சாயம் பூசிய நரி!

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020

நெற்­குப்பை என்ற ஊரில், பெரிய காடு இருந்­தது. அங்கு, ஒரு நரி வசித்து வந்­தது. இரை தேடி புறப்­பட்ட நரி, வழி­த­வறி நக­ரத்­துக்கு சென்­றது. அங்­கி­ருந்த நாய்­கள் திரண்டு, பயங்­க­ர­மாக குரைத்து விரட்­டின. தப்பி ஓடிய நரி, ஒரு வீட்­டுக்­குள் நுழைந்­தது.

அது, துணி­க­ளுக்கு சாயம் ஏற்­று­ப­வன் வீடு. வீட்­ட­ருகே, தொட்­டி­யில் நீலச்­சா­யம் கலந்து வைத்­தி­ருந்­தான். நாய்­க­ளுக்கு பயந்து, மறை­வி­டம் தேடிய நரி, நீலச்­சாய தொட்­டிக்­குள் குதித்­தது.

துரத்தி வந்த நாய்­கள், நரி­யைக் காணா­மல், பல­மாக குரைத்­த­படி ஓடி­விட்­டன.

குரைப்பு அர­வம் அடங்­கி­ய­தும், மெல்ல வெளியே வந்­தது நரி. சாய தொட்­டி­யில் அமிழ்ந்து கிடந்­த­தால், அதன் உடல், நீல நிற­மாகி விட்­டது.

நாய்­க­ளின் கண்­ணில் படா­மல் காட்­டுக்­குள் ஓடி­யது. நீல நிறத்­தில் ஓடிய விலங்கை கண்ட, சிங்­கம், புலி, கரடி, யானை போன்ற பல­சா­லி­கள் பீதி அடைந்­தன.

'இது வழக்­க­மான காட்டு விலங்­காக தெரி­ய­வில்லை. இத­னு­டன் பழக்­கம் வைத்­தால் ஆபத்து ஏற்­ப­டும்...' என பேசி­ய­ப­டியே ஓடி ஒளிந்­தன.

அந்த அச்­சத்தை, புரிந்து கொண்ட நீல­நரி, பல­வீ­னத்தை சாத­க­மாக பயன்­ப­டுத்தி பிழைக்க தீர்­மா­னித்­தது.

ஓடி ஒளிந்த விலங்­கு­களை எல்­லாம் கூவி அழைத்து, 'சற்று நில்­லுங்­கள்... உங்­கள் நலனை காக்­கத்­தான் வந்­தி­ருக்­கி­றேன்; அனா­வ­சி­ய­மாக அச்­சப்­பட வேண்­டாம்...' என, மிடுக் குர­லில் பேசி­யது.

அறி­மு­க­மான குர­லாக இருந்­த­தால், விலங்­கு­கள் ஓடு­வதை நிறுத்தி, தயக்­கத்­து­டன் நீல­நரி பக்­கம் வந்­தன.

உயர்ந்து நின்ற பாறை­யில் ஏறிய நீல­நரி, குரலை மாற்றி, 'வானு­ல­கத்­தி­லி­ருந்து, என்னை அனுப்­பி­யுள்­ளார் கட­வுள். உங்­க­ளுக்கு சேவை செய்ய வந்­தி­ருக்­கி­றேன். இந்த காட்­டின் அர­ச­னாக பணி­யாற்ற வேண்­டும் என்­பது கட­வு­ளின் கட்­டளை; இந்த கணம் முதல், நான் அர­ச­னா­கி­விட்­டேன்...' என்­றது.

அந்த பேச்­சில் மயங்­கிய விலங்­கு­கள், மகிழ்ச்சி ஆர­வா­ரத்­து­டன் வர­வேற்­றன.

ஏற்­க­னவே, அந்த காட்­டின் அரச பத­விக்கு வர, பெரிய போட்­டி­யி­ருந்­தது. சிங்­கம், புலி, சிறுத்தை, யானை என, வலி­மை­யான விலங்­கு­கள், பத­வியை பிடிக்க துடித்­தன. இந்த பூச­லுக்கு இடையே, சம்­பந்­த­மில்­லாத விலங்கு மன்­ன­னா­ன­தில், அனைத்து விலங்­கு­க­ளுக்­கும் பரம திருப்தி.

இப்­போது, பிற பத­வி­க­ளுக்கு போட்டி ஏற்­பட்­டது. சர்ச்­சைக்கு இட­ம­ளிக்­கா­மல், சர்­வா­தி­கா­ர­மாக பத­வி­கள் கொடுத்­தது நீல­நரி.

