ஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர், முன்னாள் துணை சபாநாயகர் உட்பட 4 பேர் வீட்டுக் காவலில் இருந்து விடுவிப்பு

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 20:36

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அப்துல் ஹக் கான், முன்னாள் துணை சபாநாயகர் நசிர் அகமது குரேசி உட்பட 4 அரசியல் தலைவர்களை வியாழக்கிழமை இரவு ஜம்மு காஷ்மீர் அரசு விடுதலை செய்தது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட போது நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசியல் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டு 5 மாதங்கள் கடந்த நிலையில் நேற்றிரவு 4 தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

பிடிபி கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அப்துல் ஹக் கான், தேசிய மாநாடு கட்சியை சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் நாசிர் அகமது கான், மக்கள் மாநாடு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ முகமது அபாஸ் வானி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ அப்துல் ரஷித் ஆகிய 4 பேரையும் வீட்டுக் காவலில் இருந்து ஜம்மு காஷ்மீர் அரசு விடுவித்தது.

கடந்த மாதம் 5 அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 4 பேர் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.