பலாத்கார வழக்கில் முன்னாள் எம்எல்ஏ செங்கார் அப்பீல் மனு

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 20:15

புதுடில்லி

மைனர் பெண் பலாத்கார வழக்கில் விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் முன்னாள் எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக பதில்மனு தாக்கல் செய்யுமாறு, சிபிஐக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது.

உ.பி.யில் உன்னாவ் மாவட்டம் மாக்கி கிராமத்தில், மைனர் பெண்ணை கடத்தி வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த வழக்கில், பாஜவில் இருந்து நீக்கப்பட்ட உ.பி. எம்எல்ஏ குல்தீப்சிங் செங்காருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 25 லட்சம் அபராதமும் விதித்து, டில்லி சிறப்பு கோர்ட் 2019 டிசம்பர் 20ம் தேதி தீர்ப்பளித்தது.

பெண்ணின் தந்தை மீது தொடரப்பட்ட சட்டவிரோத ஆயுத வழக்கு, சிறையில் தந்தை இறந்தது தொடர்பான வழக்கு, கார் விபத்து வழக்கு, அடியாட்களால் கூட்டு பலாத்கார வழக்கு ஆகிய 4 வழக்குகளையும் டில்லி சிறப்பு கோர்ட் விசாரித்து வருகிறது.

அப்பீல் மனு

இந்நிலையில், டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனுவில் குல்தீப்சிங் செங்கார் கூறியதாவது:

மாக்கி கிராமத்தில் மைனர் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நாளில், உன்னாவ் நகரத்தில் நான் இருந்தேன். அங்கிருந்து கான்பூருக்கு சென்றுவிட்டேன். இதை என் செல்போன் கால் பதிவுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால், ஆதாரங்களை தவறாக சிறப்பு கோர்ட் பரிசீலித்து, எனக்கு தண்டனை விதித்துள்ளது. எனவே, அப்பீல் மனு மீதான விசாரணை முடியும் வரை, எனக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.

நான் ஏழை

மேலும், நான் ஒரு ஏழை. என் வருமானத்தில் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். எனக்கு திருமண வயதில் 2 மகள்கள் இருக்கின்றனர். எனவே, எனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அப்பீல் மனுவில் செங்கார் கூறினார்.

நிறுத்திவைக்க மறுப்பு

டில்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் மன்மோகன், சங்கீதா திங்கரா செகல் கொண்ட பெஞ்ச் முன்னிலையில், செங்கார் அப்பீல் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்று, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

பலாத்கார வழக்கில் செங்கார் குற்றவாளி என சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அவர் மீது மேலும் 4 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. எனவே, அவருடைய தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது.

அவகாசம் அதிகரிப்பு

செங்கார் மற்றும் அவருடைய மனைவி பெயரில் பல சொத்துக்கள் இருப்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அவருடைய மனைவியிடம் நகைகளும் இருக்கின்றன. அவர் ஒரு குற்றவாளி என்பதால், அபராதத்தை ரத்து செய்ய முடியாது.

எனினும், அபராதம் செலுத்த விதிக்கப்பட்ட அவகாசம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்படுகிறது. ரூ. 25 லட்சம் அபராதத்தில், ரூ. 10 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும். மீதி தொகையை, அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஐகோர்ட் பதிவாளரிடம் செங்கார் டெபாசிட் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்பீல் மனு மீது பதில்மனு தாக்கல் செய்யுமாறு, சிபிஐ மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை மே மாதம் 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.