குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திரிபுரா பழங்குடியினர் ஜனவரி 17ம் தேதி முதல் 9 நாள் தர்ணா போராட்டம்

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020 18:55

அகர்டலா,

திரிபுரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழங்குடியினர் பிரிவான திரிபுரா ராஜ்ய உபஜதி கானமுக்தி பரிஷத் அமைப்பினர் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜனவரி 17ம் தேதி முதல் 9 நாள் தர்ணா போராட்டம் நடத்த போவதாக திங்கள்கிழமை அறிவித்தனர்.

திரிபுரா ராஜ்ய உபஜதி கானமுக்தி பரிஷத் அமைப்பின் தலைவர் ஜிதேந்திர சவுத்ரி நேற்று மாலை செய்தியாளர்களிடம் 9 நாள் தர்ணா போராட்டம் பற்றி தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத்திருத்தம் நாட்டு மக்களை பிளவுபடுத்தி இந்துத்துவா கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் திரும்ப பெறப்படும் வரை நாங்கள் போராடுவோம்.

மாநிலத்தின் 8 மாவட்டங்களிலும் ஜனவரி 17ம் தேதி முதல் 9 நாள் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறும். அதன் பின் பிப்ரவரி 8ம் தேதி குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும். இதைத் தவிர மேலும் பல போராட்டங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்கள் அண்டை நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்தால் சட்டவிரோத குடியேறிகளின் ஊடுருவல்கள் அதிகரிக்கும்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரிபுரா உட்பட நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என வலியுறுத்துகிறோம்.

திரிபுராவை ஆளும் பாஜக – ஐ.பி.எஃப்.டி அரசு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது.

மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அரசு வேலைகளுக்கு வழக்கமான முறையில் ஆள் எடுக்காமல் தற்போது ஒப்பந்த முறையில் ஆட்களை அரசு அமர்த்துகிறது இவ்வாறு ஜிதேந்திர சவுத்ரி குற்றம்சாட்டினார்.