நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் கழகம் புகார் மனு

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 20:39

கோவை,

பெரியாரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகம் அமைப்பு புகார் மனு வழங்கியுள்ளது.

திராவிடர் விடுதலை கழகத்தின் மாநகர தலைவர் நேருதாஸ், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்.

அதில், துக்ளக் விழாவில் ரஜினி பேசுகையில் பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பொய்யான தகவலை வெளியிட்டதாகவும், இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நேருதாஸ், ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தர்பார் படம் திரையிடப்பட்டு இருக்கும் திரையரங்குகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

ஜனவரி 14ம் தேதி நடைபெற்ற துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் நாளிதழ் மற்றும் அதன் ஆசிரியர் சோ ராமசாமியையும் பாராட்டி பேசினார்.

அப்போது 1971-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு பேசினார். அதில் பெரியார் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

‘‘1971-ல் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அதை யாரும் பத்திரிகையில் போடவில்லை. சோ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அப்போது முதல்வர் கருணாநிதிக்குச் சிக்கல் உருவானது. அதன் பின்னர் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். அதற்கு அடுத்த வாரம் மீண்டும் அச்சடித்து கருப்பு நிறத்தில் அட்டை வெளியிட்டார் சோ. அந்தப் பத்திரிகை அதிக அளவில் விற்றது’’

‘‘அதன்மூலம் பத்திரிகை உலகில் பிரபலமானார் சோ. அதற்குக் காரணமானவர் கருணாநிதி. அதற்கு அடுத்த இதழில் தங்கள் பத்திரிகையின் பப்ளிசிட்டி மேனேஜர் என்று கலைஞர் படத்தைப் பெரிதாகப் போட்டார் சோ” என ரஜினி பேசியிருந்தார்.

ரஜினி இவ்வாறு பேசியதற்கு எதிராகவே தற்போது கோவையில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் தந்தை பெரியார் குறித்து பொய்யான தகவலைப் பரப்பி அவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ மற்றும் 505 ஓஎஃப் ஐபிசி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.