தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறி வருகிறது: சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020 17:14

சேலம்,

தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறி வருகிறது என சேலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தொடர்ந்து தேசிய விருதுகளை பெற்று வருகிறது. இதனை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். மக்கள் தான் எங்களுக்கு எஜமானர்கள். மக்கள் அளிக்கும் தீர்ப்பு எங்களுக்கு நியாயமானது.

எதிர்கட்சித் தலைவர் மட்டும் குறை சொல்லி வருகிறார், தேவையில்லாத குற்றச்சாட்டுகளைச் சொல்லி வருவதை அவர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்று முதலமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் எந்த ஒரு சிறுபான்மை யினரும் பாதிக்கப்பட மாட்டார்கள். யாரும் அச்சப்படத் தேவையில்லை இஸ்லாமியர்கள் அச்சப்படத் தேவையில்லை. குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பரப்பப்படும் அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம். தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் செயல்களை யாரும் ஈடுபட வேண்டாம் என்று முதலமைச்சர் கூறினார்.

தமிழ்நாடு அமைதிப் பூங்கா:

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு பதிலளிக்கையில், 

அமைச்சர் ஜெயகுமாரின் கருத்தே என்னுடைய கருத்து என பதிலளித்தார். முதலமைச்சர்.

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. இதனை சீர்குலைக்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தேர்தலில் அரசு அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்று உள்ளது. 

தேர்தல் அலுவலர்கள் அனைத்து கட்சியின் முகவர்கள் முன்னிலையில் வாக்குகளை எண்ணியுள்ளனர். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை.  

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 

இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.