அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள் : சிறந்த வீரர், சிறந்த காளைக்கு சாண்ட்ரோ கார் பரிசு

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 13:26

மதுரை,

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. ஜல்லிகட்டில் சிறந்த வீரராக தேர்வான ரஞ்சித் குமார் மற்றும் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட கருப்பனின் உரிமையாளர் குலமங்களம் மாரநாடுக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சார்பில் சாண்ட்ரோ கார்கள் பரிசாக வழங்கப்பட்டன.

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது.

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 .10 மணி வரை நடைபெற்றது.

பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கு  மருத்துவப் பரிசோதனை முடிந்த பின் வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பின் ஜல்லிக்கட்டை, தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வினய், ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

வாடிவாசல் பகுதியில் இருந்து முதல் மரியாதை செய்யப்பட்ட 3 காளை முதலில் அவிழ்த்துவிடப்பட்டது. பின்னர், ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் 3 காளைகள் சீறி பாய்ந்தன. அந்த காளைகளை யாராலும் அடக்க முடிய வில்லை.

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் மொத்தம் 688 மாடுபிடி வீரர்கள்மற்றும் 739 காளைகள் பங்கேற்றன.

ஜல்லிக்கட்டு விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 2000க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

காளைகளை வென்ற வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு, டீ.வி, கிரைண்டர், சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டன.

கார் பரிசு

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கிய ப.ரஞ்சித் குமார் சிறந்த வீரராக முதல் பரிசை தட்டி சென்றார். இவர் ஒரே சுற்றில் 13 காளைகளை அடக்கி புதிய சாதனையை படைத்தார்.

ரஞ்சித் குமாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஹூண்டாய் நிறுவனத்தின் சண்ட்ரோ கார் பரிசாக அறிவிக்கப்பட்டது. காருக்கான சாவி முதல்வர் இல்லத்தில் ப.ரஞ்சித்திடம் ஒப்படைக்கப்படும் தெரிவிக்கப்பட்டது. 

அதைத் தவிர ரூ.7 லட்சம் மதிப்புள்ள 4 பசுமாடுகளும் ப.ரஞ்சித்துக்கு பரிசாக  வழங்கப்பட்டது. 

ஜல்லிகட்டில் 14 காளைகளை பிடித்த கார்த்திக் இரண்டாவது இடத்தை பிடித்தார். அவருக்கு பரிசு கோப்பையுடன் சிடி 100 பைக் பரிசாக வழங்கப்பட்டது. 

அடுத்தப்படியாக 13 காளைகளை பிடித்து 3வது பரிசை வென்ற கணேசனுக்கு  ரூ.10,000 வழங்கப்பட்டது.

அதேபோல் களத்தில் வீரர்களிடம் பிடிபடாமல்  கெத்து காட்டிய கருப்பன் காளை சிறந்த காளைக்கான முதல் பரிசை பெற்றது. கருப்பன் காளையின் உரிமையாளர் குலமங்களம் மாரநாடுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் சாண்ட்ரோ கார் பரிசாக அறிவிக்கப்பட்டது. அந்த காரின் சாவி துணை முதல்வரின் அலுவலகத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

புதுகோட்டை காவல்துறை ஆய்வாளர்  அனுராதாவின் ராவணன் காளை  இரண்டாம் பரிசு வென்றது. ஜனவரி 15ம் தேதி நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ராவணன் காளை முதல் பரிசு வென்றது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிகட்டு பேரவையை சேர்ந்த ஜி.கார்த்திக்கின் காளை மூன்றாம் பரிசு வென்றது.