மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் உயர்வு

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020 15:30

புதுடெல்லி

   மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் கடந்த ஆண்டு 2019  டிசம்பர் மாதத்தில் 2.59 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை அதிகரித்ததே காரணம் ஆகும். டிசம்பருக்கு முந்திய நவம்பரில் இது 0.58 சதவீதமாகக இருந்தது.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதே மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்க விகிதம் 3.46  சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உணவு பொருட்கள் விலை 2019 டிசம்பர் மாதத்தில் 13.12 சதவீதம் அதிகரித்தது. சென்ற நவம்பர் மாதத்தில் விலை உயர்வு 11 சதவீதமாக இருந்தது.

உணவு வகையைச் சேராத பொருட்கள் விலை 7.72 சதவீதமாக அதிகரித்தது. ஒரு மாதம் முன்னதாக நவம்பர் மாதத்தில் பொருள்களின் விலை உயர்வு 1.93 சதவீதமாக இருந்தது. வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட புள்ளி விவரங்களில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உணவுப் பொருள்களில் காய்கறிகள் விலை 69.69 சதவீதம் உயர்ந்தது. வெங்காயம் விலை 455.83 சதவீதம் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து உருளைக்கிழங்கு 44.97 சதவீதமாக உயர்ந்தது.

சில்லறை விலையை பணவீக்கம்

கடந்த 5 ஆண்டு இல்லாத அளவுக்கு சில்லரை விலையை அடிப்படையாகக் கொண்ட பணவீக்க அளவு 2019 ஆண்டு டிசம்பர் மாதத்தில் 7.35 சதவீதமாக உயர்ந்தது. இதற்கு உணவு பொருட்கள் விலை அதிகரித்ததே முக்கிய காரணம் ஆகும்.