ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸில் கோப்பை வென்ற சானியா மிர்சா - நடியா கிச்செனோக் ஜோடி

பதிவு செய்த நாள் : 18 ஜனவரி 2020 17:10

ஆஸ்திரேலியா

ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் போட்டியில் சானியா மிர்சா - நடியா கிச்செனோக் ஜோடி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்ற ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரைனின் நடியா கிச்செனோக் ஜோடி, சீனாவின் சங் மற்றும் பெங் ஜோடிக்கு எதிராக களமிறங்கியது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சானியா மிர்சா ஜோடி 6 - 4, 6 - 4 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

இது WTA இரட்டையர் போட்டிகளில் சானியா மிர்சா கைப்பற்றும் 42 வது கோப்பையாகும்.

குழந்தைபேறுக்காக ஓய்வில் இருந்த சானியா மிர்சா, 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் களமிறங்கிய முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியுள்ளார்.

வெற்றிக் கோப்பையை கைப்பற்றிய பின்னர் பேசிய சானியா மிர்சா,

டென்னிஸ் வாழ்க்கையில் இது மிகச்சிறந்த மறுபிரவேசம் என கூறினார்.

33 வயதில், ஒரு குழந்தைக்கு தாயான போதும்,  2 ஆண்டுகளுக்குப் பிறகு டென்னிஸ் களத்தில் அனல்பறக்க விளையாடிய சானியா மிர்சாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.