறந்தனர்.

பசு இறந்த இடத்தில் நந்தி சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

அருகிலுள்ள ஓடையில் புதைந்து கிடந்த சிவலிங்கத்தை எடுத்து ‘மாதேஸ்வரர்’ என்னும் பெயரில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினர். விவசாயியின் நினைவாக ‘சடையப்பர் கோயில்’ என பெயரிட்டனர்.

பால் பொருட்களில் கலப்படம் செய்து குறுக்கு வழியில் பணம் சம்பாதித்ததே சடையப்பரின் இறப்புக்குக் காரணம் என்றும், இப்படி சம்பாதிக்கக்கூடாது என்பதை உணர்த்தவே புலி வடிவில் சிவன் வந்ததை மக்கள் உணர்ந்தனர். இங்கு சிவன் உக்கிர வடிவில் இருந்ததால், பிற்காலத்தில் சாந்தமான சந்திரசேகரர் சிலையைப் பிரதிஷ்டை செய்தனர். கலப்பட வியாபாரம் செய்பவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு முறையிடுகின்றனர்.

சந்திரசேகரருக்கு முன்புறமுள்ள சிவலிங்கத்தில் ஐந்து தலை நாகம் உள்ளது. திருமணத்தடை விலக மாதேஸ்வரர், ஆனந்தவள்ளி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வழிபடுகின்றனர். விநாயகர், பிரம்மா, பெருமாள், நவக்கிரக சன்னதியும் இங்குள்ளன.

இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 40 கி.மீ., கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து 20 கி.மீ.,

விசேஷ நாட்கள்: ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்திரி.

நேரம்: காலை 6.00 -– 11.00 மணி; மாலை 4.00 -– 8.00 மணி.

அருகிலுள்ள தலம்: 23 கி.மீ., துாரத்தில் பவானி சங்கமேஸ்வரர் கோயில்.