நாட்டில் வேலைஇல்லாத் திண்டாட்டம் அதிகரித்தால் இளைஞர்கள் கொதித்தெழுவார்கள்: ப.சிதம்பரம் எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020 16:33

புதுடில்லி,

நாட்டில் தொடர்ந்து வேலைவாய்ப்பின்மை அதிகரித்து, வருவாய் குறைந்து வந்தால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கோபத்தில் கொதித்தெழுவார்கள் என முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மத்திய அரசை இன்று எச்சரித்துள்ளார்

இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து மத்திய அரசை கடுமையாக சாடி ப.சிதம்பரம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான விஷயம்.

இந்த சூழ்நிலையில் நாட்டில் வேலைவாய்ப்புகளும் வருவாயும் குறைந்தால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கொதித்தெழுவார்கள்.

நாட்டில் சில்லறை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று அரசு வெளியிட்ட தகவலின் படி உணவு பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சில்லறை பணவீக்கம் ஒரேயடியாக 7.35 சதவீதமாக ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு மோடி அரசு துவங்கிய போது சில்லறை பணவீக்கம் 7.39 சதவீதமாக இருந்தது. தற்போது 7.35 சதவீதமாக உள்ளது. மத்திய அரசின் மோசமான நிதி நிர்வாகம் தான் இதற்கு காரணம் என ப.சிதம்பரம் சாடினார்.

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் வெறும் 2.11 சதவீதமாக இருந்தது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 5.54 சதவீதமாக ஆக அதிகரித்தது.