குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 18:46

சண்டிகர்,

பஞ்சாப் சட்டமன்றத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பஞ்சாப் அமைச்சர் பிராஹ்ம் மோஹிந்திரா இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். அவர் சட்டமன்றத்தில் தீர்மானத்தை வாசிக்கையில் :

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்தம் நாடு முழுவதும் எதிர்ப்பலைகளையும் போராட்டங்களையும் எழுப்பியுள்ளது. இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக பஞ்சாப் மாநிலத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பிரிவு மக்களும் அமைதி வழியில் போராடி வருகிறார்கள்.

இந்த குடியுரிமை சட்டத்திருத்தம் நம் நாட்டின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு எதிரான அம்சங்களை கொண்டது. நாம் அனைவரிடமும் சமத்துவத்தை போதிக்க வேண்டும்.

மதசார்பிலான பிரிவினையை ஏற்படுத்துவதுடன் சில குறிப்பிட்ட சமூக மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை பறிக்கவும் இந்த குடியுரிமை சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இங்கு சட்டத்தை மீறி செயல்பட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓசிஐ (OCI) கார்டை ரத்து செய்யவும் இந்த சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது.

இந்த குடியுரிமை சட்டத்திருத்தம் சட்டவிரோத குடியேறிகளை மத அடிப்படையில் பிரித்து பார்க்கிறது. இது அரசியலமைப்புக்கு விரோதமானது. நம் அரசியலமைப்பு அனைவருக்கும் சட்ட பாதுகாப்பு வழங்க வலியுறுத்துகிறது.

இவற்றின் அடிப்படையில் குடியுரிமை சட்டத்திருத்தம் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரான சட்டம் என தெளிவாகிறது. எனவே இந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களை சேர்ந்தவர்களுக்கு சமமான நீதியை வழங்கும்படி கோருகிறோம் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தேசிய மக்கள்தொகை பதிவேடு மூலம் கிடைக்கும் விவரங்களை பயன்படுத்தி தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.

இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு இந்திய குடியுரிமை மறுக்கப்பட்டு குடியுரிமை சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வாய்ப்புள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்து மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை களைய அதற்கு தொடர்புடைய ஆவணங்களில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் பஞ்சாப் அரசின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த தீர்மானம் மீது 3 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இறுதியில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குரல் வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி இரண்டும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. எதிர்க்கட்சியான பாஜக தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது. பாஜகவின் கூட்டணி கட்சியான சிரோன்மணி அகாலிதளம் இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்தில் குடி உரிமை வழங்கப்படும் 6 இனத்தவரோடு முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

கேரள அரசுக்கு அடுத்ததாக பஞ்சாப் அரசு குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.