சூரிய மின்சார உற்பத்திக்கு தேவையான இடுபொருள் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்க அதானி மற்றும் அசூர் பவர் தேர்வு

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 20:32

புதுடெல்லி

சூரிய மின்சார உற்பத்திக்கு உதவும் பொருள்களை தயாரிக்கவும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கவும் அதானி கிரீன் எனர்ஜி என்ற நிறுவனமும் அசூர் பவர் என்ற நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


இவை ஏல முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லியில் இந்தியா எனர்ஜி போரம் என்ற அமைப்பின் சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரவை செயலாளர் ஆனந்தகுமார் கலந்துகொண்டு பேசினார்.

 மாநாட்டு அரங்குக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசும் பொழுது சூரிய மின்சார உற்பத்திக்கு தேவையான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் உடன் இணைந்து செயல்பட ஏல முறையில் புள்ளிகள் கோரப்பட்டன. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனமும் அசூர் பவர் நிறுவனமும் ஏலப் புள்ளிகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன என . 

இந்த இவ்விரு நிறுவனங்களும் குறிப்பிட்ட ஏலத்தொகை பற்றிய தகவல்களை ஆனந்தகுமார் வெளியிடவில்லை.

முறையான அறிவிப்பு இப்பொழுது தயாரிக்கப்படுகிறது என ஆனந்தகுமார் கூறினார்.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு 1.5 ஜிகாவாட் சூரிய மின்சார உற்பத்தி தொகுப்புகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அந்த நிறுவனம் 6 ஜிகா வாட் திறனுள்ள சூரிய மின்சார ஆலையை நிறுவ வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்குகளை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் முறையே 2 மற்றும் 8 ஜிகா வாட்டாக உயர்த்திக் கொள்ளவும் முன்கூட்டியே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அசூர் பவர் நிறுவனம் 500 மெகாவாட் சூரிய மின்கலங்களை உற்பத்தி செய்யவும் இரண்டு ஜிகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும் புள்ளிகளை தாக்கல் செய்திருந்தது. அசூர் பவர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்நிறுவனம்  தன்னுடைய இலக்குகளை ஆயிரம் மெகாவாட் மற்றும் 4 ஜிகா வாட்டாக உயர்த்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒரு யூனிட் சூரிய மின்சாரத்திற்கான விலை ரூ. 2.92 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜிகா வாட் திறனுள்ள சூரிய மின்சார கலங்களை அமைப்பதற்கு தேவையான தொழில் நிறுவனத்தை ஏற்படுத்த ரூ.6000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்தியா தன்னுடைய சூரிய மின்சார உற்பத்திக்கு தேவையான பொருள்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது மொத்த தேவையில் 95 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.  இந்தியாவின் மொத்த இறக்குமதி மதிப்பு 1000 கோடி அமெரிக்க டாலர் ஆகும்.