புதிய பங்கு வெளியீடுகள் நடப்பாண்டில் அதிகரிக்கும்

பதிவு செய்த நாள் : 20 ஜனவரி 2020


 இந்திய நிறுவனங்கள், கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், பங்கு வெளியீட்டின் மூலம், 2,400 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளதாக, இ.ஒய்.இந்தியா நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது.கடந்த ஆண்டில், டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்திய நிறுவனங்கள், பங்கு வெளியீட்டை மேற்கொண்டதன் மூலம், 2,400 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன.இக்காலகட்டத்தில் மொத்தம், 12 புதிய பங்கு வெளியீடுகள் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வளர்ச்சி

உலகளவில், இந்த காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, இந்தியா ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.கடந்த ஆண்டில் மொத்தம், 62 புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பங்கு வெளியீடுகளை மேற்கொண்டதன் மூலம், மொத்தம், 17 ஆயிரத்து, 899 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கையில், 54 சதவீதமும்; திரட்டப்பட்ட தொகையில், 62 சதவீதமும் குறைவு.நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு, சில்லரை வணிகம் ஆகிய துறைகளில், நான்கு பங்கு வெளியீடுகள், கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இதையடுத்து, வங்கி மற்றும் நிதிச் சந்தைகள் துறையில், மூன்று பங்கு வெளியீடுகளும்; தொழில் பொருட்கள் துறையில், இரண்டு வெளியீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு அறிவித்த கார்ப்பரேட் வரி குறைப்பு காரணமாக, நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.மேலும், வாகனம், ரியல் எஸ்டேட், தொலை தொடர்பு, நிதிச் சேவைகள் ஆகிய துறைகளுக்கு ஊக்க சலுகைகள் வழங்கி இருப்பதால், அத்துறை சார்ந்த நிறுவனங்கள் வளர்ச்சி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  மேலும், அன்னிய முதலீடுகளும் அதிகரித்து வருகிறது.ஆர்வம்சிறு மற்றும் நடுத்தர நிறுவன சந்தையில், கடந்த ஆண்டில், டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், எட்டு புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில், 32 ஆக இருந்தது. கடந்த ஆண்டில், செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கை, ஒன்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டில், டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ்’ நிறுவனம், 9,250 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை கோரி உள்ளது.

இது போன்ற பெரிய பங்கு வெளியீட்டுக்கான முயற்சிகள், சந்தையில் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் இருப்பதையே காட்டுகின்றன.மேலும், ஐ.ஆர்.சி.டி.சி., மற்றும் சி.எஸ்.பி., பேங்க் ஆகிய பங்கு வெளியீடுகள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

பொருளாதார மந்தநிலையை சரி செய்யும் வகையிலான அறிவிப்புகள், வரும் பட்ஜெட்டில் வெளிவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக, அதிக அளவிலான புதிய பங்கு வெளியீடுகளை இந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.