‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளுக்கு ‘ஆன் – ஆப்’ வசதி

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 20:52

மும்பை,

வங்கிகள், நிதிச் சேவை நிறுவனங்கள் வழங்கும், 'டெபிட், கிரெடிட்' கார்டுகளில், 'ஆன் அல்லது ஆப்' செய்யும் வசதி, அதாவது விரும்பும்போது, கார்டை இயக்க அல்லது முடக்கும் உரிமையை, கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

கடைகள் அல்லது வலைதளங்களில் பொருட்களை வாங்க, ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க, பல்வேறு சேவைகளுக்கு கட்டணம் செலுத்த என, ஏராளமான பரிவர்த்தனைகளுக்கு, டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுகின்றன. இவற்றின் பயன்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மோசடிகளும் பெருகி வருகின்றன.

இதைத் தடுக்க, கார்டுதாரருக்கு தேவைப்படும் போது, டெபிட் கார்டு பயன்பாட்டை அனுமதிக்கவும், தேவைப்படாத போது, பயன்பாட்டை நிறுத்தி வைக்கவும் வசதி செய்து தர வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துஉள்ளது.இணையம் வாயிலான, உள்நாடு மற்றும் வெளிநாடு பரிவர்த்தனைகளில், கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தாமல், அவற்றின் பின்புறம் உள்ள, சி.வி.வி., எண்கள் மூலம் பணம் செலுத்தலாம்.

இத்தகைய முறையிலும், வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் போது, கார்டுகளின் இயக்கத்தை அனுமதிக்கவும், தேவைப்படாத போது, முடக்கி வைக்கவும் வசதி செய்து தரப்பட வேண்டும்.டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம், ஒரு நாளைக்கு பணம் எடுக்கும் வரம்பை, வங்கிகள் நிர்ணயிக்கின்றன. வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, இந்த வரம்பை குறைத்து நிர்ணயிக்கும் வசதியை, வங்கிகள் வழங்க வேண்டும். மொபைல் போன், இணையம், ஏ.டி.எம்., இயந்திரங்கள் மற்றும் குரல் வழியிலான வங்கிச் சேவை உள்ளிட்ட அனைத்திலும், டெபிட், கிரெடிட் கார்டுகளை தேவைப்படும் போது பயன்படுத்தவும், தேவைப்படாத போது முடக்கி வைக்கவும் உரிய வசதியை வங்கிகள் வழங்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.