இந்தியா - ஆஸியுடன் 1 நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு

பதிவு செய்த நாள் : 19 ஜனவரி 2020 17:23

பெங்களூரு,

இந்தியாவுடனான 3வது ஒருநாள் மற்றும் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் மட்டை வீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்துள்ளது. 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான தொடரைத் தீர்மானிக்கும் 3வது ஒருநாள் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் களமிறங்கினார். இந்த ஆட்டத்திலும் வார்னரை தொடக்கத்திலேயே ஷமி ஆட்டமிழக்கச் செய்தார். இதன்பிறகு, ஃபின்ச் ரன் குவிக்கத் திணறினார்

ஸ்டீவ் ஸ்மித்தின் சொதப்பல் காரணமாக ஆரோன் ஃபின்ச் 19 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

ஸ்டீவ் ஸ்மித்துடன் மார்னஸ் லபுஷான் இணைந்தார். இருந்தபோதிலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களைத் துரிதமாக ரன் குவிக்கவிடாமல் கட்டுப்படுத்தினர்.

இந்த நெருக்கடியிலேயே லாபுஷேன் அரைசதம் அடித்த கையோடு 54 ரன்களுக்கு ஜடேஜா சுழலில் கோலியின் கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா மற்றும் குல்தீப் சுழலை அதிரடியாக எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி மிட்செல் ஸ்டார்க்கை முன்கூட்டியே களமிறக்கியது. ஆனால், அவர் அதே ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி, ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தார். ஆனால், முக்கியமான கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் விக்கெட்டை இழந்தது.

குல்தீப் யாதவ் வீசிய 42வது ஓவரில் அலெக்ஸ் கேரி 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஆஷ்டன் டர்னரும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஸ்டீவ் ஸ்மித் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். சதம் அடித்த பிறகும் அவர் ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் ரன் குவிப்பு வேகத்தை உயர்த்தினார்.

131 ரன்கள் எடுத்திருந்த அவர் ஷமி வேகத்தில் 48வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதே ஓவரில் ஷமி வீசிய யார்க்கர் பந்தில் முதல் பந்திலேயே போல்டாகி டக் அவுட் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்தது.

இந்திய அணித் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணி 287 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடி வருகிறது.

இந்திய அணிக்கு எதிராக சதம்

இந்திய அணிக்கு எதிராக பல்வேறு போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீரர்களின் வரிசை.

ரிக்கி பாண்டிங் - 14 சதங்கள்

ரிச்சர்ட்ஸ் - 11 சதங்கள்

சங்ககாரா - 11 சதங்கள்

ஸ்மித் - 10 சதங்கள்

ஜெயசூர்யா - 10 சதங்கள்

ஜெயவர்தனே - 10 சதங்கள்