அதிபர் டிரம்புக்கு எதிரான விசாரணை செனட் சபையில் ஜனவரி 21ம் தேதி துவக்கம்

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020 18:52

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான விசாரணை நாடாளுமன்ற செனட் சபையில் வரும் ஜனவரி 21ம் தேதி துவங்க வாய்ப்புள்ளது என செனட்டர் ஜான் கோர்னின் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்புக்கு எதிராக களமிறங்கியுள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் தொடர்பாக விசாரணை நடத்தும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கீக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அதிபர் டிரம்புக்கு எதிராக விசாரணை நடத்தியது.

விசாரணை முடிவில் அதிபர் டிரம்ப் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவரை பதவி நீக்க வேண்டும் என்றும் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து தற்போது செனட் சபையில் அதிபர் டிரம்புக்கு எதிரான விசாரணை நடைபெற உள்ளது. செனட் சபையில் ஆளும் குடியரசு கட்சி பெரும்பான்மையாக உள்ளதால் அதிபர் டிரம்புக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குடியரசு கட்சியை சேர்ந்த செல்வாக்குமிக்க செனட் உறுப்பினரான ஜான் காரின் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது அதிபர் டிரம்புக்கு எதிரான விசாரணை செனட் சபையில் வரும் 21ம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக கூறினார்.

அதிபர் டிரம்புக்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சபாநாயகர் நான்சி பெலோசி இந்த வாரம் செனட் சபைக்கு அனுப்பி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்மானத்தை அனுப்பி வைப்பதில் நான்சி பெலோசி காட்டும் தாமதம் செனட் உறுப்பினர்களாக உள்ள ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர்களை பாதிப்பதாக செனட்டர் ஜான் காரின் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில் அதிபர் டிரம்புக்கு எதிரான தீர்மானத்தை ரத்து செய்யும் மசோதாவை செனட்டர் ஜோஷ் ஹாவ்லி தாக்கல் செய்யவுள்ளார். அந்த மசோதாவுக்கு செனட்டர்கள் ஜான் காரின், மைக் லீ, ஜெர்ரி மோரன் ஆகியோர் ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.