ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் தொகுப்பு 2025ல் இந்தியாவுக்கு கிடைக்கும் : ரஷ்யா உறுதி

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 15:23

புதுடெல்லி

ரஷ்யாவிடம் வாங்க இந்தியா பணம் செலுத்தி உள்ள எஸ்-400 ரக ஏவுகணை எதிர்ப்பு கருவி தொகுப்பு 2025ம் ஆண்டு இந்தியா கையில் வழங்கப்பட்டுவிடும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதரக உதவி தலைமை அதிகாரி ரோமன் பாபு ஷிக்கின் இன்று அறிவித்தார்.

ரோமன் பாபு ஷிக்கின் இன்று டெல்லியில் கூறிய செய்தியின் விவரம்:

எஸ்-400ஏவுகணைகள் எதிர்ப்பு கருவி தொகுப்பு தொழில்நுட்பரீதியில் மேம்பட்டதாகும்.  இதற்கு முன்னர் எஸ்-300 என்ற பெயரில் ஏவுகணை எதிர்ப்பு கருவி தொகுப்பு ரஷ்யாவில் பயன்படுத்தப்பட்டது. எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு கருவி தொகுப்புக்கள் 2007ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. எஸ்-400 கருவித் தொகுப்பு இதுவரை வேறு எந்த நாட்டுக்கும் வழங்கப்படவில்லை.

இந்தியாவிற்கு வழங்குவதற்கான எஸ்-400  கருவி தொகுப்பு உற்பத்தி செய்யும் பணி ரஷ்யாவில் துவங்கிவிட்டது. அல்மாஜ் அந்தே என்ற கம்பெனி எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு கருவி தொகுப்புகளை தயாரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு எஸ்-400 கருவித் தொகுப்பு இந்தியாவிடம் வழங்கப்பட்டுவிடும் என ரோமன் பாபு ஷிக்கின் கூறினார்.

வரும் மார்ச் மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் இந்தியா- ரஷ்யா- சீனா ஆகிய மூன்று நாடுகளின் உச்சிமாநாடு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ள இருக்கிறார் என இந்தியாவுக்கான மாஸ்கோ  தூதர் நிக்கோலாய்  குடஷேவ் கூறினார்.

காஷ்மீர் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் சீனா எழுப்ப முயற்சி செய்வது குறித்து ரஷ்யாவுக்கான இந்தியத்  தூதரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

காஷ்மீர் தொடர்பாக இந்தியாவின் அணுகுமுறை, நடவடிக்கைகள் குறித்து ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதனால் ஜம்மு-காஷ்மீருக்கு ரஷ்யப் பிரதிநிதி  செல்லவில்லை.  சந்தேகம் இருக்கிறவர்கள், ஜம்மு-காஷ்மீருக்கு நேரில் போய் பார்க்கலாம். எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, என ரஷ்ய தூதர் நிக்கொலாய் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் பிரச்சனை முழுக்கமுழுக்க பாகிஸ்தான் - இந்தியா சம்பந்தப்பட்ட இருதரப்பு பிரச்சனையாகும். இந்தப் பிரச்சனையை சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் அறிவிப்பு விதிகளின் அடிப்படையில் பேசித் தீர்வு காண இயலும் என இந்தியாவுக்கான மாஸ்கோ  தூதர் நிக்கோலாய்  குடஷேவ் குறிப்பிட்டார்.

எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு கருவி தொகுப்பை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவாவில் நடந்த இந்திய ரஷிய உச்சி மாநாட்டில் கையெழுத்தானது.

ஐந்து ஏவுகணை எதிர்ப்பு கருவி தொகுப்பை வாங்க இந்தியா சம்மதம் தெரிவித்தது. இதற்கான ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கையெழுத்தானது விலை விவரங்கள் பின்னர் முடிவுசெய்யப்பட்டது 5 ஏவுகணை எதிர்ப்பு கருவி தொகுப்புக்கு இந்தியா 5.43 பில்லியன் டாலர் செலுத்தியது.

எஸ்-400 கருவி தொகுப்பை விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா கடுமையாக குறைகூறி வந்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா எஸ்-400 கருவித் தொகுப்பை விலைக்கு வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்து வருகிறது. கடந்த ஜனவரி 9ஆம் தேதி வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூட இந்தியாவை அமெரிக்க வெளியுறவுத்துறை உயரதிகாரி கடுமையாக எச்சரித்தார்.