இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜி சாட்-30 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 18:41

பெங்களூரு

இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜி சாட்-30 இன்று அதிகாலை 2.35 மணிக்கு வட அமெரிக்கா பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரூ ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட்டில் இருந்து ஜிசாட் 30 விடுபட்டு புவி சுற்றுப்பாதையில் தனது பயணத்தை துவங்கியது.

ஏரியான் ஏவுதள தலைமை நிர்வாகி ஸ்டீஃபானி இஸ்ரால் இஸ்ரோவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கொரூ தீவுக்கு ஜிசாட் 30 ஏவும் பொழுது கண்காணிக்க சென்றிருந்த இஸ்ரோ கட்டுப்பாட்டு மைய இயக்குனர்   பி.குன்ஹிகிருஷ்ணன். அங்கிருந்தபடி இஸ்ரோ நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

கொரூ கட்டுப்பாட்டில் இருந்து ஜி சாட்-30 விலகியதும்  தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது இஸ்ரோவின் மைய கட்டுப்பாட்டு மையம். ஜிசாட் 30 செயற்கைக்கோளுடன்  உடன் தொடர்பை ஏற்படுத்தி செயற்கைக்கோளின் எல்லா பகுதிகளும் முறையாக உள்ளனவா என்று சோதித்து அறிந்தது.

33 57 கிலோ கிராம் எடைகொண்ட இந்திய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் புவி சுற்றுப்பாதையில் பூமத்திய ரேகைக்கு மேலே 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வரும் வகையில் நிலைநிறுத்தப்படும்.

இந்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கைகள் முடிவடைந்ததும் செயற்கைக்கோளில் இணைக்கப்பட்டுள்ள சூரிய மின்சார தொகுப்புக்கள் விரிக்கப்படும்.

சூரிய மின்சார தொகுப்புக்கள் இயங்கத் தொடங்கியதும் செயற்கைக்கோளின் பல்வேறு பகுதிகளில் இயக்கத்துக்கு தேவையான மின்சாரம் கிடைக்கும். இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அனுப்பப்படும் கட்டளைகளை செயற்கைக்கோள் பெறுவதற்கு உதவும் வகையில் செயற்கைக்கோளில் இணைக்கப்பட்டுள்ள ஆன்டெனாக்களும் விரிக்கப்படும். பூமியிலிருந்து செயற்கைக் கோளுக்கு அனுப்பப்படும் கட்டளைகளை செயற்கைக்கோள் பெறுவதற்கு இந்த ஆன்டென்னாக்கள் உதவும்.

அதன் பிறகு இந்தியா அதன் தீவுகள், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தகவல் தொடர்புக்கு ஜி சாட்-30 உதவி செய்யும். மேலும் பூமியிலிருந்துஅனுப்பப்படும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஜி சாட்-30  உதவும்.

12 சி டிரான்ஸ்டர்கள் . 13 கு பேண்ட்  கொண்ட ஜிசாட்  30 செயற்கைக்கோள் 15 ஆண்டுகள் புவி சுற்றுப்பாதையில் தனது சேவைகளை தொடர்ந்து செய்யும் ஜி சாட்-30 உடன் ஐரோப்பிய யூனியனுக்கான தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஒன்றும் விண்ணில் எடுத்துச்செல்லப்பட்டது.

தகவல் தொடர்புக்காக இந்தியாவின் 24 செயற்கைக் கோள்கள் ஏரியான் ராக்கெட்டில் கொரூவில் இருந்து விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தகுந்தது.