நிர்பயா வழக்கு குற்றவாளிகளை பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிட டில்லி நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 20:20

புதுடில்லி,

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் 4 குற்றவாளிகளையும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட உத்தரவிட்டு டில்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று புதிய வாரண்டுகளை பிறப்பித்துள்ளது.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் ஜனவரி 22ம் தேதி தூக்கிலிட கடந்த வாரம் டில்லி செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். மேலும் தன் தண்டனை தேதியை ஒத்திவைக்கும்படி டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுக்கள் மீதான முடிவு தெரியாமல் மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது என டில்லி அரசு அறிவித்தது.

இந்நிலையில் முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்தார்.

அதைத் தொடர்ந்து 4 குற்றவாளிகளின் மரண தண்டனை தொடர்பாக புதிய வாரண்ட் பிறப்பிக்கும்படி திகார் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டனர்.

அதை ஏற்றுக்கொண்ட கூடுதல் செசன்ஸ் நீதிபதி சதிஷ் குமார் நிர்பயா வழக்கின் 4 குற்றவாளிகளையும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடும்படி திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.