நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 2 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020 17:15

புதுடில்லி,

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் 4 குற்றவாளிகளில் 2 பேர் தங்கள் மரண தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கடந்த 2012ம் ஆண்டு டில்லியில் நிர்பயா என்ற மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் 4 குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தூக்கு தண்டனையை கடந்த 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 7ம் தேதி டில்லி செசன்ஸ் நீதிமன்றம் நிர்பயா வழக்கின் 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்டை பிறப்பித்தது. வரும் ஜனவரி 22ம் தேதி அவர்கள் நால்வரும் திகார் சிறையில் தூக்கிலிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து நிர்பயா வழக்கு குற்றவாளிகள் வினய் சர்மா (26) மற்றும் முகேஷ் குமார் (32) ஜனவரி 9ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது.

விசாராணை முடிவில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் மூலம் குற்றவாளிகள் 4 பேரும் ஜனவரி 22ம் தேதி தூக்கிலிடப்படுவது உறுதியாகியுள்ளது.