சிங்­கத்­துக்கு, முதல் அமைச்­சர் பதவி தரப்­பட்­டது; புலி­யி­டம் படை தலைமை ஒப்­ப­டைக்­கப்­பட்­டது; சிறுத்தை, காவ­லர்­க­ளின் தலை­வ­னாக நிய­மிக்­கப்­பட்­டது. கலைத்­துறை குரங்­கி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

ஆனால், நரி இனத்­திற்கு எந்த பதவி கொடுக்­க­வில்லை; இவ்­வாறு செய்­த­தற்கு கார­ணம் இருந்­தது. நரி­களை அருகே வைத்­தி­ருந்­தால், குட்டு வெளிப்­பட்டு விடும் என, அஞ்­சி­யது நீல­நரி.

நிறத்­தில் தான் வேறு­பாடே தவிர, இயல்­பில் வித்­தி­யா­ச­மில்லை என, நரி­கள் உணர்ந்­தால், அடுத்த கணமே பதவி பறி­போய் விடும் என பயந்­தது. அத­னால், நரி­களை அரு­கில் நெருங்­க­வி­டா­மல் பார்த்­துக் கொண்­டது.

வலிமை மிக்க விலங்­கு­கள் வேட்டை யாடும் இறைச்­சியை தானும் உண்டு, மீந்­த­வற்றை, எளிய விலங்­கு­க­ளுக்கு வழங்கி, உல்­லா­ச­மாக, சுக போகத்­து­டன் ஆட்சி நடத்­தி­யது நீல­நரி.

பதவி கிடைக்­காத ஆத்­தி­ரத்­தில் இருந்த நரி­கள், கூடி யோசித்­தன.

அறி­வாற்­றல் நிரம்­பிய முதிய நரி, 'அன்­பர்­களே... நம்மை ஆட்சி செய்­யும் விலங்கு, மோச­டி­யாக தான் மன்­னர் பத­வியை பிடித்­துள்­ளது. அது, எல்லா அம்­சங்­க­ளி­லும் நம்­மைப் போன்றே உள்­ளது. நிறம் மட்­டும் தான் நீல­மாக இருக்­கி­றது. ஏதோ சூழ்ச்சி நடந்­துள்­ள­தாக எனக்கு தோன்­ற­கி­றது...

'நாளை பவுர்­ணமி தினம். சபை­யைக் கூட்டி, அலு­வல்­களை மன்­னர் கவ­னிக்­கும் போது, நாமெல்­லாம் ஒரு பக்­கம் கூடி ஊளை­யி­டு­வோம். அப்­போது, மன்­ன­ரின் உண்மை தோற்­றம் புலப்­ப­டும்...' என்று கூறி­யது.

அந்த திட்­டத்தை நரி­கள் எல்­லாம் ஏற்­றன.

மறு­நாள் இரவு, நிலவு பிர­கா­சித்­துக் கொண்­டி­ருந்­தது. சபை­யைக் கூட்டி, அலு­வல்­களை கவ­னித்­துக் கொண்­டி­ருந்­தது நீல­நரி.

சபை­யின் அருகே, மறை­வாக கூடிய நரி­கள், ஊளை­யிட துவங்­கின. அதை கேட்­ட­தும், நீல­நரி கிளர்ச்­சி­ய­டைந்து, உற்­சா­க­மாக ஊளை­யிட துவங்­கி­யது.

ஓடி­வந்த நரி­கள், 'அன்­பர்­களே... மன்­ன­னாக இருப்­பது, நரி தான். நீங்­கள் நினைப்­பது போல, தேவ­லோக விலங்­கன்று. உட­லில் நீலச்­சா­யம் பூசி, வேஷம் போட்டு முட்­டா­ளாக்­கி­யுள்­ளது...' என கூறின.

விலங்­கு­கள் திரண்டு, நீல­ந­ரியை நோக்கி பாய்ந்­தன. உயிர் பிழைக்க, விழுந்­த­டித்து ஓடி­யது.

அப்­போது, மழை லேசாக துார துவங்­கி­யது. நீல சாயம் கரைந்­தது. வேஷம் கலைந்த நரி­யைக் கண்டு, கைகொட்டி சிரித்­தன விலங்­கு­கள். மன்­னர் பத­வியை இழந்­தது நீல­நரி.

குழந்­தை­களே... ஏமாற்றி பிழைப்­பது நீண்ட நாள் நீடிக்­காது; நரி­யின் கதி­தான் ஏற்­ப­டும். எப்­போ­தும் நேர்­மையை கடைப்­பி­டித்து, மகிழ்ச்­சி­யாக வாழுங்­கள்!