திடக்கழிவு மேலாண்மையை நிறைவேற்றாத உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாதந்தோறும் ரூ.10 லட்சம் அபராதம்

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 21:04

புதுடெல்லி

உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைப்பகுதியில் சேகரிக்கப்பட்ட திடக்கழிவு களை பதப்படுத்துதல் தொடர்பான விதிகளை அமல்படுத்த தவறிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாதந்தோறும் ரூ 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள் அபராத தொகையை செலுத்த முடியாத நிலை இருந்தால், மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுக்காக அந்த அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று அறிவித்தது.

தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான நீதிபதிகள் குழு இந்த தீர்ப்பினை வெளியிட்டது.

திடக்கழிவு மேலாண்மை தொடர்பான 2016 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட விதிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் பல மாநிலங்களில் ,திடக்கழிவு சேகரிக்கப்படும் இடங்களில் எந்த பணிகளும் இதுவரை துவக்கப்படவில்லை.

பல மாநிலங்களில் திடக்கழிவு முறையாக குறிப்பிட்ட கால இடைவெளியில் சேகரிக்கும் பணி நடைபெறவில்லை. சேகரிக்கப்பட்ட திடக்கழிவு களை பதப்படுத்தும் பணியும் நிறைவேற்றப்படவில்லை

,இந்தநிலையில் திடக்கழிவு தொடர்பான பணிகளை நிறைவேற்றுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அதிகாரிகளுக்கு பொறுப்புக்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அந்தப் பொறுப்புகளை அவர்கள் நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் அவர்களுடைய பணி அனுபவ கோப்புகளில் ரகசியமான குறிப்புகள் பகுதியில் அவர்கள் திடக்கழிவு மேலாண்மை பணிகளை நிறைவேற்றத் தவறி விட்டார்கள் என்று குறிப்புக்கள் சேர்க்கப்பட வேண்டும்.

இப்பணிகளை நிறைவேற்றத் தவறிய உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் தவறுகளுக்கு பொறுப்பு ஏற்பது அவசியம். அதன் காரணமாக 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை நிறைவேற்றத்  தவறும் பட்சத்தில் மாதம் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் அபராதம் செலுத்த நேரிடும்.

ஒவ்வொரு மாநில தலைமைச் செயலாளர் அலுவலகம் அலுவலகத்திலும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு பிரிவு ஒன்று அமைக்கப்பட வேண்டும். யூனியன் பிரதேசங்களிலும் இந்தக் கண்காணிப்பு செல் அமைக்கப்படுவது அவசியம். இந்தப் பிரிவில் உள்ள அதிகாரிகளும் திடக்கழிவு மேலாண்மை  விஷயத்தில் தவறுகள் ஏற்பட்டால் உரிய பொறுப்பினை ஏற்க வேண்டும்.

வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. என்று உத்தரப் பிரதேசம் பஞ்சாப் சண்டிகார் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் தவறாதுஅடுத்த விசாரணைத் தேதியில்  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டும்

2016 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகளை, எல்லா மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அமல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடக் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயம் முன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஒன்றின் மீதான விசாரணையின்போது இந்தக் கருத்துக்களை தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் வெளியிட்டார்