கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடி ஜாமீன் தொகையை திருப்பிப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 20:17

புதுடில்லி,

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக, கார்த்தி சிதம்பரம் செலுத்திய பிணைத்தொகை ரூ.20 கோடியை அவரிடம் திருப்பி தரும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, பீட்டா் முகா்ஜி-இந்திராணி முகா்ஜிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதியை பெறுவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்ததில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக சிபிஐ கடந்த 2017 மே 15-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியே வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுதாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாதத்திற்கு தலா ரூ.10 கோடி வீதம் ரூ.20 கோடியை பிணைத்தொகையாக செலுத்தினால் அனுமதி வழங்கப்படும் என உத்தரவிட்டது.

அதன்படி, ரூ.20 கோடி ஜாமீன் தொகை செலுத்திவிட்டு வெளிநாடு சென்றுவிட்டு நாடு திரும்பினார். நாடு திரும்பிய கார்த்தி சிதம்பரத்திடம் ஜாமீனுக்காக அவர் செலுத்திய பிணைத்தொகை திருப்பி அளிக்கப்படவில்லை.

இதையடுத்து ஜாமீனுக்காக தான் செலுத்திய பிணைத்தொகை ரூ.20 கோடியை திருப்பி வழங்குமாறு உச்சநீதிமன்றம் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என கூறி மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு சென்று வருவதற்காக செலுத்திய ஜாமீன் பிணைத்தொகையான ரூ.20 கோடியை திருப்பி தர நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.