அரசியல் மேடை: வெற்றிக்கு தோல்வி! தோல்விக்கு வெற்றி!! இதுதாண்டா அரசியல்!!!

பதிவு செய்த நாள் : 18 ஜனவரி 2020

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் தமிழக அரசியல் களத்தின் எதார்த்தை பிரதிபலித்திருப்பதாகவே தெரிகிறது. பெரும்பாலான அரசியல் கட்சியினருக்கு கட்சியின் மீதோ, கட்சித் தலைமையின் மீதோ கொள்கை லட்சியங்களின் மீதோ, போதுமான பிடிமானம் இல்லை. நம்பகத்தன்மையும் இல்லை என்பதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியிருக்கின்றன.

முதல் இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 515 மாவட்டக் கவுன்சிலர் பதவி இடங்களில் 244 இடங்களை திமுகவும், 214 இடங்களை அதிமுகவும் பெற்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங். 15 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 7 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும், வெற்றி பெற்றிருந்தன. அதேபோல அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ஜ. 7 இடங்களையும், தேமுதிக 3 இடங்களையும் பெற்றிருந்தன.

அதேபோல மொத்தமுள்ள 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய  கவுன்சிலர் பதவிகளில் 2 ஆயிரத்து 99 இடங்களை திமுக கைப்பற்றி இருந்தது. ஆயிரத்து 781 இடங்களை அதிமுக பெற்றிருந்தது. திமுக கூட்டணிக் கட்சியான காங் 133, இந்திய கம்யூனிஸ்ட் 62, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 32 என்ற அளவில் பெற்றிருந்தன.

அதிமுக கூட்டணிக் கட்சிகளான பாஜ. 86, பாமக 217, தேமுதிக 99 இடங்களைப் பெற்றிருந்தன. அமமுக சுமார் 94 இடங்களிலும் சுயேட்சைகள் 455 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மாவட்ட பஞ்சாயத்து தேர்தலிலும், ஊராட்சி ஒன்றிய தேர்தலிலும் திமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியதால், மாவட்டத் தலைவர் மற்றும் ஒன்றியத் தலைவர் தேர்தல்களில் நிச்சயம் அதிக இடங்களைக் கைப்பற்றுவோம் என திமுக நம்பியது. ஆனால், அது நடக்கவில்லை.

மொத்தமுள்ள 27 மாவட்டங்களில் 14 மாவட்டத் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. 12 இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. அதேபோல ஒன்றியத் தலைவர் பதவிகளிலும் 150 இடங்களை அதிமுகவும், 135 இடங்களை மட்டுமே திமுகவும் கைப்பற்றியுள்ளன. கவுன்சிலர்கள் அதிகம் வெற்றி பெற்றும் தலைவர் பதவிகளில் ஏன் இந்த தோல்வி திமுகவுக்கு? ‘இதுதாண்டா அரசியல்!’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

கட்சி மற்றும் கட்சித் தலைமை மீது ஈடுபாடு இருந்திருந்தால், கூட்டணிக் கட்சியினருக்கு உரிய மரியாதை அளித்திருந்தால், நிச்சயம் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்காது என்பதும் பொது வெளிக் கருத்தாக உள்ளது. திமுக – காங். இடையே ஏற்பட்ட கடைசிநேர உரசலும் கூட அவர்களின் வெற்றியைப் பாதித்திருக்கும்.

பொதுவாக ஊரகப் பகுதிகளில் எப்போதுமே அதிமுகவுக்கு செல்வாக்கு இருக்கும். அந்த வகையில் கிராமப்புற பஞ்சாயத்து கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்களில் பெரும்பாலானவற்றை அக்கட்சியினர் பெற்றிருப்பார்கள். இவற்றுக்கு கட்சி ரீதியிலான சின்னம் இல்லை என்றாலும், கட்சி சார்பாகத்தான் பலரும் அடையாளப்படுத் தப்பட்டிருப்பார்கள். இப்போது நடைபெற்ற தேர்தலின்போது ஆட்சிக் கட்சியான அதிமுகவிற்கு எதிராக திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடுமையான எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இந்த நிலையிலும் அதிமுக இத்தனை இடங்களில் வெற்றி பெற்றிருப்பது அவர்களுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆதரவு பெரிய அளவில் குறையவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

மாவட்டக் கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர் தேர்தல்களில் ஏற்ற – இறக்கம் இருந்த நிலையிலும், தலைமைப் பொறுப்புக்கு அதிமுகவுக்கு முக்கியத்துவம், பெரும்பான்மை கிடைத்திருப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மத்தியில் கட்சிகளை கடந்து ஆட்சிக் கட்சிக்கு ஆதரவு கிடைத்திருப்பதாகவே தெரிகிறது. சமுதாயச் செல்வாக்கு, பணம், உள்ளூர் செல்வாக்கு, குதிரை பேரம் என்றெல்லாம் திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும் விமர்சித்தாலும் கூட அதிமுகவின் வாக்கு வங்கியில், 2019 பார்லிமெண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு தொடரவில்லை. அது மீண்டும் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது என்பதையே இந்த தேர்தல் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் என்றாலே, அதில் ஆளும் கட்சியின் தலையீடு அதிகமாக இருக்கும். வன்முறை தலைதூக்கும் என்ற நிலை கடந்த தேர்தல்களின்போதும் இருந்ததை நாம் பார்த்தோம். ஆனால் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக, சுதந்திரமாக, பாரபட்சமின்றி நடைபெற்றது என்பதற்கு திமுக பெற்ற வெற்றியே சான்றாகும்.

வாக்கு எண்ணிக்கை மற்றும் தலைவர், துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தலின்போது ஒன்றிரண்டு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும், பெரிய அளவிற்கு முறைகேடு இல்லை என்பதை மக்களே ஏற்றுக் கொள்வார்கள்.

இதேபோல, மீதமுள்ள 9 மாவட்டங்களிலும், 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அடுத்த கட்டத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீரப்பின் அடிப்படையில் இன்னும் 2 மாத காலத்திற்குள் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தல் வரலாம். அத்தோடு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல்களும் மொத்தமாக ஒரே கட்டமாக நடைபெறுமா? அல்லது தனித்தனியாக நடைபெறுமா? என்பதை மாநிலத் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும்.

அந்தத் தேர்தலிலும் அதிமுக – திமுகவின் பலப்பரீட்சை நடக்கும். ஒட்டுமொத்தமாக எல்லா தேர்தல்களும் நடைபெற்று முடிந்த நிலையில்தான் இதில் யார் கை ஓங்கியிருக்கிறது என்பது தெரிய வரும்.